செவ்வாய், 24 ஏப்ரல், 2012

நானெனும் ஓரலை..

ஆண்டுகளாய் வாழ்ந்தின்று
அடி பெயர்ந்து வீழ்ந்துள்ள
நீண்ட பெருமரத்தின்
நினைப்பில் படாதின்னும்
உயிர் தக்கவைத்துள்ள
ஓர் கிளையின் இளந்தளிர்
நான்

ஆழ்ந்தடங்கிப் போயுள்ள
அடரிரவில் எங்கேயோ
பாழ்விதியை நொந்தழுது
பதைபதைப்பிற் கூவுகின்ற
பறவைக் குரலலையின்
படபடக்கும் ஓரிழை
நான்

முட்டுகின்ற தொடுவான
முடிவிலிருந் தெழும்புகின்ற
வட்டச் சூரியனில்
வழிகின்ற விடியலின் மேல்
பட்டுவிட எத்தனித்துப்
பறக்கின்ற ஓரலை
நான்

எதற்குள்ளோ எங்கோ
எப்போதோ இட்ட முட்டை
அதற்கான காலத்தில்
அவிழ்ந் துயிர்க்கும் அந்நாளும்
எப்போது வருமென்று
எண்ணி அந்த வானத்தைத்
தப்பாமற் தினமேங்கித் தவிப்போடு பார்த்தபடி
அப்பாலே கடலில்
அசைகின்ற ஆமையைப் போல்
இப்பாலே காத்திருந்து
இயங்குகிற ஓர் மனம்
நான்..

தேற்றும் நினைவுகளின் தோற்றம்..

ஓட்டுக்குள் நத்தை போல்
ஒழித்திருந்த உன் நெஞ்சம்
பாட்டமாய்ப் பெய்கின்ற
பருவ மழை ஈரத்தில்
மூசித் தீப்பிடித்து
மூச்செல்லாம் மோக அலை
வீசி அடித்துள்ளே
விண் கூவ, விரக மணம்
நாசிக்குள் படர்தெங்கும்
நனைக்க, என் மனசின்
வீட்டுக்குள் மெல்ல
விரைந்தூரத் தொடங்குதடி

உந்தனது மன ஆசை
ஊர்ந்து வரும் வழியெங்கும்
சிந்துதடி வீணீராய் இழுபட்டு
சிலிர்த்த மன
எண்ணச் சுவர்தனில் நீ
ஏறுகையில் ஈரலிப்பு
திண்மைக் கர்வத்தின்
தீராத வெம்மையினை
தண்மைப் படுத்தித்
தணிக்குதடி, நாடிகளை

கவ்விக் கவ்வி நீ
கடக்கையிலே சூடாக
இவ்வளவும் இருந்த
ஏதேதோ கோபமெல்லாம்
அவ்வளவு அழுக்கும்
அகன்று குளிராகி
தவ்வுகின்ற குழந்தை போல்
தவழுதடி உன் முன்னே

உணர் கொம்பை நீட்டி
உண்மை மனசு தனை
உணர்ந்திட்ட உன் நெஞ்ச
உறவின் நினைவலைகள்
என்றைக்கு மீண்டும்
ஏறும் முருங்கை மரம்?
என்றைக்குத் தன்னை
இழுத்தடக்கும் ஓட்டுள்ளே?

என்றைக்கு என்னால்
உனையறிய முடிகிறதோ
அன்றைக்கே நானுலகை
அறிவேன், அதுவரையில்
சென்று வா நினைவே
சீக்கிரமாய், என் எழுத்து
நின்று விட வேண்டாமா
நிலைத்து..

உரமாக்கப் போகின்றாய் உனக்கு..

உன்னினைவுப் பார்வையினில்
ஒழிப்பதற்காய் விரைவாக
என்னால் இயன்றளவும்
இழுத்தோடி தெருத்தெருவாய்
பாய்ந்து கடந்து படபடக்கப்
பதுங்கி மெல்ல
எனைத் தொடர்ந்த படியா நீ
இன்னும் வருகின்றாய்
எனத் திரும்பிப் பார்த்தால்
என் முதுகின் பின் அப்படியே
பார்த்தபடி தொடர்கின்ற
பாழ் நிலவினைப் போல்
வேர்வை மணம் சொட்ட
விம்மலுடன் உடல் சிதைந்து
படிம உருவாக என் முன்னே
படர்ந்து, நானும்
ஊரைத் தேசத்தை
உப கண்டம், கண்டத்தை
ஓடிக் கடந்தும்
ஒற்றன் போல் என் பின்னால்
தேடி வருகின்ற என்
தேசப் பளிங்கே பார்..!

தூரம் கடந்தோடத்
துடிப்பின்னும் கூடுவதை
ஆரிதயம் இப்படியாய்
அடிக்கிறது? நெஞ்செரிந்து
ஊரெரிந்த வெக்கை
உள்ளே கொதிக்கிறதே
என் பின்னால் ஓடி நீ
இவ்வளவும் வந்து விட்ட
களைப்பா இப்படியாய்
கடகடென்று அடிக்கிறது
ஒருவேளை
உன் துடிப்பா என்னுள்
ஒலிக்கிறது இல்லையெனில்
என் துடிப்பா உன்னுள்
ஏனெனிலோ துடிப்புகளுள்

கையறு நிலையில்
கையறுந்து வீழ் நிலையின்
ஒப்பாரி கூச்சல்
உடைந்தலறி விழுகின்ற
உயிர் கதறும் ஓசை
உஸ்ணப் பெரு மூச்சு
வார்த்தைகளில் வர முடியா
வதையின் கொடுமைகளை
கையிரெண்டால் மண்ணள்ளிக்
கசக்கி முனகுகின்ற
காதுச் சவ்வறுந்து
கலங்கடிக்கும் ஈனஸ்வரம்
நெஞ்சின் செவிப்பறையில்
நெருப்பூற்றி கருக்கிறதே
காலிரெண்டும் நடுங்க
கட்டறுந்த கை நரம்பு
ஓலத்தில் உதறுகின்ற
உயிர் வதையைத் தாங்காமல்
நெஞ்சு முடி பிய்த்து
நெடுஞ்சாணாய் வீழ்கிறதே

ஒற்றைக் காலூன்றிச்
சிவர் மேலே சாய்ந்து நின்று
உள்ளிழுத்துப் புகையை
ஊதி, பெண்களினை
ஓரத்தால் பார்க்கின்ற
ஊன் தேவை அறுந்தின்று
பால் வேறு பாடெரிந்து
படர்கிறதே பார்வைகளும்
என்னைக் கடக்கின்ற
எவரேனும் எனக்கிப்போ
ஓர் நிழல் உருவாய்த் தான்
உள்ளே தெரிகின்றார்
பைத்தியமா எனக்கென்று
பார்க்காதே என் மண்ணே!
உந்தனது நடையின்
ஒவ்வோர் அடி வைப்பும்
எந்தனது காலுக்குள்
இப்பொழுதும் அதிர்க்கிறது

உன்னைப் பிரிந்தென்று
ஓரடியை வேற்றிந்த
மண்ணில் நான் வந்து
மரித்துப் போய் வைத்தேனோ
அன்றிருந்து உறவெல்லாம்
அறுந்தறுந்து ஒவ்வொன்றாய்
என்னைத் தனியாக
எறிந்து விட்டுப் போகிறது
முதல் வீழ்ச்சி கொஞ்சம்
மூச்சடங்க வைத்தாலும்
அதுவே அடிக்கடியும்
ஆவதனால் பழகிப் போய்
பொது வாழ்வே எனக்குப்
பொருத்தமென்று ஆகிறது

மரமெனில் நிழலாய்
மனமெனில் நினைவாய்
கரமெனில் விரலாய்
கவியெனில் பொருளாய்
புகலிட மண் பனிப்
புகையாய் என் முனே
பூத்து மணக்குமென்
பூர்வீக தேசமே!
மரமாகப் போகுமென்
மனந்தனை மாற்றி நீ
உரமாக்கப் போகிறாய்
உனக்கு..

நிசம் உணர்ந்தணிந்த நெருப்பாடை..

நீறாவாய் என அறிந்தே
நெருப்பாடை தனை அணிந்தாய்
மாறாமல் நீள்கின்ற
மண்ணின் விதி இதனால்
தேறி விடும் எம்
திசையெங்கும் ஒளி சுடரும்
பாறி அடியோடு
படுகுழியில் வீழ்ந்துள்ள
விடியல், உனையெரித்தால்
வெளிக்கும் என உணர்ந்தே
வாழ்வை வசந்தத்தை
வழிந்தூறும் காதலினை
ஊழ்வினை எனச் சொல்லி
ஒதுக்கி குழந்தைகட்காய்
தகிக்கும் என் அறிந்தும்
தரித்தா யிவ்வாடையினை

என்றோ ஓர் நாளில்
எமக்கான கிழக்குதிக்கும்
அன்றைக்கு, அதன் முன்னே
ஆருயிரை நீ துறந்து
சென்றிடலாம், வெற்றிச்
சிறப்பதனைக் காண்பதன் முன்
கண் மூடி உன் காலம்
காலம் ஆயிடலாம்
என்றறிந்தும் எதற்காக
இதைத் தரித்தாய்? மகிழ்வாக
ஓடைக் குளிர்மலரின்
உணர்வொத்த ஆடைகளை
உன்னுடைய சந்ததிகள்
உடுக்கட்டும் எனத்தானே!

காலி முகத்திடலின்
கடற்கரையில், பூங்காவில்
வேலிக்கரையோரத்தில்
வீட்டிற்குப் பின் புறத்தில்
காது மடலுரசி
கன்னத்தை நனைய வைத்து
பாதி விழி செருகப்
பார்த்து இரு விரலால்
முதுகூசி தன்னை
முனகலுக்குள் கழற்றி விட்டு
எதுவோ சாதித்த
இறுமாப்பில் பல்லிளித்து
சுதி வாழ்வை உந்தனுக்கும்
சுகித்துவிடத் தெரியாதா?

வெடித்த குண்டுகளின்
வீச்சில் சிதறிப் போய்
துடித்துக் கொண்டிருக்கும்
துண்டுத் தசைகளிடை
சாதியினை மட்டும்
சரியாகப் பிரித்தெடுத்து
நாலு சொல்லு
பெண்ணியத்தை அதற்குள்
பிரட்டிக் குழைத்து விட்டு
மாற்றுக் கருத்தாளன்
என்கின்ற மறைப்புக்குள்
மாற்றானின் திட்டத்தை
மறைத்து மேட்டிமையில்
ஏட்டில் சுரக்காயென்றெழுதி
இது எங்கள்
நாட்டுக்குரிய நல்ல கறி
என்று சொல்லி
ஓட்டத் தெரியாதா
உந்தனுக்கும் வாழ்வதனை?

வாழ்வதற்கு உனக்கிங்கே
வழி இருந்தும் அதற்கான
வாழும் முறை தெரிந்தும்
வளையாமல் உன் வாழ்வை
சுளையாக இம் மண்ணின்
சுக விடிவுக்காகவென்று
பிழைக்காய் என அறிந்தும்
பெருங்கொடையாய்த் தந்து சென்றாய்

கழுத்தில் நஞ்சணிந்த சிவனாய்
களத்தில் நீ
எழுதி விட்டுச் சென்றதிங்கே
ஏராளம், சுய விருப்பில்
நெருப்பாடை தன்னை
நீயணிந்து கொள்ளவில்லை
உருப்படா நீசர்கள்
உனையணிய வைத்தார்கள்
கொம்புக்கு மண்ணெடுக்கும்
குணமில்லை உந்தனுக்கு
அம்புக்கு எதிரம்பு
அடித்தாய் அவ்வளவே

உன்னுடைய காலத்துள்
உய்யும் என எண்ணி
உன்னாலியன்ற வரை
உழைத்தாய் ஆனாலும்
தன்னுடைய காலமின்னும்
தாண்டவில்லை காலத் தீ
அடுத்து வரும் சந்ததியின்
அழகொழுகும் மேனிகளில்
உடுத்தி விட நினைக்கிறது
உன் உடையை, அவர்களுக்கும்
அதையணிந்து செல்வதற்கு
ஆசையில்லை, எதிரிகளாய்
அதையணிய வைத்தால்
அவர்களுந்தான் என்ன செய்வார்...?

கண்ணாடி முன்னின்று கதைத்தல்..

உனைச் சுற்றி இருந்தோர்கள்
ஒவ்வொருவராய் மெல்ல
தனக்கான வேளை வந்துவிட சிரித்தபடி
தலையாட்டி விடைபெற்றுப் போய்விடவும்
இப்போதில்
நீயும்,கவிதைகளும் நெடுமூச்சு வளர்கின்ற
நினைவுகளும் மட்டும் எஞ்சிக்கிடக்கின்றீர்

எல்லோரும் போய் உன்னை
ஓர் புறத்தில் தனியாக
சொல்லாட விட்டு விடும்
சுகம் உனக்கும் பிடிக்கும் தான்

எதை நினைத்துக் கொண்டிப்போ
இருக்கின்றாய் என்பதுவோ
இதையிப்போ ஏன் நினைத்தாய்
என்பதுவோ இப்போதில்
உந்தனுக்கு ஏனோ ஒன்றும் புரிவதில்லை

எதுவோ ஒன்றை நீ
எண்ணுதற்குள் விரைவாக
அது உன்னைக் கடந்து
அப்பாலே செல்கிறது

எதற்காக நீ இப்போ
இரங்குகிறாய் என்பதுவோ
எதற்காகச் சிரிக்கின்றாய்
இடிகின்றாய் என்பதுவோ
உனக்கிப்போ ஒன்றும்
உறைப்பதில்லை, உன்னுடைய
கவலைதானென்ன? ஏன்
கலங்குகிறாய் என்பதுவும்
உனக்கே நிசமாக
ஒன்றும் தெரியாது

கண்கள் நிலைக்குத்தி
ககனத்தில் அலைகிறது
உன்னிதயத் துடிப்பை நீ
உணருகிறாய், தலைகோதும்
அன்பான ஓர் வார்த்தை
ஆறுதலாய்ச் சாய்ந்து விட்டு
தெம்பாக எழுந்திருக்கத்
தெய்வீக மடி ஒன்று
என்பாலும் வாராதா
என்றெண்ண அலைஅலையாய்
தன் பாலம் கடந்தவையும்
தாண்டி எங்கோ போகிறது

வெடித்தது போலுள்ளே
வீணிதயம் வலித்தாலும்
உடைந்து விடாதென்ற
உறுதி உனக்குள்ளே

உனக்கான ஓர் நாடு
உயிர் நீத்த வீரர்கள்
தனக்கான வாழ்வைத்
தவிர்த்து அவர் கொடுத்த
விலைகள், அதற்கின்னும்
விடையில்லை என்பதுவும்
உலைபோல ஒரு பக்கம்
உருகிக் கொதிக்கையில் நீ
மலை உடைந்து வீழ்வது போல்
மனம் வீழ்வாய், உனக்கிப்போ

வழங்கப்பட்டுள்ள வாழ்வினையும்
நீ கண்ட
வலிகள் நிறைந்தூறும்
வழிகளையும் என்னாலே
வாழ்க்கை என்ற சொல்லாலே
வரைந்து விட முடியவில்லை
வாழ்க்கை என்கின்ற
வலிமை நிறை சொல்லுக்குள்
போக்கறுந்த உன் வாழ்வு
பொருந்தாது ஆதலினால்

உன் போக்கைச் சொல்லுதற்கு
உரிய தகு சொல்லொன்றை
எனக்கான மொழியெங்கும்
இயன்றவரை தேடுகிறேன்
எப்படியும்
வார்த்தையை வனைந்தெடுத்து
வருவேன் அதற்குள் நீ
சோர்ந்துந்தன் ஆயுளுக்குச்
சோரம் போய் வீழாதே
சேர்ந்து வருவேன் நான்
சிந்தாதே அது மட்டும்
ஊர்ந்து போகும் உன்
உயிரை விரைவாக
ஓடிப் போவதற்குத் தூண்டாதே
வருவேன் நான்..

மனத்தின் பயணம்..

சாகாவரை மனதிற்
சஞ்சலங்கள் சஞ்சரிக்கும்
போகாது உயிரின் முன் புறப்பட்டு
நோகாமல்
இருந்தால் மனமில்லை அதன் பெயரும்
விட்டு விடு
வருந்திப் பின் வழிக்கு வரும்

வரும் நேரம் வாழ்க்கை
வசந்தத்தின் சாவிதனைத்
தருமென்று எண்ணிடுதல் தவறு
உருவழிந்து
வந்த தடம் கூட வழிகளிலே
இருக்காது
இந்த நிமிடந்தான் இனி

இனிக்காலம் எம்மை
எம்மை எதற்கும் தயாராக
தனிக்காட்டின் நடுவிற் தள்ளி விடும்
நுனிப் புல்லில்
பனித் துளியாய் வாழ்வு பழகி விடும்
தன் வாழ்வை
தனித்துணையாய் கொண்டு தான்

தானென்ற தன்மை
தாண்டு விட இவ்வருகை
ஏனென்ற கேள்வி எழுகையிலே
வானென்ற
அகண்டவெளி வீடாகும்
ஆகும் மனமது போல்
இகம் பரமொன்றாகும் இதம்

இதத்தை இன்மையினை
எதனையுமே உணராத
பதத்தில் மனமான பருத்திப் பூ
மிதந்தபடி
வெளிக்கப்பால் வெளிகடந்து விரைய
அன்பென்ற
ஒளிக்கப்பல் உனையேற்றும் உள்

உள்ளே ஒளி கசிய
உணர்வெழுந்த சித்தார்த்தன்
தள்ளி அரியணையைத்
தவிர்த்தான் தான் ஆனாலும்
அரசவையின் பொறுப்பை
அதன் சுவையை உணர்ந்திட முன்
தெரிந்தவன் சொல்லி வைத்த
தெளிவான சொல்லை விட

ஆண்டு அனுபவித்து
அதன் சுவையை உணர்ந்து வெற்றி
பூண்ட பின்பும் அதைப்
புறந்தள்ளிப் போட்டு விட்டு
பேசாமற் சென்று விட்ட
பேரரசன் அசோகனவன்
பேசாத வார்த்தைகளே
பேருண்மை வழியாகி
ஓருண்மையாய் உள்ளே
ஒளிரும்..

சனி, 21 ஏப்ரல், 2012

சன்னம் வரைகிற வட்டம்..


விரலொன்று விசை ஒன்றைத் தட்ட
விர் என்று
விரைகின்ற குண்டொன்று மார்பொன்றை
துளைத்துப் பாய்கின்ற
துவாரத்தின் வட்டத்துள்
ஓர் வாழ்வு மட்டுமா
உடைந்து போய்க் கிடக்கிறது..?

பெயரற்றுக் கிடக்கின்ற
பிள்ளையைப் பெற்றவளை
பெயர் சொல்லப் பெற்ற
பெற்றவரின் பெருங்கனவும்,
கையொன்றில் அவளைக்
கவனமாய்ச் சேர்க்கும் வரை
கண் துஞ்சாதவர் உழைத்த
கடின உழைப்பதுவும்,
அதன் பின்னவழும் தன்
அன்பான துணையோடு
வாழ்ந்துணர்ந் தனுபவித்த
வசந்த காலங்களும்,
அழகிழந்து போனாலும்
அது தான் தன் அழகென்று
உள மகிழ்ந்து இவனும் உள்
உதைக்கச் சுமந்ததுவும்,

பெறப்பட்ட பாடும்
பின்னே வளர்ப்பதற்கு
இரவுத் தூக்கத்தை
இழந்ததுவும், அனுதினமும்
தசை வளர்வைப் பார்க்க
தவித்த மகிழ்வதுவும்,
தனக்கு மேல் வளர்ந்து
தளிர்க்க, மாப்பிளையாய்
மனக் கண்ணால் பார்த்து
மகிழ்ந்ததுவும், எல்லாமே

ஓர் குண்டு பாய்ந்து
உள் நுளைந்து சென்று விட்ட
மார்பின் வட்டத் துவாரத்துள்
மரித்துப் போய்
அர்த்த மற்ற ஒன்றாகி
அலறித் துடித்த படி
பெரும் புண்ணாய் மார்பில்
பிளந்த வட்டக் கரை மேலே
அலைந்து அதைச் சுற்றி
அனுங்கித் திரிகின்ற
ஈக்களைப் போல
இவருலகும் அதைச்சுற்றி
சாக்களை கொண்டதிலே
சரிகிறது, இதுவெல்லாம்

விசையழுத்தும் அந்த
விரல்களுக்குப் புரியாதோ
ஒரு வேளை
மூளையும் மனமதுவும்
முழுதாகத் தூங்குகிற
வேளையைப் பார்த்துத் தான்
விரல் விளையாடுகுதோ?

இன்னொன்று

வீழ்ந்த இவன் இனிமேல்
விழிக்கான் என்றறியாமல்
விளையாடித் திரிகின்ற
இவன் குழந்தை ஓரத்தில்
ஆழ்ந்த பெரு மூச்சோடு
அழுவோரைப் பார்த்த படி
அனாதை என்கின்ற
அநாதரவு வட்டத்தை
தானறியாமலேயே
தனைச் சுற்றி வரைந்த படி
எனைச் சுற்றிச் செல்கிறது
என்பதனை இப்போதில்
இதிலே எழுதிவிட
இயலவில்லை என்னாலே..

இருப்பேன் நான் இறந்து போகேன்..

வார்த்தைக் கைகளினால்
வளமாக என்காலை
சேர்த்துப் பிடித்தெந்தன்
சித்தம் மனமெல்லாம்
நீர்த்துப் போம்படியாய்
நினைவறுந்து விழும் வரைக்கும்
துணியொன்றைத் தூக்கி
துவைப்பதற்கு அடிப்பது போல்
எந்தன்பைத் தூக்கி
இயன்றவரை பலம் சேர்த்து
உறவுக் கல் நடுவே
ஓர் வெடிப்பு விழும் படியாய்
கரவுத் தோள் சுழற்றி அடி
கலங்கேன் நான்

பொத்தல்களாய் நான்
போய்விடுவேன் என்றுந்தன்
சித்தத்தில் யாரோ
சீற வைத்த விடப்பாம்பின்
நச்சுப் பற்களினால்
நானான கீரியினை
உச்சத் தந்திரத்தால்
ஓங்கி அடி, அப்போதும்
காலமெனும் மூலிகையில்
கால் பிரட்டி உருண்டு விட்டு
வேழம் போலெழுந்து நிற்பேன்
வீழ்ந்து விடேன்

என்னுடைய உயிரணுவில்
இருந்துதித்த சூரியனை
உன்னுடைய வைக்கோலுள்
ஒழித்துவைக்கப் பார்க்காதே
தன்னுடைய காலம்
தளிர்த்து வர அது எழுந்து
தான் வந்த மூலத்தைத்
தேடும், கோபத்தில்
ஏனென்று கேட்டுன்னை
இருட்டுக்குள் போட்டெரிக்கும்
உன்னுடைய கள்ளத்தை
உரிக்கும், தன் கதிரால்

என்னுடைய கவி மனசின்
இயல்பறியும், புரிகையிலே
விண்ணுயர எழுந்தெங்கும்
வியாபிக்கும் எந்தனது
இருப்பு நீரூற்றாய்
எழுந்து நிறைந்தோட
உருப் பெற்றுயிக்குமென்
ஒண் கவிகள் இறவாத
வரம்பில்லாக் கால
வானத்தை வடிவமைக்கும்

நரம்பறுந்து நாடி வீழ்ந்தன்று
நாதியற்று
வரம் தர வேண்டி
வருவாய் நீ அன்றைக்கு
பரம் இகம் தெரியாப்
பக்குவத்தில் நானிருப்பேன்
உருக்குலைந்த உறவை
ஒட்டுகின்ற மனசென்னுள்
எரிந்தவிந்து போயிருக்கும்
என்பதனால் உன் பின்னால்
திரும்பி வர மாட்டேன்
திரும்பி நீ பார்க்கின்ற
திசையெல்லாம் ஒளி சிந்தும்
திசையாவேன் ஊழிவரை
இசை சொட்டும் பாட்டாக
இருப்பேன் இறந்து விடேன்..

நமக்கான விதி நதிக்கும்..

எங்கேயோ நிகழும்
ஏதோவோர் சேர்க்கையினால்
இங்கே வந்திறங்கி
இழுபட்டு இறுதி வரை
ஓயாமல் ஓடி
ஓர் நாள் முடிகையிலே
கடந்த பாதைகளும்
கனவுகளும், நினைவுகளும்
உடன் வராமலேயே
ஒன்றுமற்றுப் பேரிழந்து
வேறொன்றாகும்
விதி ஒன்றே இப்பாரில்
வேறொன்றே இல்லாத
விதியாய், நிரந்தரமாய்
நமக்கென்றும்
நதிக்கென்றும் நல்கியது,
அப்படியே
நதிக்கான வாழ்வும்
நம் வாழும் ஒன்றே தான்

ஒரு சிறிய முளையாக
ஒவ்வோர் துளியாக
கரு அசையும் படியாக
கசிந்தூரும் வடிவாக
உரு பின்னர் எப்படியாய்
உருவாகப் போகுதென்று
தெரியாத நிலையிற் தான்
திசையின்றி அவராகத்
தெரியாத வாழ்வொன்று
தெரிவாகும், பயணங்கள்
உடல் பிரட்டி மெல்ல
உருண்டு, தவண்டோடி
மடலொத்த பாதங்கள்
மண் தொட்டுத் தத்தி
முடிவிடத்தைத் தூரத்தை
முற்றிலுமே அறியாமல்
அடியெடுத்து வைக்கும்
அறியாத பயணத்தில்,

ஓடும் வழி இதுவென்று
ஒரு போதும் இருவருமே
கோடொன்றைப் போட்டந்தக்
குறிப்பு வழி செல்வதில்லை
கட்டிக் காவிவந்த
கனவுகளின் மூட்டை எல்லாம்
முட்டி எதிர் மோதும்
முரட்டு வழித் தடைகளிலே
தட்டுப்பட் டொவ்வொன்றாய்த்
தவறி விழும்,வீழந்தவைகள்
திட்டுகளாய் அதிலேயே
தேங்கி உலர்ந்து விடும்

எஞ்சி இருப்பவற்றை
இயன்றவரை மோதாமல்
அஞ்சுவதாய்க் காட்டாமல்
அஞ்சி, தடைகளின் மேல்
பட்டும் படாமலுக்குப்
பக்குவமாய் மெதுவாக
வேகத்தைக் குறைத்து
விலத்தி, கரைகாணும்
மோகம் தருகின்ற
முனைப்பில் இன்னமுமே
தெரியாத முடிவிடத்தின்
திக்கை அறியாமல்
புரியாத பாதை வழி
போகின்றோம்,இறுதியிலே

இந்த இடத்தை நாம்
எட்டுதற்கா இவ்வளவும்
நொந்து வழி நெடுக
நொடிந்தோம் எனுமெண்ணம்
கண்ணுள் இமைப்பதற்குள்
கரைந்து நாம் வேறொன்றாய்
மண் வாழ்வை விட்டெங்கோ
மறைவோம், அதன் பின்னே
வந்த வழித்தடத்தில்
வரலாறில் எம்பெயர்கள்
எந்தப் புகழ்த் தூசாய்
எழுந்தாலும் அது எங்கள்
கண்களிலே விழுமோ
கலங்கத்தான் வைத்திடுமோ
எண்ணச் சுவாசத்தில்
ஏறிப் புரக்கடித்திடுமோ
ஒரு மண்ணும் மிஞ்சாத
உயிர் வாழ்க்கை பூமியிலே
நமக்குத்தான் மட்டுமல்ல
நதிக்கும் தான்...

இது நடக்கும்..

தமக்கென்றோர் மொழி
தமக்கென்றோர் கலாச்சாரம்
தமக்கென்றோர் வாழ்வு முறை
தன்னை வடிவமைத்து
தன் போக்கில் வாழ்கின்ற
இனக் குழுமம் ஒன்றை
இடையிட்டுப் பெருகிவந்த
இன்னோர் இனம் வந்து
இடித்துத் தன் காலுள்
கண் முன்னே போட்டுக்
கதறக் கொழுத்தையிலே
அமுக்கம் தாளாமல்
அதை எதிர்க்க அவ்வினத்தின்
உள்ளே இருந்தொருவன்
எழுதல் உலக விதி
அவனின் பின்
முழு இனம் திரண்டு
மூச்சைக் கொடுத்திடுதல்
எழப் போகும் ஓரினத்தின்
இருப்பின் வரலாறு

நீண்ட போராட்ட
நெடு வெளியில் மண்ணுக்காய்
மாண்ட வீரர்கள்
மன வலிமை ஓர்மத்தை
தூண்ட, துவளாமல்
தொடர்கையிலே அவன் பற்றி
இடைவெளியில் மனம் சோர்ந்து
இடிந்தோர் விதையற்று
வடிக்கின்ற விமர்சனங்கள்
வாய் நாற்ற வீணீர் தான்
தவிர்க்கேலாதெனினும் ஓர்
தடையல்ல, படிக்கற்கள்
இதையெல்லாம் தாண்டியவன்
எடுத்தாண்டு நகர்கையிலே
இடைவெளியில் ஏதேனும்
இடர்கள் நேர்ந்திடலாம்
விடை கூடச் சொல்லாமல்
விம்பம் மறைந்திடலாம்
உடைந்துருகிச் சிலகாலம்
ஒடுங்கிடலாம் அவன் படைகள்

ஆனால்
நாடென்றால் இது தான்
நாமிதனை அடைவதற்கு
நாடிய வழிமுறைகள்
நம்பிக்கை இவைகள் தான்
தேடி உலகெல்லாம்
திரிந்தாலும் இறுதியிற் கை
கூடும் வழி இது தான்
என்கின்ற குறிப்பெங்கள்
நாடி நரம்புகளில்
நாளாந்தம் வளர்தசையில்
ஓடித் திரிகிறது உள்ளே,
அவன் இருப்பு
இறுகிய பாறை அல்ல
இயங்காமல் இருப்பதற்கு
திறந்த குபுகுபுக்கும்
நீரூற்று, அதிற் தோய்ந்த
சிறந்த மன வேர்கள்
சிந்தனைகள் எல்லாமே
உகந்த ஓர் நாளில்
ஒன்றாகும் அன்றைக்கு
திறந்த வானிருந்து
வருவது போலொருவன்
பிறந்து வருவது போல் வருவான்
அவனடுத்த
படை நடத்திச் செல்வான்
பார்த்துணர்ந்த மாதிரி யை
உடைய வழியாலே
ஒழுங்கமைப்பான் அவனொன்றும்
வேற்றுக் கிரகத்தின்வாசியல்ல
விழிப்படைந்த
நேற்றுவரை எம்மோடு
நிமிர்ந்து தோள் கொடுத்த
நம்முள் ஒருவன் தான்
நமக்காக வாழ்பவன் தான்

காலம் அவன் பெயரைக்
கட்டமைக்கும், அவனுடைய
வானத்தில் நிற்பதற்கு
வடிவமைத்த அவன் மேகம்
கானகப் பரப்பினைக்
கடக்கும், ஓர் நாளில்
நாமெல்லாம் அதனை
நம்தேச மேகம் தான்
ஓம் என்று சொல்லி
ஒன்றாய்க் கை கோர்க்கையிலே
மேகம் திறந்து
விடியல் மழை பொழிந்தெங்கள்
தாகம் தணிந்து தளிர்க்கும்
இது நடக்கும்..