ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கடல் விலகிய பின்..

​உறவுகள் மழையோடு வருகின்றன,

கதவைத் தட்டாமல், காலணியைக் கழற்றாமல்

என் ரத்தத்தின் வெப்பத்தை 

அவை கற்றுக்கொள்கின்றன,

என் தட்டில் கை வைக்கின்றன,

என் தூக்கத்தின் 

ஒரு பாதியில் படுத்துக்கொள்கின்றன.


பிறகு ஒரு நாள் 

எந்த நாளென்று 

யாருக்கும் முன்கூட்டித் தெரிவதில்லை 

சாளரம் திறந்திருக்கும்,

கட்டில் குளிர்ந்திருக்கும்

தேநீர்க் கோப்பை வைத்த இடத்தில்

ஒரு வட்டம் மட்டும் மிச்சமிருக்கும்.


ஒருபோதும் பிரியமாட்டோமென்று 

நாம் சொன்ன வார்த்தைகளைக்

காற்று எடுத்துக்கொண்டு போய்க்

கடலில் கரைத்துவிட்டது.

அதனால்தான் கடலின்னும் 

உப்பாக இருக்கிறது போல, 


நாம் நடந்த தெரு 

அதே இடத்திற் தான் இருக்கிறது.

அதற்கு நினைவில்லை.

புளியமரம் அதே நிழலை விரிக்கிறது 

இரண்டு பேருக்கான நிழல்,

இன்று அதில் ஒருவர் நிற்கிறார்.

மிச்ச நிழல் யாருக்கு ? 


குருவி

ஒரு சருகும் ஒரு நூலும் ஒரு முடியும் கொண்டு

வீடு நெய்தது.

குஞ்சின் இறகு முதிர்ந்த காலை

அது வானத்தைப் பார்த்தது, 

வானம் பதில் சொல்லவில்லை

குஞ்சு போயிற்று.

குருவி கத்தவில்லை 

கூட்டின் விளிம்பில் அமர்ந்து

காலியான இடத்தை 

ஒரு நாள் முழுக்கக் காவல் காத்தது.


பின் ஒரு மழை, அதன் பின் காற்று 

கூடு புல்லாகி நிலத்துக்குத் திரும்பியது.

அந்தக் குஞ்சு இப்போது

வேறோர் மரத்தில்

ஒரு சருகும் ஒரு நூலும் ஒரு முடியும் சேர்க்கிறது.


இந்தப் பூமி ஒரு கிழவி,

கண்ணோரம் உப்புப் படிந்தவள் 

எத்தனை கோடிப் பிரிவுகளை

இவள் மண்ணுக்குள் விழுங்கியிருக்கிறாள், 

ஒவ்வொரு புல்நுனியிலும்

யாரோ ஒருவரின் 

கடைசிப் பார்வை நடுங்குகிறது.


இதை வாழ்க்கை என்று அழைக்க

என் நாக்கு எழவில்லை.

கடல் விலகிப் போன பின்

கன்னத்தில் தங்கிவிடும்

அந்த உப்பின் பெயரால் 

அதை அழைக்கிறேன்…

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

இறுதித் தடைக்காவல்..

​எரிந்த பனையோலை நிறத்தில் வானம்

கருகிய பனைமரத்தின் உச்சியில்

தனித்து மிதக்கும் விண்மீன்.

நாடற்ற எனக்கு,

தெளிவானதோர் அழைப்பு.


நான் பெருங்கடலெனும் 

இருளில் ஏறும் போது,

அலைவாயின் சிதைந்த கரைகளிலிருந்து

ஒப்பாரி எழாதிருக்கட்டும்.

மாறாக

துப்பாக்கி முனையின் கீழ்

ஒலியின்றி நகரும் 

ஏதிலித்திரளைப் போல்,

துயிலும் அலையாக அது இருக்கட்டும்.

கரையோரம் நுரைத்துச் சிதறவோ 

ஒலிக்கவோ இயலாதபடி,

அச்சத்தில் இறுகிப்போன மூச்சின் பெருக்காக

அது கனத்து வழியட்டும்.


எல்லையற்ற அலைக்கழிப்பின் 

அடியாழத்திலிருந்து

என்னையிந்த வேரற்ற நிலத்தில் உதிர்த்த ஒன்று..

இப்போது,

முகவரியழிக்கப்பட்ட 

தன் பழைய திணைக்கே மீள்கிறது.


கந்தகநிறப் புகை படிந்த அந்தி,

ஊரடங்கு முரசு,

அதன் பின்னே 

காணாமலாக்கப் பட்டவர்களின் 

பெயர்களைப் போன்ற

சுவடுகளற்ற பேரிருள்.


நான் மீண்டும் பாய் விரிக்கையில்,

பிரிவாற்றாமையின் கையறுநிலை

எவர் முகத்திலும் படியாதிருக்கட்டும்.

நாம் விடைபெறுதல்களை மட்டுமே

கையிருப்பாய்க் கொண்டவர்கள்.


காவலரண்களென்றும் முள்வேலிகளென்றும் 

காலமும் நிலமும் 

எமக்கெனத் துண்டித்த எல்லையிலிருந்து,

இந்தச் சுழித்தோடும் அலை

என்னை எத்துணைத் தொலைவு 

இழுத்துச் சென்றாலும்

மூச்சடங்கும் அந்த 

இறுதித் தடைக்காவலைக் கடந்தபின்

என்னை ஆற்றுப்படுத்தும் என் மீகாமனை

நேருக்கு நேர் காண்பேன்.


கண்கள் உரையாடும் 

அந்தப் பேரமைதியில் 

ஒப்பாரியடக்கி நான் கடந்த

பெருங்கடல் முழுவதும்

ஒற்றை உப்புக்கட்டியாய்த் திரண்டு

என் தொண்டைக்குழியை

என்றென்றைக்குமாய் அடைத்துக்கொள்ளும்..