சனி, 3 அக்டோபர், 2026

எழுதப்பட்ட வாழ்வு..

​நாம் பிறப்பதற்கு முன்

யாரும் நம்மிடம்

ஒரு வரைபடத்தை விரிக்கவில்லை.


இந்தக் கடலின் அருகே பிறக்க விரும்புகிறாயா,

இந்த மொழியின் உப்பை

நாவில் சுமக்க விரும்புகிறாயா,

இந்தத் தீவின் ஒரு தெருவில்

உன் முதல் நிழலை விட்டுச் செல்ல விரும்புகிறாயா என்று

எந்தக் கடவுளும் கேட்டதில்லை.


ஒரு வீட்டின் கூரையில்

மழை விழுந்துகொண்டிருந்தது.

அவ்வளவுதான்.


அந்தச் சத்தத்தையே

உலகத்தின் நிரந்தர இசையென்று நம்பி

நாம் வளர்ந்தோம்.


முற்றத்து மரம்,

அம்மாவின் பாத்திரங்கள்,

அப்பாவின் இருமல்,

கிணற்றருகே காய்ந்த துணிகள்.

இவையெல்லாம்

மரணத்தைவிட நிரந்தரமானவை என்று

ஒரு குழந்தை நம்புவது போல

நாமும் நம்பினோம்.


பிறகொரு நாள்

வரைபடம் தன் தோலை மாற்றியது.

நாம் அறிந்த சாலைகள்

நம்மை அறியாதவைகளாகின.

கதவுகளுக்குப் பூட்டுகள் வந்தன.

பெயர்களுக்கு விசாரணைகள் வந்தன.


அப்போது தெரிந்தது

மனிதன் ஒரு மரமல்ல.

அவனை வேருடன் பிடுங்கலாம்.

மண்ணை அவனிடமிருந்து பிரிக்கலாம்.


மொழியை மட்டும்

நாக்குக்குக் கீழே 

சிறு நெருப்பாக மறைத்துக்கொண்டு

அவன் ஏழு கடல்களையும் கடக்கலாம்.


நாம் புறப்பட்ட நாளில்

வீட்டின் கதவு

எதுவும் சொல்லவில்லை.


ஒருவேளை அது அழுதிருந்தால்

நாம் திரும்பிப் போயிருக்கக்கூடும்.

ஆனால் அது அமைதியாக இருந்தது.

அந்த அமைதியை

எம்மாலின்னும் திறக்க முடியவில்லை.


வாழ்நாள் முழுவதும்

யாருடன் இருப்போம் என்று நினைத்தோமோ

ஒருநாள் அவர்கள்

நமது தொலைபேசியின் 

பழைய எண்ணாகிவிடுகிறார்கள்.


நம் மூச்சின் அருகே தூங்கியவர்கள்

வேறொரு நகரத்தின் 

வானிலையாகிறார்கள்.


ஒருபோதும் சந்திக்கவே மாட்டோமென 

இருந்த சிலர்

ஒரு விமான நிலையத்தில்,

ஒரு வேலைக்கதவின் அருகில்,

வெளிநாட்டு மழையின் கீழ்

திடீரென்று நம் வாழ்க்கைக்குள் 

நடந்து வருகிறார்கள்.


அப்போது தெரிகிறது

தூரம்

மைல்களில் அளக்கப்படுவதில்லை.

சிலர் முப்பது ஆண்டுகள் அருகிலிருந்தும்

எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார்கள்.

சிலர் முப்பது நிமிடங்கள் பேசிவிட்டு

நமது குழந்தைப் பருவ அறைக்குள்

ஒரு விளக்கை ஏற்றிவிடுகிறார்கள்.


இப்படியே

தேர்ந்தெடுக்காத நகரங்களில்,

கனவிலும் உச்சரிக்காத தெருப்பெயர்களின் கீழ்

நாம் காலணிகளை வைக்கிறோம்.


முதலில்

சில வருடங்கள் என்கிறோம்.

பிறகு ஒரு நாற்காலி,

ஒரு படுக்கை, சில பாத்திரங்கள்

சுவரில் ஓர் ஆணி

அந்தச் சிறிய ஆணிதான்

புலம்பெயர்ந்தவனின் முதற் தோல்வி.


பிறகு

குழந்தைகள் வளர்கிறார்கள்.

நமது முகத்தில்

தந்தையின் முகம் ஏறிவருகிறது.

தலைமுடி

நாம் கவனிக்காத இரவுகளில்

தன் நிறத்தை விட்டுவிடுகிறது.


ஒருநாள் கண்ணாடியில்

நம்மைத் தேடிச் சென்று

வேறொருவரைச் சந்திக்கிறோம்.


இவ்வளவு சீக்கிரமா ? 

கண்ணாடி பதில் சொல்லாது.

அதற்கு

நமது வயது முன்பே தெரியும்.


ஒவ்வொரு மார்கழியிலும்

அடுத்த வருடத்தை

புதிய கதவாக நினைக்கிறோம்.


இந்த முறையேனும்

ஒரு நல்ல செய்தி வரும்

நோய் விலகும்,  வீடு திறக்கும்.

நாடு அழைக்கும், 

பழைய காயம்

தன் பெயரை மறந்துவிடும்.

இப்படியாய்

எண்ணிக் கொண்டிருக்கும் போதே 

வருடங்கள் பெரிய சத்தமின்றி

வீட்டை அப்படியே வைத்துவிட்டு

நம்மை மட்டும் எடுத்துச் சென்றுவிடும் 


நாம் எதிர்பார்த்த அதிசயம்

ஒருபோதும் வராமல் போகலாம்.

வானம் திறந்து

எந்தத் தெய்வமும்

நமது வாழ்க்கையின் தவறான வரியை

சிவப்பு மையால் திருத்தாமல் போகலாம்.


ஒரு வங்காள நாவலின்

பெயரற்ற மனிதனைப் போல

நாளாந்த வேலை, பிரிவுகள், நோய்,

இரண்டு மூன்று 

மறக்க முடியாத முகங்கள்,

பழைய புகைப்படங்கள் 

நிறைந்த ஒரு பெட்டி

இவற்றுடன்

நாமும் சாதாரணமாகவே 

முடிந்துபோகலாம்.


பெரிய விம்மலின்றி 

கூட்டமின்றி

அடுத்த வீட்டில்

யாரோ அரிசி கழுவிக்கொண்டிருக்கும்போது,

பேருந்து

வழக்கம்போல நகரத்தை விட்டு

புறப்படும்போது,

நமது மரணத்தை அறியாத ஒரு பறவை

எதிரே இருக்கும் மின்கம்பியில்

வந்து அமரும்போது

முற்றத்தின் ஒரு மூலையில்

யாரும் கவனிக்காமல்

ஒரு எறும்பு

காலடியில் நசுங்குவதுபோல

நாமும் போய்விடுவோம்.


அடிபட்டு உடைந்தவனின் வாழ்வில்

அதிசயங்கள் ஒரு போதும்

நிகழ்வதில்லை..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக