ஞாயிறு, 20 ஜனவரி, 2013

துகளாய் ஆகிடினும் துடிப்பேன்..


அண்டத்தில் உள்ளது தான்
பிண்டத்தில் உண்டென்றால்
கண்டத் தகடிரெண்டு
கலந்திணைந்த பிதிர்வு வழி
உண்டாகி வந்தேன் நான்
ஒரு மலையாய், எவ்விடிக்கும்
கண்ணைக் கசக்காத
கரும்பாறை நெஞ்சோடு,
துன்பமென்ற சொல்லென்னைத்
தொட்டுவிட ஒண்ணாமல்
என் பாட்டிலெழுந்துயர்ந்தேன்
எதற்கும் வளையாமல்,

எத்தனை பேரென்னை
இடித்தார்கள்,இடிந்தேனா
குத்துகின்ற உளிகளால்
குடைந்தார்கள், குமைந்தேனா
செத்துப்போ என்றென்னைச்
சிதைத்தார்கள், சிதைந்தேனா
சத்தால் நிறைந்த என்
சாகாவர வித்து
எத்தனையைத் தாண்டி
இடியாமல் வந்ததடி!
இத்தனையும் பார்த்து
எழுந்த வெப்பியாரத்தில்
காலம் வாயுறிஞ்சிக்
கண் வைக்க அதனுடைய
கோலமாய் நீ வந்தாய்,
கொஞ்சங் கொஞ்சமாயெந்தன்
உள்ளீட்டை அதிற் கசியும்
உயிரீரம் தனை நுகர்ந்தாய்
அள்ளிக் குடித்தாயென்
அத்தனையும், சில ஆண்டில்
வறள் நிலமாய் வந்த நீ
வளம் கொளிக்கும் நிலமானாய்

கல்லாய் இருந்த மனம்
கனிந்த பழமான நாளில்
பல்லாள் அடித்தும்
பதறாத என்னை நீ
சொல்லால் அடித்து வீழ்த்திச்
சொல்லாமற் போய் விட்டாய்
வில்லாளால் வீழ்த்தேலா
வீரத்தை உன்னுடைய
சொல் வாளைச் சுழற்றி
சுக்கு நூறாக்கி விட்டாய்

எத்தனையோ கண்டும்
இளகாத மலையாக
இத்தனையும் கடந்த நான்
இன்றைக்கு
செத்தது போல் வீழ்ந்து
சிதறித் துண்டு துண்டாய்
பொடியாய், மண்ணாகிப்
போக வழி தெரியாமல்
அடிக்கின்ற காற்றில்
அலமலந்து பறக்கின்றேன்

என்னைத் தொலைத்து விட்டு
எடுப்பாக நீ திரியும்
விண் கீழ் நீண்டு செல்லும்
வெளியொன்றில், என்றைக்கோ
ஓர் துகளாய் பறந்து வந்து
உன் கண்ணுள் விழுந்திடுவேன்
நீர் திரளும் போது
நினைவாக நான் எழுந்தால்
உறுத்தாமல் உள்ளேயே
உயிர் கரைப்பேன், கன்னத்தால்
தெறிக்கின்ற கண்ணீரில்
தீர்ப்பேனென் நீர்க் கடனை
அறிக! எனை மொண்டு
ஆண்டவளே..!

வெள்ளி, 18 ஜனவரி, 2013

அடிப்பிடிச்ச வாழ்வும் அன்பும்..

அடிப்பிடிச்சு மணக்கிறது நிகழ்வாழ்வு
அன்போடும்
துடிப்புள்ள நாடி துவண்டு
துயரடைப்பால்
வெடிப்புண்டு கசிகிறது
வெங்குருதி, நாசிக்குள்
உடைப்பெடுத்த குருதி மணம்
ஊறி மணக்கிறது

அன்பென்ற மருந்து தனை
ஆறுதற் கரண்டியினால்
என்புருக ஊட்டி விடும்
இங்கிதத்தை எதிர்பார்த்து
என்புருகும் வாழ்க்கையிது
ஏதேனும் ஓர் சொட்டு
அன்பு மணக்காத்து
அடித்தால் பட்ட மனம்
இன்புற்றுத் தவிக்கும்
இதக் கணத்தின் வரத்துக்காய்
புண்ணாகிக் கொதிக்கும்
பொறுக்கேலாக் காயத்தை
இன்னும் ஆற விட
எண்ணாமல் இழுக்கிறது 

என்னாளிலெனை நம்பும்
ஏதேனுமோர் வார்த்தை,
என்னாளிலென் மனசின்
ஈரத்தை உணருகின்ற
உன்னால் முடிகின்ற
ஓர் சமிக்ஞை, உடல்மொழியில்
என்னைப் புரிந்து விட்ட
எதுவேனுமோர் அசைவு
என்றைக்கு உனிலெழுந்து
எனை வந்து அடைகிறதோ
அன்றைக்கே மனக்காயம்
ஆற எண்ணி அசடு வைக்கும்

பழங்காயம் ஆக விட்டால்
பதிந்து விடும் நோ, பின்னர்
உளம் திருந்தி ஒரு காலம்
ஓடி நீ வந்தாலும்
பழகி நோ பழகி
பட்டு விட்ட மனம் மீண்டும்
இளகுதற்கு முடியாமல்
இரும்பாயே இருந்து விடும்

வருந்தி நீ அன்று
வாய் விட்டு அழக்கூடும்!
புரிந்தேனுனை என்று
புலம்பலாம் நீ!, அன்றைக்கு
திரும்பி வர முடிந்த
திக்கினிலே நான் இருந்தால்
திரும்பி வரப்பார்ப்பேன்
இல்லையெனில் இப்பொழுதே
தேற்றிக்கொள் உன்னை, என்
தீச்சட்டி வாய்க்காரி..!








திங்கள், 14 ஜனவரி, 2013

அப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து)


உந்தன் நினைவு வந்தால்
ஒரு கவியும் எழுகுதில்லை
எந்தன் இமை கவிந்து
இருள, துளியிரெண்டு
சிந்தி உன் சிரிப்பாய்
சிதறித் தெறிக்கிறது

எத்தனை யுகமாய் நான்
ஏந்தி வந்த புண்ணியமோ
இத்தினத்தில் இவ்வாண்டில்
எழுவன் என்று காத்திருந்து
அப்பனாய் எனைப்படைத்த
அழகேசா! எமக்கிடையில்
இப்படியே பேசாமல்
இரும்பாய் கடல் மலைகள்
தாச்சி விளையாடித்
தவிச்ச முயல் அடிச்சாலும்
நினைவுக்குள் நீயெழுந்து
நின்றால், உயிர் தவித்து
கூட்டைப் பிரித்துக்
குதித்துக் கடல் கடந்து
உன் காலைச் சுற்றித் தான்
ஓடித் திரியுதடா

உயிரங்கே போனபின்னால்
உதவாத ஐம்புலன்கள்
பதறுகின்ற புலம்பலினைப்
பற்றி, சொல்லாக்கி
ஏதோ பழக்கத்தில்
எழுதுதடா, மற்றபடி
உன்னைப் போல் மனசாகும்
உயிர் ததும்பும் கவிதையொன்றை
இன்றுவரை என்னாலே
எழுதிவிட முடியவில்லை

உன்னுடைய சிரிப்பில்
உறங்குகின்ற பேரழகில்
என்னை இழந்து விடும்
ஏதோவோர் உயிர்ப் பந்தம்
எத்தனை ஜென்மம் நான்
எழுதிக் குவித்தாலும்
பத்தியப் பட்டெனக்குள்
பாவாகா தென்பதனால்
ஆறாக உன் வாசம்
அடர்ந்து பெருகுகையில் வெறுங்
கீறு கூடப் பேனாவால்
கிழிக்க முடிவதில்லை

ஏனென்றே தெரியாமல்
இழுபடுமோர் இவ்வாழ்வில்
நான் படைத்த நல்ல உயிர்ப் பாட்டே
நீ இருக்க
வீண் தான் வெறும் பாட்டு
விடு..

திங்கள், 24 டிசம்பர், 2012

பிரிவெனும் கருந்துளை..



பிரிவு பிளந்தென்னை
விழுங்கிற்று
ஏதோ ஓர் யுகத்தில்
கண்டங்கள் பிளந்து
தேசங்களை விழுங்கியதைப் போல

இருளும்,குளிரும் அடர்ந்த
இரவுக் கனவுகளின்
மன அழுத்த நெரித்தலில்
உடல் வியர்த்து, வான் தேடி
பிரமையில்
மல்லாந்து கிடக்கின்ற மலைக்கு
ஆறுதலாய் ஒருகாலை விடிவது போல
பிரிவின் அதீத அமுக்கத்தில்
பேதலித்துக் கிடக்கும் மனசு
நீண்ட பாலைவனப் பயணத்தின்
இடைவெளியில்
கொஞ்சம் குளிர் நீரும்
நிழல் மரமும் வேண்டுவதாய்
அன்பான வார்த்தை ஒன்றுக்காய்
அல்லாடி தவம் கிடக்கிறது

வழித்தடைகளாய் நின்று பிரிகின்ற
மலைகளாலும், கடல்களாலும்
மனிதர்களால் போடப்பட்டிருக்கும்
எல்லைகளாலும்
மூட்டப்பட்டிருக்கும் பிரிவுத் தீ
கால நீட்சி எனும் காற்று
வீசி அடிக்க
மூசி மூண்டெரிகிறது

வெப்பம் தாளாமல்
மன என்பின் மச்சை
கருகத் தொடங்கி விட்ட
காலமிது
மழைலையின் சிரிப்பும்
அன்றணைத்த அன்பின் கணப்பும் தான்
உருகும் என்பின் உஷ்ணத்தில்
மூச்சுத் திணறி
தள்ளாடி வீழ்ந்து விடாமல்
தாங்கிப் பிடிக்கிறது உயிரை

எப்போதோ பெய்த மழையின்
ஈரத்தை இழுத்துவைத்துக் கொண்டு
அடுத்த மழைக்காலம் வரை
உயிரேந்தும் கற்றாளை போல
பழகிய அன்பின் நினைவுகளை
அடித்தொண்டையில் வைத்துக் கொண்டு
கம்மும் குரலை
செருமியபடி காத்திருக்கிறது
கன மனசு..

புதன், 28 நவம்பர், 2012

நினைவில் வைத்திருங்கள்..


கானகத்தின் மூச்சாய்
கடலலையின் அசைவுகளாய்
மானம் எனும் உயிரின்
மார்பாய், எம்தேச
வானத்தின் கீழ் நிற்கும்
வளியாய், வரலாறாய்
ஊனுடம்பின் ஆசைதனை
உதறி எம் மண்ணில்
மானுடம் வாழ்ந்ததென
மார்தட்டிச் சொல்ல வைத்த
எமதிருப்பின் சுவடுகளே!
எமக்காக உம் வாழ்வை
அமரத்துவமடைய வைத்த
ஆற்றல்மிகு நல்லுயிர்காள்!

தீபமாய் ஒளிருமும்
தியாகத்தின் வெளிச்சத்தில்
தாபமாய் எமக்குள்ளே
தகிக்கின்ற மண்காதல்
கலங்கரை விளக்கம் போல்
கட்பார்வைத் தூரத்தில்
துலங்குகின்ற விடுதலைக்கு
துயர் தாங்கி நடக்கிறது

இந்தக் கடல், காடு
எம்முடைய வயல்வெளிகள்
முந்தையொரு நாளிலெம்
முதுசமெனச் சொல்லும் நிலை
வந்ததெண்ண நெஞ்சின்
வயிறு பற்றி எரிந்தாலும்
சந்ததிகள் நிமிர்ந்தென்றோ
சரித்திரத்தைப் படிக்கையிலே
வந்த வழி அறிந்துங்கள்
வழியூடு நடந்து செல்ல
விந்தை நிகழ்ந்தொருநாள்
விடியும், சீக்கிரமாய்
எந்தை நிலம் எமதாகும்
என்கின்ற வாக்கினை நாம்
இந்தத் திரு நாளில்
ஏற்றுகிறோம் உம் முன்னே

கட்டிளம்வயதை காதலை உங்களின்
இட்டம் மிகுந்த வாழ்க்கையை - விட்டு நீர்
எமைக்காத்தீர் இங்கெப்படியும் நாமெழுந்து
அமைப்போமும் தேசத்தை ஆம்

சிரிக்கப் பழகுதல்..


வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்
காய்த்திருக்கும் விடுதலைப் பூ
கனியாகும் நாட்களிடை
எழுகின்ற அழுத்தங்கள்
எமைக் கொல்லும்,அக்கணத்தில்
அழுதிருப்போம் ஆனாலும்
அடுத்த நொடி சுதாகரித்து
நாமே எமைத்தாங்கி நடந்து செல்வோம்
இடைவெளியில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய் விட்டுச் சிரிக்கின்றோம்

அயர்லாந்தைத் தழுவுகின்ற
அட்லாண்டிக் கடற்கரையின்
உயரத்தில்  குருசுருவாய்
உடல் மின்னிக் கொண்டிருக்கும்
விண்மீன்களென் கண்ணில்
விழுந்தால், ஊர் வளவில்
நண்பர்கள் சேர்ந்திருந்து
நாமறிந்த கோளறிவை
அண்ணாந்து பார்த்தெமக்குள்
அடையாளம் காட்டியது
ஆண்டுகளைக் கண்டத்தை
அறித்தெறிந்து நிழலாட
கண்கலங்கும்,மறுநிமிடம்
கடைவாயில் சிரிப்பூரும்
என்னினத்தின் விதியிது தான்
என்கின்ற பெரு மூச்சில்
அக்கணமும் அறுந்து விழ
அடுத்த கணம் உருவாகும்
இக்கணம் மட்டுமே
இங்குண்மை என்கின்ற
நிமிடம்வரை நீளும்
நிலையாத தெளிவொன்றில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்

உயிரின் செவிக்கரையை
உதட்டாலே கவ்வுகின்ற
மயிர் குத்திட்டெழுந்து நிற்கும்
மண் பாட்டில்,

கடலுதட்டை
தொடுவான் கடிக்கின்ற
தொலைவில் படகொன்று
கடைசி ரெத்தச் சூரியனைக்
கடக்கின்ற பேரழகில்,

பலலெட்சம் மைல் கடந்து
பறந்து திரும்பித்தன்
நிலத்துக்கே வந்துவிட்ட
நிம்மதியில் பறவையதன்
கூட்டத்தோ டிசைக்கின்ற
குதூகலப் பாட்டுகளில்,

பாசாங்கறியாத
பால்வாயின் சிரிப்பதனில்

எம்மையறியாமலேயே
எமை மறந்து நாம் சிரிப்போம்
சிரிக்கும் போதூரின்
சில காட்சி வந்து விட்டால்
அரைச் சிரிப்போடெம் வாய்
அணையும், ஆனாலும்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்..

திங்கள், 12 நவம்பர், 2012

நிலவாய் தொடர்கிறதென் நிலம்..


அடிக்கின்ற புயல் நடுவே
ஆடுகின்ற மரத்தினது
உடைகின்ற கொப்பாக
ஓர் வாழ்வு, கள்ளடியில்
அடைகின்ற மண்டியைப் போல்
அதிற் தனிமை, ஆனாலும்
விடிவெய்தும் என் தேச
விடுதலையின் எழுகதிரை
கையிரெண்டும் அகட்டி
கால் மடக்கித் தாளிட்டு
மெய் சிலிர்க்க நாடியினை
மேற் தூக்கி அண்ணாந்து
அப்படியே கண்ணால்
அதை நுகர்ந்து பருகியெந்தன்
இப்பிறப்பைத் துறக்கோணும்
என்பதொன்றே தீராத
ஆசையடி எந்தனுக்கு
அதற்குள்ளே என் வாழ்வு
ஓசையின்றி எங்கேனும்
ஓர் கண்டத் தகட்டிடுக்கில்
ஒடிந்து வீழ்ந்துடைந்து
உரு மறைந்து போயிடலாம்

எங்கெங்கோ நானோடி
இழுபட்டுத் திரிந்தாலும்
அங்கங்கெல்லாம் என்
அழகு மண்ணின் விடுதலையை
எங்ஙனம் நானெட்டுவேன் என்பதே
என் கனா மூச்சு எல்லாமும், அடிக்கடி
வாழுகின்ற இடம் வேறாய்
இருந்தாலும் பாதைகளாய்
நீளுகின்ற வழியெல்லாம்
நிறைந்திருப்பதென் மண்ணே

மாழுகின்ற போதிலுமென்
மனதாய் நினைவாக
சூழ்ந்தெங்கும் மண் மணமே
சுற்றி வரும், ஆதலினால்
எங்கே நான் வீழ்ந்தாலும்
என் மண்ணில் தான் வீழ்வேன்
அங்கே தான் உரமாவேன் அறி..

திங்கள், 22 அக்டோபர், 2012

நீயில்லாத மழைக்காலம்..


கண்ணைத் திறந்திருந்தால்
காணாத காட்சி எல்லாம்
கண்ணையிமை மூடிக்
கதவடைக்கக் காணுகிறேன்

எண்ணங்களெல்லாம்
எழுந்தெழுந்து சிறகடித்து
வண்ணமாய் எமைக் கடந்த
வழிகளிலே பறக்க வைக்கும்
தன்மை இம்மழைக்குத்
தானுண்டு, உன்னிமையை
என்னிமையால் மூடி
இதழ் கண்ட இழுத்துறிஞ்சி
பொன்னுடலிற் பூந்தளிரின்
பூரிப்புச் சிவப்பூற
என்னடி.! என நகைக்க
இழுத்தணைத்துக் கழுத்துக்குள்
புரியாத மொழி முனகிப்
புதைப்பாயுன் புன்சிரிப்பை

அறிவேன் நான் ஆனாலும்
அறியேனாய் அடம்பிடிக்க
பொறுக்கி! என மார்பில்
பூத்திடுவாய்!,மழை வீழ்ந்து
தெறிக்கின்ற துளியில்
தெரியுதடி அக்காலம்
விரியுதடி காட்சி வெறும் அறைக்குள்
முடியாமல்
எரியுதடி தாபம் என்பெல்லாம்
விழி ததும்பிச்
சொரியுதடி கண்ணீர் சுட்டபடி
இதையந்த

அப்பாவி மழை பாவம்
அறியாமல் பொழிகிறது
எப்பாடும் அறிந்த என்
இதயத்தின் ஆண்டவரே
இப்பாவியை நீவிர்
ஏதேனும் செய்து கொள்ளும்
தப்பேதும் தெரியாத மழைக்குத்
தயை கூர்ந்து
அப்பம் கொடுத்து அருள் சொரிந்து
மனம் நிறைய
பாவ மன்னிப்பருளும்
பரமே..!

புதன், 17 அக்டோபர், 2012

வடலிகளின் வாழ்வெண்ணி..


எம் மண்ணின் குறியீடே
எப்படி நாம் மெதுமெதுவாய்
இம் மண்ணில் இடிபட்டும்
எழுந்தம் எனச் சொல்லுகின்ற
கம்பீர வரலாற்றின் காட்சி உரு வடிவே!

பறந்தடித்த ஷெல்லுக்கும்
பாய்ந்து வந்த குண்டுக்கும்
அறுத்து உன்னுடலை
அரணாகக் கொடுத்தாய் நீ
கறுத்த உன்னுடலுக்குள்
கசிகின்ற கனிவை நாம்
கள்ளாய், கிழங்காக
கண் போன்ற நுங்காக
அள்ளிக் குடித்தும் அடங்காமல்
உனை மேலும்
பணியாரம், பினாட்டென்று
பசி போகத் தின்றிருப்போம்
உனிலொடியற் புட்டாக்கி
உயிர்ச் சத்தைச் சேர்த்திருப்போம்

உயிர்த் தினவின் ஓர்மத்தை
உரமாகக் கொண்ட மண்ணில்
உயிராக, உடலாக
உனை முழுதாய்க் காப்பகமாய்
தாரை வார்த்த எங்கள்
தருவே! போர் மேகம்
ஆரைத்தான் இம் மண்ணில்
அழிக்காமல் விடவில்லை
பொழிந்தடித்த போர் மழையில்
பொசுங்கித் துடி துடித்து
அழிவடைந்த சனத்துக்குள்
அடங்குதடா உன் சனமும்

இழிவாய் எமையின்று
எல்லோரும் பார்த்தாலும்
அழிவின் சாம்பலினை
அப்பியபடி மெல்ல
வளருதற்கு எத்தனிக்கும்
வடலிகளின் வாழ்வுக்கு
உளமாரக் கை கொடுப்போம்
ஓர் விதையை நட்டிடுவோம்
எழுவோம் நாம் என்பதனை
எண்ணி...

திங்கள், 1 அக்டோபர், 2012

அழிக்கப்படும் சாட்சியங்கள்..


அலைக் கரங்களை
மார்பில் அடித்தடித்து
உரக்க அலறியது கடல்
அதன் குரலில்
இத்துணை ஆண்டுகாலக் கனவுகளும்
கண் முன்னே கலைந்து போய்
கந்தகப் புகையான ஏக்கம்
கப்பிப் போய்க்கிடந்தது

தட்டிக் கேட்க யாருமற்ற தைரியத்தில்
அதன் கறுத்த மேனியில்
சன்னங்களைக் கொட்டிப் பொழிந்து
கூத்தாடியது நிலவு

வான வல்லாதிக்கமோ
தன்னால் தீட்டப்பட்ட திட்டம்
தீரும் வரைக்கும்
ஏனிதென்று கேட்க எவரையும் விடாமலுக்கு
அடர்மெளன ஒலியால்
அனைத்தையும் மூடியது

இரவுப் படுகொலைகளின்
சாட்சிகளும், எச்சங்களும்
வெண் நுரைகளாய் அடைந்து போய்க்கிடக்கிறது
கரை முழுவதும்

மாபெரும் அவலப் பிரளயம்
அடங்கிய அதிகாலையில்
எதுவுமே தெரியாதது போல்
எழுகின்ற வெய்யோனால்
தேடி அழிக்கப் படுகின்றன
அத்தனை சாட்சியங்களும்

மீண்டும்
இருளத்  தொடர்கிறது
இரவுப் படுகொலைகள்
புலர
அழிக்கப் படுகின்றன சாட்சியங்கள்

ஆனாலும்
கடல் வற்றிப் போகாதென்ற
காலப் படிப்பினையில்
உடலைச் சுமக்கிறது
உயிர்..