Tuesday 11 June 2013

வேண்டாம் போகாதே..

இறந்தே தான் போனாலும்
ஏனென்று கேட்பதற்கு
மருந்துக்கும் கூட ஒரு
மனிதரில்லா இத்தீவின்
எங்கோ ஓர் மூலையில்
இருட்டறையில் உன்னுடைய
அங்கங்களைப் புனைந்து
அளைந்தளைந்துயிர் கொடுத்து
வாழ்ந்திருந்த காலத்தை
வாழுகிறேன், இத்தருணம்
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

அடரிருளை மெளனம்
அணைத்துக் குலவுகையில்
தடவியபடி மார்பில்
தவழ்ந்து முடிகோதும்
உன்னுடைய விரல்களுக்குள்
ஊர்ந்து, விரல் கோர்த்து
என்னுடைய விழிகளினை
ஏறிச்செருக வைக்க
என்னாலே முடிகின்ற
இவ்வேளை எனை விட்டு
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

காதின் மடற்கரையைக்
கவ்வியுன் இதழிழுக்க
மோதி வெள்ளம் போல்
மூண்டுவரும் கூச்சமொன்றில்
ஆதிக் காதலின்
அடையுள்ளிருந்து சொட்டும்
வேதியற் தேனின்
வெப்பத்தில் மயிர்க்கால்கள்
ஓதி விட்டவை போல்
உடல் விறைத்து எழுந்து நிற்க
பாதியிலே உதறியெனைப்
பரிதவிக்க வைத்து விட்டு
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே

அரூபக் காலத்தை
அறுத்தறுத்து உட்குடைந்து
சொரூபத்தைக் கண்டடைந்தேன்
சுகவலியே! என்னுடைய
விழிக்கடலில் உன்னுடைய
விம்பத்தை நீந்தவைக்க
வழிவேறறியேனென் வாழ்வே!
என் மூச்சு
உன்மூச்சை உரைபெயர்க்கும்
உச்சத்தில் எனை நீங்கி
விடைபெற்றுச் செல்லாதே
வேண்டாம் போகாதே..


















2 comments:

  1. "என் மூச்சு, // உன்மூச்சை உரைபெயர்க்கும் // உச்சத்தில் எனை நீங்கி // விடைபெற்றுச் செல்லாதே // வேண்டாம் போகாதே" -என்ற வரிகள் இதுவரை நான் படித்த துன்பவியல் காவியங்கள் எதிலும் கண்டிலேன். கண்கள் குளமாகின்றன. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete