பனங்கொட்டையைப் புதைத்தவன்
அதன் நுங்கை
பேரனின் நாவில் சுவைக்கிறான்.
அவன் சாம்பல்
அம்மரத்தின் வேர்களில்
உறைகிறது.
பிடுங்கி
மறுவயலில் ஊன்றிய நாற்றே
கதிர் முற்றிக் குனிகிறது.
அதன் நெல்
அது முளைத்த பாத்திக்கே
விதையாகத் திரும்புகிறது.
எள்ளுப்பேத்தி வண்ணத்துப்பூச்சி
மூன்று நாடுகள் கடந்து
முன்னோர் பிரிந்த கிளையிலேயே
வந்தமர்கிறது.
அந்நாளிற் தான்
பனங்கூடற் சிற்றூர்கள்
தம் போனவர்களுக்குக்
கதவு திறக்கின்றன..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக