Sunday 31 March 2013

கனவு காத்திருக்கிறது..

காலத்தை மீறிய
கனவொன்றும் இல்லையிது
வாழ முடியாததொன்றை
வாழ்வதற்கும் எண்ணவில்லை
ஆசைகள் கூட அந்தளவு பெரியதல்ல
நேசிக்கும் ஓரிரெண்டு
நெருங்கி நிற்கும் உறவோடு
வாசமிகு என் மண்ணில் வாழ்தல்
வாழ்தலென்றால்

மாரில் மகனும்
மறு தோளில் மனைவியுமாய்
ஈரம் சொரிகின்ற காற்றில்
எமை மறந்து
ஆழ்ந்துறங்கும் போதில்
ஆரேனும் கதவினிலே
தட்டுகின்ற ஒலியென்னைத்
தட்டுவதற்கல்ல, மாறாய்
கட்டிக் கை குலுக்க
என எண்ணும் ஓர் வாழ்வு!

பனங்கூடல் நீக்கலிடை
பழம் போலத் தொங்குகின்ற
மனதின் பிரதிமையாய்
மதி ஒழுகும் ராத்திரியில்
என் தேசப்படலொன்றை
எடுப்பாய் பெருங்குரலில்
கண்ணாலே மகிழ்வீரம்
கசிய, வீதியிலே
பாடிச் செல்கின்ற
பலனுள்ள ஓர் வாழ்வு!

கண் முன்னே கொத்தாகக்
கருகி விட்ட எம் மக்கள்
மண்ணுக்காய்த் தம்முயிரின்
மார்பு தந்து போனவர்கள்
இன்னும் எங்கெங்கோ
எமக்காக வாழ்ந்தவரின்
ஆத்மாவின் தாகத்தை
அனுட்டிக்கும் தினமொன்றில்
எம் மண்ணின் நினைவிடத்தில்
எல்லோரும் கூடி நின்று
ஆன்ம விளக்கேற்றி
அன்பொளிர்க்கும் ஓர் வாழ்வு!

தேகம் சிலிர்க்க வைக்கும்
தேசியக் கொடி ஏற
ஆகுதியாய்த் தம்மை
ஆக்கியோர் உயிரிருந்து
சொல்லெடுத்து வனைந்த எம்
சுதந்திர கீதத்தை
உள்ளன்பால் உணர்ந்து
ஒருமித்து எம் மக்கள்
இதயத்தால் பாடுகின்ற
எழுச்சிமிக்க ஓர் வாழ்வு!

வாழ்வோட இயல்பாக
வலிய விதி வந்தென்னை
சூழ்ந்தழைத்துச் செல்கையிலே
சுகமாக என் மூச்சை
ஆழ்ந்திழுத்து என் மண் மேல்
ஆறுதலாய் விடும் போது
வாழ்ந்ததன் அடையாளமாய்
வட்டச் சிறு குழியாய்
இறுதி மூச்சுப் பட்டென் மண்
இங்குமங்கும் அரங்குகின்ற
அசைவுக் காட்சியை நான்
அனுபவித்துப் பார்த்தபடி
கண்ணை மூடுகின்ற
கலாதீதம் பெறு வாழ்வு!


இவ்வளவு தான் கேட்டேன்
இன்றுவரை நல்லூரான்
எவ்வளவு கெஞ்சியும் இரங்கவில்லை
என் செய்வேன்..!







2 comments:

  1. அச்சத்தின் நடுவே அன்றாட இரவுகளைக் கழித்த வேதனை நெஞ்சை வந்து அடைக்கிறது, இவ்வரிகளைப் படிக்கும்போது: "ஆழ்ந்துறங்கும் போதில்// ஆரேனும் கதவினிலே//
    தட்டுகின்ற ஒலியென்னைத் // தட்டுவதற்கல்ல, மாறாய் // கட்டிக் கை குலுக்க // என எண்ணும் ஓர் வாழ்வு!" . இனப்பேரழிவிலிருந்து இனத்தைக் காக்கும் வலிமை அரசுகளுக்கில்லை. காலத்திற்கே உண்டு. வரும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
    Replies
    1. இத்தனை ஆண்டுகளாக காலமும் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது, கண் திறக்கும் காலத்தின் காலத்துக்காகக் காத்திருக்கிறோம்.
      நன்றி

      Delete