Wednesday 23 January 2013

கஞ்சாபோலாக்கும் கனநினைவு..

கஞ்சா நுகர்ந்த மனம்
காற்றாகி விண்ணேறி
தஞ்சம் அடைகின்ற
தாலாட்டும் மெல்லிசை போல்
பிஞ்சு பிடித்து வளர்
பெரு நினைவுச் சாகரமோ
கெஞ்சி உன் மடியிற்
கிடப்பதற்குக் கேக்குதடி

அழுக்கேதும் அண்டாத
ஆழ்மனது வீணையினில்
வழுக்கி வரும் உன்னுடைய
வலி போக்கும் விரல் மேவ
ஆனந்தக் கூத்தாடும்
ஆவியதன் அக்கணத்தீ
ஏனிந்த வாழ் முழுதும்
எனைத்தொடர வில்லையென
ஞானத்தில் தேடி
நனையுதடி மனக்கண்கள்

பூவை நினைத்த படி
பூட்டினால் கண்ணுக்குள்
பூந்தோட்டம் ஒயிலாகப்
புன்னகைத்து நிற்பதுவும்

காட்டை நினைத்தால்
காட்டோடு பச்சை மணம்
கூட்டாகக் கண் மூக்கில்
கொளித்துப்போய்த் தோன்றுவதும்

ஆற்றை நினைத்தாலோ
அவதார குணம் வந்து
தோற்றுவித்த சிவனின்
தொடர்ச்சியாய் தலைமுழுதும்
மலையும், சுனையும்
மதமதென்ற பத ஆறும்
நிலையொன்றை உணராத
நிலையும், உடற்பொறியில்
அலையின் தத்தளிப்பும்
ஆழ நீரோட்டமதும்
கலந்து புதிதாயோர்
காவ்ய நிலை தோன்றுவதும்

கஞ்சா வரைகின்ற
காட்சிகளால் மட்டுமல்ல
என் சா வரை நீளும்
எனையுடையாள் நினைவிலும் தான்..




1 comment:

  1. "என் சா வரை நீளும்// எனையுடையாள் நினைவிலும் தான்" - என்னமாய்க் கனக்கின்றது நெஞ்சு, இவ்வரிகளைப் படிக்கும்போது! அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete