Wednesday 6 March 2013

தேம்பும் உயிரின் தினவு..



இதமான கனவுகளுடன் அழகொழுக
என் காலைகள் விடிவதாயும்
ஏதோ ஓர் தீவின் மூலையில்
யாரென்றே தெரியாதவர்களுடன்
வாழப் பணிக்கப்பட்ட இந்த அறைதான்
மகிழ்வு தரும் என்னுடைய வீடென்றும்
இப்போதெல்லாம் நான்
நம்பத் தொடங்கி இருக்கிறேன்
அப்பா என்பவர்
ஸ்கைப்பில் மட்டுமே வர முடியுமென
என் மகன் நம்பி இருப்பதைப் போல

குத்தும் குளிரம்புகளை ஏந்தியபடி
அட்லாண்டிக் பெருங்கடலைத் தேடி
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில்
மிதந்துசெல்கின்ற பந்தொன்றைக் காட்டி
நாளை மாலை
மலைக்கு அப்பால் உள்ள மறுகரையில்
நாமிதனை எடுக்கலாமென
நம்பிக்கையுடன் சிறுவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஜோசியன் சொன்னபடி
இந்த ஐப்பசிக்குள் எப்படியும்
தன் மகனுக்கு விடுதலை கிடைத்துவிடுமென
அம்மா சொல்லிக் கொண்டிருப்பதைப் போல


மாற்றாடை இல்லாவிட்டாலும்
மனசுடையாமல்
உடற் சூட்டில் உலர்ந்து விடுமென்ற அனுபவத்தில்
மழையில் நனைந்து போன தன் சேலையை
உதறி உடுத்துக் கொண்டு
ஒருக்களித்துப் படுத்திருக்கும்
ஓர் ஏழைப் பெண்ணைப் போல
நனைந்து போய்க்கிடக்கும்
நள்ளிரவு வீதியின் நடைபாதை
நிலச் சூட்டில் உறங்கிக் கிடக்கிறது
களைத்த நினைவு
கண் செருகத் தொடங்க
ஒற்றைக் காலை
சுவரில் ஊன்றிக் கொண்டு
தேம்பும் உயிரை
தேற்றிக்கொண்டிருக்கும் என் காதில்
யாரோ சொல்கிறார்கள்

‘வதைப்பவனுக்கு ஆன்மா இருளும்
வதைபடுபவனுக்கே ஆன்மா விழிக்கும்’



2 comments:

  1. "அப்பா என்பவர் // ஸ்கைப்பில் மட்டுமே வர முடியுமென //
    என் மகன் நம்பி இருப்பதைப் போல" என்ற வரிகளும்,
    "ஒற்றைக் காலை // சுவரில் ஊன்றிக் கொண்டு // தேம்பும் உயிரை
    //தேற்றிக்கொண்டிருக்கும் என் காது..." என்ற வரிகளும் அழியாத வரிகள். அற்புதமான கவிஞர் நீங்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete