உதிர்ந்த சிறகுகளின் குருதியில்
நனைந்து கிடக்கிறது நிலம்
வண்ணங்களின் சித்திரங்களுக்குப் பின்னால்
யாரும் வாசிக்காத ஒரு பழைய கதை
மண்ணின் மடிப்புகளில்
நெளிந்து கொண்டிருக்கிறது.
ஆகாயத்தின் நீலத்தை
நீ இப்போது குடிக்கிறாய்
ஆனால் உன் கால்களில்
இன்னமும் ஒட்டியிருக்கிறது
புழுதியோடு மல்லுக்கட்டிய அந்தக்
கடின உழைப்பின் ஈரம்.
தசைகள் கிழிபட்டு
முதுகெலும்புகள் நொருங்கி
உன் மெல்லிய சிறகுகள்
ஒரு கூண்டுக்குள் ஒடுங்கியது
திசைகளை அளப்பதற்காக அல்லவா?,
‘மறதி ஒரு துரோகம்’ என
உன் சிறகின் ஓரத்திலிருக்கும்
கரும்புள்ளி சொல்லாமல் சொல்கிறது.
நீ பூக்களில் தேன் தேடித் திரிகிறாய்
அந்தப் பூக்களோ
உனக்காகத் தன்னுயிர் ஈந்த
ஒரு கம்பளிப்பூச்சியின்
கல்லறையிலிருந்து முளைத்தவை
சிறகடிப்பின் ஒவ்வொரு அதிர்விலும்
மண்ணுக்குள் புதையுண்டவர்களின்
மூச்சுக்காற்று இருக்கிறது
வானம் உனக்குச் சொந்தமாகலாம்
ஆனால் உன் அடியில் ஓடும்
நிலத்தின் நரம்புகளில்
உன் பழைய வடிவத்தின்
தழும்புகள் இன்னும் ஆறவில்லை.
விடுதலை என்பது
வெறும் பறத்தல் மட்டுமல்ல
பறக்கும் திசையெங்கும்
தான் ஊர்ந்து திரிந்த பாதையையும்
உதிர்ந்து போன வாழ்வையும்
நெஞ்சில் ஏந்திச் சுமப்பதே
நினைவிருத்தல் என்பது சுமையல்ல
அதுவே சிறகுகளுக்கு
வலிமையைத் தரும் காற்று,
பட்டாம்பூச்சி ஒருபோதும்
கம்பளிப்பூச்சியை மறப்பதில்லை
ஏனெனில்,
அந்த மரணத்தின் சாம்பலிலிருந்துதான்
இந்த வாழ்வின்
வண்ணங்கள் உயிர்த்தெழுந்தன..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக