Wednesday, 6 March 2013

அன்பெனும் தனிமை..


மஞ்சட்பூச் சணல்வயலின்
மத்தியிலே தனியாக
எஞ்சிப் போய் நிற்கும்
இருட் பச்சை மரம் போல,
வெட்டிரும்பாற் பிளக்கேலா
வீரியப்பாறையினை
தட்டிப் பிளந்துவிட்டுத்
தனியாக நிமிர்வோடு
எட்டிப் பார்க்கின்ற
இளங்குருத்துத் தளிர்போல
தனித்துவமாய் வாழ் பழகும்
தளராத மனமொன்றை
உனையே அறியாமல்
உள் அறையும் உன் தனிமை

தனிமையெனும் ஊற்றிற் தான்
தவிப்புயிர்க்கும் அன்பூறும்
தனிமையெனும் காற்றிற் தான்
தான் பறந்து தாமாகும்
தனிமையெனும் வானிற் தான்
தனையறியும் வெளி தோன்றும்
தனிமையெனும் தீயிற் தான்
தனைப் புடமாய்த் தான் போடும்
தனிமையெனும் நிலம் மீதே
தன்னலங்கள் அற்ற விதை
இனியநறு மணத்தோடு
எழும், இவ்வுலகில்

தனிமையெனும் தேன் சொட்டத்
தவம் செய்த ஒருவனுக்கே
புனிதமாய் அன்பு வரம்
பூக்கும், ஏனெனிலோ
அவனடையும் இன்பம்
ஆர் கொடுத்தும் வந்ததல்ல
அவனாய் அளைந்தளைந்து
ஆக்கியது, ஆதலினால்
எவர் வந்து,போனாலும்
இவன் மனது ஒன்றே தான்
அவர் வந்து அணைப்பதற்கும்
அகல்வதற்கும் சுதந்திரத்தை
இவன் தனிமை கடலாய்
இறைத்து முன்னே விட்டுளது

எவருமிவன் அடிமையில்லை
இவனெவர்க்கும் அடிமையில்லை
என்கின்ற மெய்ம்மையெனும்
ஏகாந்தப் பெருவெளியில்
கண் தின்னும் காட்சிகளை
கவிதைகளில் தைத்து விட்டு
வண்ணக் கனவுகளால்
வார்த்துள்ள பாதைகளில்
எண்ணம் செயலறுந்த
இருமையற்ற நிலை கூட
விண்ணாகி விரியும்
வெளியாகிப் போய் விட்டான்..


2 comments:

  1. "தனிமையெனும் நிலம் மீதே // தன்னலங்கள் அற்ற விதை// இனியநறு மணத்தோடு// எழும்...." என்பது ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். உலகின் மிகச்சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்றாகும் என்பது என் கருத்து. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  2. நான் வாழ்ந்த வாழ்வை என்னால் முடிந்த மொழியில் எழுதி இருக்கிறேன், தங்கள் கருத்துகள் என்னைத் தொடர்ந்தும் எழுத்தத்தூண்டுகின்றன
    நன்றிகள்

    ReplyDelete