சனி, 17 ஆகஸ்ட், 2013

கண்டற்காடு பேசுகிறேன்..

ஊரினின் றொதுங்கி
ஒரு சிறிய காடாக
ஈரலிப்பாய் நிலப்பரப்பை
இதமாக வைத்தபடி
எத்தனையோ உயிர்க்கரணாய்
இருந்தோம், அப்போதில்
எத்தனை பேர் உணர்ந்திருந்தார்
எம்மாற்தானித் தேசம்
சத்துக் குறையாத 
சதைப் பிடிப்பாய் இருக்குதென்று.?
இருக்கும் போதுங்களுக்கு
எமதருமை புரியவில்லை
வருந்துகிறீர் இப்போது
வாய்விட்டு, வருந்துங்கள்

தேசத்தின் சமநிலையும்
தேங்கி இன்னும் மீந்திருக்கும்
வாசம் மிகுந்த மண்ணின்
வளமும், எம்மாற் தான்
காக்கப்பட்டதென்ற 
கதையை, வரலாறை
ஏக்கத்தோடு நாளை
எழுந்துவரும் குழந்தைகட்கு
எப்படி வளச் செழிப்பாய்
இருந்தம், எதனால் நாம்
இப்படி இன்றைக்கு
இருண்டு வறண்டெரிந்து
தப்பான கருந்துளையுள்
தவறி விழுந்தமென்றும்
எப்படி இதை நாம்
இனித் தாண்டி எழுவதென்றும் 
நிலைத்து நிற்கும் பசுமையெனும்
நிச வழியைக் காட்டுங்கள்

ஈர நிலம் இல்லையெனில்
எந் நிலமும் விடியாது
ஈர நிலம் வேண்டுமெனில்
எம்மிருப்பு வேண்டும், நீர்
சோரம் போயெம்மைச் 
சுரண்டி, தரிசாக்கி
நீரில்லா மண்ணாக்க 
நினைத்தால், உம் வாயில்
மண் மாரி பொழிந்து தான்
மரிப்பீர், விழியுங்கள்

எஞ்சிப் போய் ஆங்காங்கே
இருக்கின்ற எமைக்காத்து
அஞ்சாத தேச மொன்றை
அமையுங்கள், என்றைக்கும்
கண்டற் காடே தேசத்தின்
காப்பு.

செவ்வாய், 16 ஜூலை, 2013

உயிர் காவும் பாடல்..

தலையணையில் மெல்லத்
தலை திருப்பக் காதோரம்
இலை வருடிச் செல்வது போல்
இதமான பாடலொன்று

இங்கேயிதை ஒலிபரப்ப
எவருமில்லை, வாய்ப்புமில்லை
எங்கிருந்தோ சாளரத்தால்
இறங்கி வரும் காற்றோடு
கால், இடுப்பு, தோள் தடவிக்
காதோரம் வழிகிறது,

கிளுவங்குளை நசிந்த
மணமும், நான் விரும்பும்
ஆட்டுப்பால் வாசனையும்
அதனோடு,

நினைவுக்கு வாசமுண்டோ?
நிசந்தானோ!, ஊரில் நான்
வீட்டுப் படியின் மேல்
இருந்தபடி வானொலியில்
கேட்ட பாடலும்
கிடந்துருண்ட வாசனையும்
நாட்டை வீட்டு வேறு ஒரு
நாட்டுக்கு, இடையினிலே
இத்துணை ஆண்டுகளும் தாண்டி,
இருக்குமோ! ஒருவேளை
சித்தம் கலங்கி உள்ளே
சிதைந்து காலமெனும்
வித்தைகளைக் கடந்து
வெளியில் மிதக்கிறதோ!

ஒருக்களித்து மறுபக்கம்
உடல் பிரட்டிப் படுக்கின்றேன்
வருகிறது மீண்டும் அதே பாடல்
வாசனையும், இப்போது
ஆளைச் சுழித்திழுக்கும்
ஆழிபோல் விழியிரெண்டும்
குழந்தையாய் என்னைக்
குழைய வைத்த உதடுகளும்
இரெட்டை நாடியும்
எழுந்திறங்கும் மார்பெடுப்பும்
காட்சியாய் இதனோடு
கலந்தபடி, எனை மறந்து
கொடுப்புக்குள் சிரித்தபடி
குப்புறப் படுக்கின்றேன்
உள்ளே நானில்லை
உடல் மட்டும் கிடக்கிறது
அள்ளியெனை சுமந்து
செல்கிறது அப்பாடல்

கூடு விட்டுக் கூட்டுக்கு
சித்தரன்று புகுந்தாராம்
நாடு விட்டு நாட்டுக்குள்
நானுமிங்கே புகுகின்றேன்
பாடல் காலத்தின்
பாதைகளைத் திறந்து விட
ஓடி நான் வந்து விட்டேன்
உயிர் வாழும் தெருவிற்கே..























சனி, 6 ஜூலை, 2013

உனக்கு நான் அல்லது எனக்கு நீ

எதுவுமே புரிந்திருக்கவில்லை
எல்லோரும் கூடி அழ
அவனும் சேர்ந்தழுதான்

கண்களை இறுக்கமாக மூடி
ஆடாமல் அசையாமல்
பெட்டிக்குள் அடங்கிப் போய்,
எப்படி அவனிதனை எடுத்துக்கொள்வான்?

முன்னைய நாட்களைப் போலவே
தன்னை
கண்ணாமூச்சியின் பின்
கட்டி அணைப்பாயென்றெண்ணுவானா?
அடிக்கடி ஓடி வந்து
உற்றுப் பார்க்கிறான் உன் முகத்தை
சிரிக்கிறான், அழுகிறான், ஓடித்திரிகிறான்

ஊர் அவனைப் பார்த்தே
ஒப்பாரி வைக்கிறது
ஒன்றும் புரியவில்லை அவனுக்கு
உடைந்தழும் தாயின் சூட்டில் ஒதுங்கி
பிதுங்க முழிக்கிறான்

சுவரில்
நீ தொங்கும் காரணத்தை
அவனறிகின்ற காலத்தில்
இளைத்துப் போனதொரு
மங்கிய கனவாய்
அவனுக்கு நீ, அவ்வளவே!

விடுதலைக்காக நானும்
வேலைக்காக நீயுமாய்
நீட்டிய துப்பாக்கி
உமிழ்ந்த குண்டுகள்
எம்மைத் துளையிட்டு
வீழ்த்திவிட்ட பின்னர்
இப்படியாகத்தான்
என் வீட்டில் என் மகனும்
உன் வீட்டில் உன் மகனும்..
-
விம்மி அழுவது
வீரனுக்கழகல்ல எனினும்
அம்மி அல்லடா
ஆழ் மனசு..










புதன், 26 ஜூன், 2013

அந்தராத்மா..

எல்லாம் முடிந்துவிட்டதென்று
தெரிந்த பின்னர்
இத்தனை வருடப் போராட்டத்தின்
இறுதி ஆசையாக
குண்டுகளால் துளைக்கப்பட்டு
இந்த மண்ணில்
தன்னுடலம் விழும் போது
வாழ்ந்த மண்ணை
இரு கைகளுக்குள்ளும்
ஒவ்வொரு பிடி இறுகப்பற்றிய படியும்
அகலக் கண் விரித்து
ஆசை தீர
தன் தேசத்தின் வானத்தைப் பார்த்தபடியும்
வீரச்சாவு நிகழ
அவன் விரும்பியிருந்தான்

ஆனால்
கைகள் பின்புறமாகவும்
கண்கள் துணியினாலும்
இறுக்கமாகக் கட்டப்பட்ட படி
கடைசி வரை
அவன் ஆசைகள் எதுவும்
நடக்கவே இல்லை..




தன்னிலை அறுதல்..

விலங்கு, இருட்டறை
உயிர் குதறும் வதை
அவனால் தாங்க முடிந்தது

ரோந்துக் கப்பல், சுடுகலன்,சிதைந்த உடல்
சிதையாத மனம்
கடலைத் தாண்டி இருந்தான்

மீண்டும் விலங்கு, வதை, சிறை
உயிரில் தினவு
கண்டம் கடந்தான்

அடர்ந்த பனி, அறியாத தேசம்
அடரிருட் சிறை, எப்படித்தானோ?
ஆனால் எழுந்து வந்தான்

தனித்த தீவு, முடியாத் தடுப்பு
நீளும் காலம், தொடரும் பிரிவு
நீண்ட தனிமை ஆமாம் மிக நீண்ட,
வெறுமையுந்தான்.

எதிலும் தடுமாற்றம்
எழுத்துகள் மறந்து போகிறது
கத்தியைப் பார்த்தால்
கழுத்தை அறுக்கவும்
கடலைப் பார்த்தால்
பாய்ந்து குதிக்கவும்
ஒருவேளை
மனதும் சிதையத் தொடங்கி இருக்கலாம்
எவ்வளவைக் கடந்திருந்தாலென்ன
திடீரென ஒருநாள் நிகழலாம்
தன்னிலை அறுந்து
தற்கொலை..







செவ்வாய், 11 ஜூன், 2013

வேண்டாம் போகாதே..

இறந்தே தான் போனாலும்
ஏனென்று கேட்பதற்கு
மருந்துக்கும் கூட ஒரு
மனிதரில்லா இத்தீவின்
எங்கோ ஓர் மூலையில்
இருட்டறையில் உன்னுடைய
அங்கங்களைப் புனைந்து
அளைந்தளைந்துயிர் கொடுத்து
வாழ்ந்திருந்த காலத்தை
வாழுகிறேன், இத்தருணம்
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

அடரிருளை மெளனம்
அணைத்துக் குலவுகையில்
தடவியபடி மார்பில்
தவழ்ந்து முடிகோதும்
உன்னுடைய விரல்களுக்குள்
ஊர்ந்து, விரல் கோர்த்து
என்னுடைய விழிகளினை
ஏறிச்செருக வைக்க
என்னாலே முடிகின்ற
இவ்வேளை எனை விட்டு
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

காதின் மடற்கரையைக்
கவ்வியுன் இதழிழுக்க
மோதி வெள்ளம் போல்
மூண்டுவரும் கூச்சமொன்றில்
ஆதிக் காதலின்
அடையுள்ளிருந்து சொட்டும்
வேதியற் தேனின்
வெப்பத்தில் மயிர்க்கால்கள்
ஓதி விட்டவை போல்
உடல் விறைத்து எழுந்து நிற்க
பாதியிலே உதறியெனைப்
பரிதவிக்க வைத்து விட்டு
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

அரூபக் காலத்தை
அறுத்தறுத்து உட்குடைந்து
சொரூபத்தைக் கண்டடைந்தேன்
சுகவலியே! என்னுடைய
விழிக்கடலில் உன்னுடைய
விம்பத்தை நீந்தவைக்க
வழிவேறறியேனென் வாழ்வே!
என் மூச்சு
உன்மூச்சை உரைபெயர்க்கும்
உச்சத்தில் எனை நீங்கி
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே..


















ஞாயிறு, 31 மார்ச், 2013

கனவு காத்திருக்கிறது..

காலத்தை மீறிய
கனவொன்றும் இல்லையிது
வாழ முடியாததொன்றை
வாழ்வதற்கும் எண்ணவில்லை
ஆசைகள் கூட அந்தளவு பெரியதல்ல
நேசிக்கும் ஓரிரெண்டு
நெருங்கி நிற்கும் உறவோடு
வாசமிகு என் மண்ணில் வாழ்தல்
வாழ்தலென்றால்

மாரில் மகனும்
மறு தோளில் மனைவியுமாய்
ஈரம் சொரிகின்ற காற்றில்
எமை மறந்து
ஆழ்ந்துறங்கும் போதில்
ஆரேனும் கதவினிலே
தட்டுகின்ற ஒலியென்னைத்
தட்டுவதற்கல்ல, மாறாய்
கட்டிக் கை குலுக்க
என எண்ணும் ஓர் வாழ்வு!

பனங்கூடல் நீக்கலிடை
பழம் போலத் தொங்குகின்ற
மனதின் பிரதிமையாய்
மதி ஒழுகும் ராத்திரியில்
என் தேசப்படலொன்றை
எடுப்பாய் பெருங்குரலில்
கண்ணாலே மகிழ்வீரம்
கசிய, வீதியிலே
பாடிச் செல்கின்ற
பலனுள்ள ஓர் வாழ்வு!

கண் முன்னே கொத்தாகக்
கருகி விட்ட எம் மக்கள்
மண்ணுக்காய்த் தம்முயிரின்
மார்பு தந்து போனவர்கள்
இன்னும் எங்கெங்கோ
எமக்காக வாழ்ந்தவரின்
ஆத்மாவின் தாகத்தை
அனுட்டிக்கும் தினமொன்றில்
எம் மண்ணின் நினைவிடத்தில்
எல்லோரும் கூடி நின்று
ஆன்ம விளக்கேற்றி
அன்பொளிர்க்கும் ஓர் வாழ்வு!

தேகம் சிலிர்க்க வைக்கும்
தேசியக் கொடி ஏற
ஆகுதியாய்த் தம்மை
ஆக்கியோர் உயிரிருந்து
சொல்லெடுத்து வனைந்த எம்
சுதந்திர கீதத்தை
உள்ளன்பால் உணர்ந்து
ஒருமித்து எம் மக்கள்
இதயத்தால் பாடுகின்ற
எழுச்சிமிக்க ஓர் வாழ்வு!

வாழ்வோட இயல்பாக
வலிய விதி வந்தென்னை
சூழ்ந்தழைத்துச் செல்கையிலே
சுகமாக என் மூச்சை
ஆழ்ந்திழுத்து என் மண் மேல்
ஆறுதலாய் விடும் போது
வாழ்ந்ததன் அடையாளமாய்
வட்டச் சிறு குழியாய்
இறுதி மூச்சுப் பட்டென் மண்
இங்குமங்கும் அரங்குகின்ற
அசைவுக் காட்சியை நான்
அனுபவித்துப் பார்த்தபடி
கண்ணை மூடுகின்ற
கலாதீதம் பெறு வாழ்வு!


இவ்வளவு தான் கேட்டேன்
இன்றுவரை நல்லூரான்
எவ்வளவு கெஞ்சியும் இரங்கவில்லை
என் செய்வேன்..!







புதன், 6 மார்ச், 2013

தேம்பும் உயிரின் தினவு..



இதமான கனவுகளுடன் அழகொழுக
என் காலைகள் விடிவதாயும்
ஏதோ ஓர் தீவின் மூலையில்
யாரென்றே தெரியாதவர்களுடன்
வாழப் பணிக்கப்பட்ட இந்த அறைதான்
மகிழ்வு தரும் என்னுடைய வீடென்றும்
இப்போதெல்லாம் நான்
நம்பத் தொடங்கி இருக்கிறேன்
அப்பா என்பவர்
ஸ்கைப்பில் மட்டுமே வர முடியுமென
என் மகன் நம்பி இருப்பதைப் போல

குத்தும் குளிரம்புகளை ஏந்தியபடி
அட்லாண்டிக் பெருங்கடலைத் தேடி
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில்
மிதந்துசெல்கின்ற பந்தொன்றைக் காட்டி
நாளை மாலை
மலைக்கு அப்பால் உள்ள மறுகரையில்
நாமிதனை எடுக்கலாமென
நம்பிக்கையுடன் சிறுவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஜோசியன் சொன்னபடி
இந்த ஐப்பசிக்குள் எப்படியும்
தன் மகனுக்கு விடுதலை கிடைத்துவிடுமென
அம்மா சொல்லிக் கொண்டிருப்பதைப் போல


மாற்றாடை இல்லாவிட்டாலும்
மனசுடையாமல்
உடற் சூட்டில் உலர்ந்து விடுமென்ற அனுபவத்தில்
மழையில் நனைந்து போன தன் சேலையை
உதறி உடுத்துக் கொண்டு
ஒருக்களித்துப் படுத்திருக்கும்
ஓர் ஏழைப் பெண்ணைப் போல
நனைந்து போய்க்கிடக்கும்
நள்ளிரவு வீதியின் நடைபாதை
நிலச் சூட்டில் உறங்கிக் கிடக்கிறது
களைத்த நினைவு
கண் செருகத் தொடங்க
ஒற்றைக் காலை
சுவரில் ஊன்றிக் கொண்டு
தேம்பும் உயிரை
தேற்றிக்கொண்டிருக்கும் என் காதில்
யாரோ சொல்கிறார்கள்

‘வதைப்பவனுக்கு ஆன்மா இருளும்
வதைபடுபவனுக்கே ஆன்மா விழிக்கும்’



அன்பெனும் தனிமை..


மஞ்சட்பூச் சணல்வயலின்
மத்தியிலே தனியாக
எஞ்சிப் போய் நிற்கும்
இருட் பச்சை மரம் போல,
வெட்டிரும்பாற் பிளக்கேலா
வீரியப்பாறையினை
தட்டிப் பிளந்துவிட்டுத்
தனியாக நிமிர்வோடு
எட்டிப் பார்க்கின்ற
இளங்குருத்துத் தளிர்போல
தனித்துவமாய் வாழ் பழகும்
தளராத மனமொன்றை
உனையே அறியாமல்
உள் அறையும் உன் தனிமை

தனிமையெனும் ஊற்றிற் தான்
தவிப்புயிர்க்கும் அன்பூறும்
தனிமையெனும் காற்றிற் தான்
தான் பறந்து தாமாகும்
தனிமையெனும் வானிற் தான்
தனையறியும் வெளி தோன்றும்
தனிமையெனும் தீயிற் தான்
தனைப் புடமாய்த் தான் போடும்
தனிமையெனும் நிலம் மீதே
தன்னலங்கள் அற்ற விதை
இனியநறு மணத்தோடு
எழும், இவ்வுலகில்

தனிமையெனும் தேன் சொட்டத்
தவம் செய்த ஒருவனுக்கே
புனிதமாய் அன்பு வரம்
பூக்கும், ஏனெனிலோ
அவனடையும் இன்பம்
ஆர் கொடுத்தும் வந்ததல்ல
அவனாய் அளைந்தளைந்து
ஆக்கியது, ஆதலினால்
எவர் வந்து,போனாலும்
இவன் மனது ஒன்றே தான்
அவர் வந்து அணைப்பதற்கும்
அகல்வதற்கும் சுதந்திரத்தை
இவன் தனிமை கடலாய்
இறைத்து முன்னே விட்டுளது

எவருமிவன் அடிமையில்லை
இவனெவர்க்கும் அடிமையில்லை
என்கின்ற மெய்ம்மையெனும்
ஏகாந்தப் பெருவெளியில்
கண் தின்னும் காட்சிகளை
கவிதைகளில் தைத்து விட்டு
வண்ணக் கனவுகளால்
வார்த்துள்ள பாதைகளில்
எண்ணம் செயலறுந்த
இருமையற்ற நிலை கூட
விண்ணாகி விரியும்
வெளியாகிப் போய் விட்டான்..


புதன், 23 ஜனவரி, 2013

கஞ்சாபோலாக்கும் கனநினைவு..

கஞ்சா நுகர்ந்த மனம்
காற்றாகி விண்ணேறி
தஞ்சம் அடைகின்ற
தாலாட்டும் மெல்லிசை போல்
பிஞ்சு பிடித்து வளர்
பெரு நினைவுச் சாகரமோ
கெஞ்சி உன் மடியிற்
கிடப்பதற்குக் கேக்குதடி

அழுக்கேதும் அண்டாத
ஆழ்மனது வீணையினில்
வழுக்கி வரும் உன்னுடைய
வலி போக்கும் விரல் மேவ
ஆனந்தக் கூத்தாடும்
ஆவியதன் அக்கணத்தீ
ஏனிந்த வாழ் முழுதும்
எனைத்தொடர வில்லையென
ஞானத்தில் தேடி
நனையுதடி மனக்கண்கள்

பூவை நினைத்த படி
பூட்டினால் கண்ணுக்குள்
பூந்தோட்டம் ஒயிலாகப்
புன்னகைத்து நிற்பதுவும்

காட்டை நினைத்தால்
காட்டோடு பச்சை மணம்
கூட்டாகக் கண் மூக்கில்
கொளித்துப்போய்த் தோன்றுவதும்

ஆற்றை நினைத்தாலோ
அவதார குணம் வந்து
தோற்றுவித்த சிவனின்
தொடர்ச்சியாய் தலைமுழுதும்
மலையும், சுனையும்
மதமதென்ற பத ஆறும்
நிலையொன்றை உணராத
நிலையும், உடற்பொறியில்
அலையின் தத்தளிப்பும்
ஆழ நீரோட்டமதும்
கலந்து புதிதாயோர்
காவ்ய நிலை தோன்றுவதும்

கஞ்சா வரைகின்ற
காட்சிகளால் மட்டுமல்ல
என் சா வரை நீளும்
எனையுடையாள் நினைவிலும் தான்..