Tuesday 16 July 2013

உயிர் காவும் பாடல்..

தலையணையில் மெல்லத்
தலை திருப்பக் காதோரம்
இலை வருடிச் செல்வது போல்
இதமான பாடலொன்று

இங்கேயிதை ஒலிபரப்ப
எவருமில்லை, வாய்ப்புமில்லை
எங்கிருந்தோ சாளரத்தால்
இறங்கி வரும் காற்றோடு
கால், இடுப்பு, தோள் தடவிக்
காதோரம் வழிகிறது,

கிளுவங்குளை நசிந்த
மணமும், நான் விரும்பும்
ஆட்டுப்பால் வாசனையும்
அதனோடு,

நினைவுக்கு வாசமுண்டோ?
நிசந்தானோ!, ஊரில் நான்
வீட்டுப் படியின் மேல்
இருந்தபடி வானொலியில்
கேட்ட பாடலும்
கிடந்துருண்ட வாசனையும்
நாட்டை வீட்டு வேறு ஒரு
நாட்டுக்கு, இடையினிலே
இத்துணை ஆண்டுகளும் தாண்டி,
இருக்குமோ! ஒருவேளை
சித்தம் கலங்கி உள்ளே
சிதைந்து காலமெனும்
வித்தைகளைக் கடந்து
வெளியில் மிதக்கிறதோ!

ஒருக்களித்து மறுபக்கம்
உடல் பிரட்டிப் படுக்கின்றேன்
வருகிறது மீண்டும் அதே பாடல்
வாசனையும், இப்போது
ஆளைச் சுழித்திழுக்கும்
ஆழிபோல் விழியிரெண்டும்
குழந்தையாய் என்னைக்
குழைய வைத்த உதடுகளும்
இரெட்டை நாடியும்
எழுந்திறங்கும் மார்பெடுப்பும்
காட்சியாய் இதனோடு
கலந்தபடி, எனை மறந்து
கொடுப்புக்குள் சிரித்தபடி
குப்புறப் படுக்கின்றேன்
உள்ளே நானில்லை
உடல் மட்டும் கிடக்கிறது
அள்ளியெனை சுமந்து
செல்கிறது அப்பாடல்

கூடு விட்டுக் கூட்டுக்கு
சித்தரன்று புகுந்தாராம்
நாடு விட்டு நாட்டுக்குள்
நானுமிங்கே புகுகின்றேன்
பாடல் காலத்தின்
பாதைகளைத் திறந்து விட
ஓடி நான் வந்து விட்டேன்
உயிர் வாழும் தெருவிற்கே..























2 comments:

  1. "கால், இடுப்பு, தோள் தடவிக் // காதோரம் வழிகிறது" என்ற வரிகளும், " ஓடி நான் வந்து விட்டேன்// உயிர் வாழும் தெருவிற்கே" என்ற சொற்றொடரும் சாதாரணக் கவிதையல்ல, மாகவிதை. மறக்க முடியாக் கவிதை. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

      Delete