Saturday 17 August 2013

கண்டற்காடு பேசுகிறேன்..

ஊரினின் றொதுங்கி
ஒரு சிறிய காடாக
ஈரலிப்பாய் நிலப்பரப்பை
இதமாக வைத்தபடி
எத்தனையோ உயிர்க்கரணாய்
இருந்தோம், அப்போதில்
எத்தனை பேர் உணர்ந்திருந்தார்
எம்மாற்தானித் தேசம்
சத்துக் குறையாத 
சதைப் பிடிப்பாய் இருக்குதென்று.?
இருக்கும் போதுங்களுக்கு
எமதருமை புரியவில்லை
வருந்துகிறீர் இப்போது
வாய்விட்டு, வருந்துங்கள்

தேசத்தின் சமநிலையும்
தேங்கி இன்னும் மீந்திருக்கும்
வாசம் மிகுந்த மண்ணின்
வளமும், எம்மாற் தான்
காக்கப்பட்டதென்ற 
கதையை, வரலாறை
ஏக்கத்தோடு நாளை
எழுந்துவரும் குழந்தைகட்கு
எப்படி வளச் செழிப்பாய்
இருந்தம், எதனால் நாம்
இப்படி இன்றைக்கு
இருண்டு வறண்டெரிந்து
தப்பான கருந்துளையுள்
தவறி விழுந்தமென்றும்
எப்படி இதை நாம்
இனித் தாண்டி எழுவதென்றும் 
நிலைத்து நிற்கும் பசுமையெனும்
நிச வழியைக் காட்டுங்கள்

ஈர நிலம் இல்லையெனில்
எந் நிலமும் விடியாது
ஈர நிலம் வேண்டுமெனில்
எம்மிருப்பு வேண்டும், நீர்
சோரம் போயெம்மைச் 
சுரண்டி, தரிசாக்கி
நீரில்லா மண்ணாக்க 
நினைத்தால், உம் வாயில்
மண் மாரி பொழிந்து தான்
மரிப்பீர், விழியுங்கள்

எஞ்சிப் போய் ஆங்காங்கே
இருக்கின்ற எமைக்காத்து
அஞ்சாத தேச மொன்றை
அமையுங்கள், என்றைக்கும்
கண்டற் காடே தேசத்தின்
காப்பு.

2 comments:

  1. "எஞ்சிப் போய் ஆங்காங்கே // இருக்கின்ற எமைக்காத்து //
    அஞ்சாத தேச மொன்றை// அமையுங்கள்..." என்ற அறைகூவல் உலகின் செவிகளில் கேட்க நாளாகலாம். அதுவரை உயிர்தரித்திருங்கள். நாளைப் பொழுது நல்லபொழுதாகலாம். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
    Replies
    1. கனவு மெய்ப்பட வேண்டும், நன்றி நண்பரே

      Delete