செவ்வாய், 1 செப்டம்பர், 2026

இறுதித் தடைக்காவல்..

எரிந்த பனையோலை நிறத்தில் வானம்

கருகிய பனைமரத்தின் உச்சியில்

தனித்து மிதக்கும் விண்மீன்.

நாடற்ற எனக்கு,

தெளிவானதோர் அழைப்பு.


நான் பெருங்கடலெனும் 

இருளில் ஏறும் போது,

அலைவாயின் சிதைந்த கரைகளிலிருந்து

ஒப்பாரி எழாதிருக்கட்டும்.

மாறாக

துப்பாக்கி முனையின் கீழ்

ஒலியின்றி நகரும் 

ஏதிலித்திரளைப் போல்,

துயிலும் அலையாக அது இருக்கட்டும்.

கரையோரம் நுரைத்துச் சிதறவோ 

ஒலிக்கவோ இயலாதபடி,

அச்சத்தில் இறுகிப்போன மூச்சின் பெருக்காக

அது கனத்து வழியட்டும்.


எல்லையற்ற அலைக்கழிப்பின் 

அடியாழத்திலிருந்து

என்னையிந்த வேரற்ற நிலத்தில் உதிர்த்த ஒன்று..

இப்போது,

முகவரியழிக்கப்பட்ட 

தன் பழைய திணைக்கே மீள்கிறது.


கந்தகநிறப் புகை படிந்த அந்தி,

ஊரடங்கு முரசு,

அதன் பின்னே 

காணாமலாக்கப் பட்டவர்களின் 

பெயர்களைப் போன்ற

சுவடுகளற்ற பேரிருள்.


நான் மீண்டும் பாய் விரிக்கையில்,

பிரிவாற்றாமையின் கையறுநிலை

எவர் முகத்திலும் படியாதிருக்கட்டும்.

நாம் விடைபெறுதல்களை மட்டுமே

கையிருப்பாய்க் கொண்டவர்கள்.


காவலரண்களென்றும் முள்வேலிகளென்றும் 

காலமும் நிலமும் 

எமக்கெனத் துண்டித்த எல்லையிலிருந்து,

இந்தச் சுழித்தோடும் அலை

என்னை எத்துணைத் தொலைவு 

இழுத்துச் சென்றாலும்

மூச்சடங்கும் அந்த 

இறுதித் தடைக்காவலைக் கடந்தபின்

என்னை ஆற்றுப்படுத்தும் என் மீகாமனை

நேருக்கு நேர் காண்பேன்.


கண்கள் உரையாடும் 

அந்தப் பேரமைதியில் 

ஒப்பாரியடக்கி நான் கடந்த

பெருங்கடல் முழுவதும்

ஒற்றை உப்புக்கட்டியாய்த் திரண்டு

என் தொண்டைக்குழியை

என்றென்றைக்குமாய் அடைத்துக்கொள்ளும்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக