Wednesday 28 November 2012

சிரிக்கப் பழகுதல்..


வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்
காய்த்திருக்கும் விடுதலைப் பூ
கனியாகும் நாட்களிடை
எழுகின்ற அழுத்தங்கள்
எமைக் கொல்லும்,அக்கணத்தில்
அழுதிருப்போம் ஆனாலும்
அடுத்த நொடி சுதாகரித்து
நாமே எமைத்தாங்கி நடந்து செல்வோம்
இடைவெளியில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய் விட்டுச் சிரிக்கின்றோம்

அயர்லாந்தைத் தழுவுகின்ற
அட்லாண்டிக் கடற்கரையின்
உயரத்தில்  குருசுருவாய்
உடல் மின்னிக் கொண்டிருக்கும்
விண்மீன்களென் கண்ணில்
விழுந்தால், ஊர் வளவில்
நண்பர்கள் சேர்ந்திருந்து
நாமறிந்த கோளறிவை
அண்ணாந்து பார்த்தெமக்குள்
அடையாளம் காட்டியது
ஆண்டுகளைக் கண்டத்தை
அறித்தெறிந்து நிழலாட
கண்கலங்கும்,மறுநிமிடம்
கடைவாயில் சிரிப்பூரும்
என்னினத்தின் விதியிது தான்
என்கின்ற பெரு மூச்சில்
அக்கணமும் அறுந்து விழ
அடுத்த கணம் உருவாகும்
இக்கணம் மட்டுமே
இங்குண்மை என்கின்ற
நிமிடம்வரை நீளும்
நிலையாத தெளிவொன்றில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்

உயிரின் செவிக்கரையை
உதட்டாலே கவ்வுகின்ற
மயிர் குத்திட்டெழுந்து நிற்கும்
மண் பாட்டில்,

கடலுதட்டை
தொடுவான் கடிக்கின்ற
தொலைவில் படகொன்று
கடைசி ரெத்தச் சூரியனைக்
கடக்கின்ற பேரழகில்,

பலலெட்சம் மைல் கடந்து
பறந்து திரும்பித்தன்
நிலத்துக்கே வந்துவிட்ட
நிம்மதியில் பறவையதன்
கூட்டத்தோ டிசைக்கின்ற
குதூகலப் பாட்டுகளில்,

பாசாங்கறியாத
பால்வாயின் சிரிப்பதனில்

எம்மையறியாமலேயே
எமை மறந்து நாம் சிரிப்போம்
சிரிக்கும் போதூரின்
சில காட்சி வந்து விட்டால்
அரைச் சிரிப்போடெம் வாய்
அணையும், ஆனாலும்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்..

No comments:

Post a Comment