Sunday 20 January 2013

துகளாய் ஆகிடினும் துடிப்பேன்..


அண்டத்தில் உள்ளது தான்
பிண்டத்தில் உண்டென்றால்
கண்டத் தகடிரெண்டு
கலந்திணைந்த பிதிர்வு வழி
உண்டாகி வந்தேன் நான்
ஒரு மலையாய், எவ்விடிக்கும்
கண்ணைக் கசக்காத
கரும்பாறை நெஞ்சோடு,
துன்பமென்ற சொல்லென்னைத்
தொட்டுவிட ஒண்ணாமல்
என் பாட்டிலெழுந்துயர்ந்தேன்
எதற்கும் வளையாமல்,

எத்தனை பேரென்னை
இடித்தார்கள்,இடிந்தேனா
குத்துகின்ற உளிகளால்
குடைந்தார்கள், குமைந்தேனா
செத்துப்போ என்றென்னைச்
சிதைத்தார்கள், சிதைந்தேனா
சத்தால் நிறைந்த என்
சாகாவர வித்து
எத்தனையைத் தாண்டி
இடியாமல் வந்ததடி!
இத்தனையும் பார்த்து
எழுந்த வெப்பியாரத்தில்
காலம் வாயுறிஞ்சிக்
கண் வைக்க அதனுடைய
கோலமாய் நீ வந்தாய்,
கொஞ்சங் கொஞ்சமாயெந்தன்
உள்ளீட்டை அதிற் கசியும்
உயிரீரம் தனை நுகர்ந்தாய்
அள்ளிக் குடித்தாயென்
அத்தனையும், சில ஆண்டில்
வறள் நிலமாய் வந்த நீ
வளம் கொளிக்கும் நிலமானாய்

கல்லாய் இருந்த மனம்
கனிந்த பழமான நாளில்
பல்லாள் அடித்தும்
பதறாத என்னை நீ
சொல்லால் அடித்து வீழ்த்திச்
சொல்லாமற் போய் விட்டாய்
வில்லாளால் வீழ்த்தேலா
வீரத்தை உன்னுடைய
சொல் வாளைச் சுழற்றி
சுக்கு நூறாக்கி விட்டாய்

எத்தனையோ கண்டும்
இளகாத மலையாக
இத்தனையும் கடந்த நான்
இன்றைக்கு
செத்தது போல் வீழ்ந்து
சிதறித் துண்டு துண்டாய்
பொடியாய், மண்ணாகிப்
போக வழி தெரியாமல்
அடிக்கின்ற காற்றில்
அலமலந்து பறக்கின்றேன்

என்னைத் தொலைத்து விட்டு
எடுப்பாக நீ திரியும்
விண் கீழ் நீண்டு செல்லும்
வெளியொன்றில், என்றைக்கோ
ஓர் துகளாய் பறந்து வந்து
உன் கண்ணுள் விழுந்திடுவேன்
நீர் திரளும் போது
நினைவாக நான் எழுந்தால்
உறுத்தாமல் உள்ளேயே
உயிர் கரைப்பேன், கன்னத்தால்
தெறிக்கின்ற கண்ணீரில்
தீர்ப்பேனென் நீர்க் கடனை
அறிக! எனை மொண்டு
ஆண்டவளே..!

No comments:

Post a Comment