ஞாயிறு, 1 ஜூன், 2025

காதலின் அழகியல்..

ஆயிரம் பெண்கள் வீதியில் நடக்கிறார்கள்

மனதிற்கு நெருக்கமானவள் மட்டும் 

அவ்வளவு அழகாய்த் தெரிகிறாள் 

-

காதல் என்பது அழகை உருவாக்கும் சிற்பி,

அது சாதாரண முகத்தில் 

விண்மீன்களை விதைக்கிறது,

கூந்தலில் கடலின் அலைகளை பின்னுகிறது

குரலில் பறவைகளின் கீதங்களை கலக்கிறது

-

அவள் அவ்வளவெல்லாம் அழகி அல்லவென 

உலகம் சொல்லலாம் 

ஆனால் என் காதல் பதில் சொல்கிறது

அழகு என்பது என் பார்வையில் பிறந்து 

காதலில் வளர்வது 

-

மழையில் நனைந்த பூமி அழகானது,

ஏனெனில் அது வானத்தின் முத்தங்களை 

ஏற்றுக்கொண்டது.

-

அதுபோல் என் காதலில் நனைந்த பெண்

அழகின் இராணியாகிறாள்

காதல் கொண்ட கண்கள் பொய் சொல்வதில்லை,

உண்மை தான் தோழி 

அழகிகள் எல்லாம் காதலிக்கப் படுவதில்லை 

ஆனால் 

காதலிக்கப்படுகின்ற ஒவ்வொருத்தியுமே 

அழகிதான்.. 

செவ்வாய், 27 மே, 2025

அறியாமையின் நதி..

நீ வருவாயா எனத் தெரியாமல்

காற்றின் கையெழுத்தில்

உன் பெயரைத் தேடுகிறேன்

மாலை வானத்தின் ஒவ்வொரு நிறத்திலும்

உன் கண்களின் நினைவுகளை

வாசிக்கிறேன்

-

எந்த வீதியின் முனையில்

உன் குரல் காத்திருக்கிறது

எந்த பூக்களின் வாசனையில்

உன் தேக மணம் மறைந்திருக்கிறது ?

-

‘காலம் ஒரு கொடூரமான கவிஞன்’

நம் சந்திப்புகளை மறந்து விடுகிறான்

நம் பிரிவுகளை எழுதுகிறான்

-

ஆனால் இந்த அறியாமையே

காதலின் அழகு

நம் இதயங்களின் புவியியல்

-

வெள்ளி நிலவின் கீழ்

நாம் சந்திப்போம் என்று

வாக்குறுதி அளிக்கும்

கடலின் அலைகள் போல

அறியாமையின் இனிய வலியுடன்

நாமும் வருகிறோம் போகிறோம்

-

ஏனெனில் காதல் என்பது

ஒரு கேள்வி மட்டுமே

பதில் கிடைத்துவிட்டால்

அதன் அழகு மறைந்துவிடும்..

ஞாயிறு, 18 மே, 2025

விடுதலை மறவன்..

நந்திநீர்க் கானல் நளிகடல் பரப்பில்

கந்துடை வேழம் கதறிய களத்து

பொங்குநீர்ப் புணரி பொருகளம் ஆக

மறம்புனை வேந்தன் மாண்புடன் நிமிர்ந்து

நெடுவரை நின்ற நிமிர்ந்தோன் ஆகி

சுடுகணை ஏந்திக் களம்புகு தானை

அடல்வலி மிக்க அஞ்சா உரத்தின்

படைபல சூழப் பகலவன் நின்றான்

-

கருங்கடல் முழக்கம் கலந்தது வானில்

தீக்கணை மாரி சிதறின பகைவர்

எரிபடை வீசிச் சூழ்ந்திடும் போதும்

கடற்புனல் பாய்ந்து கைவிடா நின்றான்

-

புலவுநீர்க் கரையில் புலியெனப் பாய்ந்து

நிலவுநீர்க் குருதி நிறைந்தவெம் மார்பில்

சுடுகணை தீர்ந்தும் களம்விடான் ஆகி

தோழரும் தானும் துயர்கொள வீழ்ந்தான்

-

கணைமழை பொழிந்து களம்விடா நின்று

புணர்கடல் ஓதம் பொருகளம் ஆக்கி

புன்னை நீழல் பொருதுவீழ்ந் தனனே

மின்னுயிர் போக மேதகு தலைவன்

-

தண்கடல் அலையின் தாழ்குரல் கேட்டு

மண்கொண்ட வீரர் மயங்கினர் நின்று

விண்ணுற எழுந்தான் விடுதலை மறவன்

எண்ணவே முடியா திடிந்தனர் மாக்கள்

-

நீலநீர்ப் பரப்பின் நெடுங்கரை தன்னில்

காலமும் கடந்து கனன்றெழு புகழோன்

ஈழமண் காக்க எழுந்திட்ட போரில்

கணைமழை தீர்ந்து களத்தினில் வீழ்ந்த

பாலைசூழ் நிலமும் பரந்துள காவும்

நீலமா கடலும் நினைவுற நிற்கும்

மாலையம் பொழுதில் மறவனை நினைந்து

காலங்கள் தோறும் கண்ணுநீர் சொரியும்..

சனி, 17 மே, 2025

முள்ளிவாய்க்கால் படுகளம்..

திரைகடல் முழங்கும் திண்மணற் பரப்பில்

கார்முகில் கவிந்த கானல் நெடுநிலை

சுடுபடு மறவர் யாக்கைகள் மடிந்து

கணைநுதி சிதறிக் கருஞ்சுடரெழுந்து

களத்தொடு கலவா களமகள் செந்நீர்

விசும்பொடு கலந்த வெம்மையின் சீற்றம்

நோக்கினென் திரும்பி நொந்தனென் நின்றே

-

கழிமுக நெய்தல் கதிர்விரி காலை

நீல்நிற வானத்து நேர்கதிர் பரந்து

அகல்வயல் ஊர்ந்த அந்திப் பொழுதில்

தானைகள் சூழத் தாக்குபடை வந்தென

கரையினில் மலிந்த களிற்றுமுக மறவர்

நுண்கூந்தல் அவிழ்ந்து நெக்குநெக்கு உருகி

மென்னடை மகளிர் அயர்வுற்று நின்றார்

-

முள்ளிதழ் அரும்பி முகிழ்த்த பொழுதின்

திரைநுரை பொங்கித் திரண்டுடல் தழுவி

நீர்சொரிந்து நைந்து நிலைகலங்கி நின்று

பொருள்புரி காட்டும் புலவுநா றுடலம்

-

பொருகளத்து எதிர்ந்த பொலிவுறு மறவர்

பகைப்புலம் புகுந்து பரிவின்றிப் பொருது

கானல் காக்கும் கடற்புள் போலவே

பிறர்க்கொடை படாஅப் பெருமித நெஞ்சொடு

உயிர்திறம் கொடாஅ உரனுடை யாளர்

-

வன்னிமர வடுப்புண் ஆறா தாங்கு

அரவுதின் றனைய அழல்புண் போலவே

களத்துறு வடுக்கள் கழிதல் இலவே

நெஞ்சுறு துயரம் நீங்குதல் இன்றி

வான்பெயல் பொழியும் வளநீர் போல

தளர்வற எழுந்து தலைப்பெய்து மீளும்

-

எஃகுடை வலத்தர் இயங்குறு களத்தில்

யாண்டுபல கழியினும் எக்கர் தந்த

மாண்புறு மறவர் மரபுவழி நின்று

தமிழியல் காக்கும் தகைசால் உளமே..

வெள்ளி, 9 மே, 2025

விடுதலையின் விலை..

கடலின் நுரையைப் போல

போர்கள் வந்து போகின்றன,

ஆனால் அலைகளின் ஆழத்தைப் போல

துயரம் நிலைத்திருக்கிறது.

-

நான் பார்த்தேன் மண்ணின் மகன்களே !

உங்கள் இரத்தம் காய்ந்த களங்களில்

புல் முளைக்கிறது,

உங்கள் எலும்புகளில் இருந்து

வெளிப்படும் வெளிச்சத்தில்

நாட்டின் புதிய கதைகள் எழுதப்படுகின்றன.

-

மரணித்த வீரர்களின் தாய்மார்களே

உங்கள் கருவறைகள்

ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும்

உங்கள் கைகளில் இருக்கும் வெற்றிடத்தை

எந்த கோட்டையும், எந்த சிலையும்

எந்த பாடலும் நிரப்ப முடியுமா?

-

இப்போது அரிசிப் பானையில்

சாம்பல் மணம்,

அவன் படுத்த படுக்கையில்

தூசியின் மெளனம்,

அவள் தொட்ட வேப்பமரத்தில்

இன்னும் ஒலிக்கிறது

திரும்பி வருவேன் என்ற

வார்த்தையின் எதிரொலி

-

மன்னர்கள் மாறலாம், கொடிகள் மாறலாம்,

ஆனால் இழப்பு நிகழ்ந்த

ஒவ்வொரு வீட்டிலும் காத்திருக்கிறது

பெயரிடப்படாத, முடிவற்ற,

நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்

-

நான் உணர்கிறேன்

தேசத்தின் விடுதலைக்கான அந்த விலை

வீரனின் மனைவியின் கண்ணீரிலும்,

மகனின் பெயரை உச்சரிக்காத

தந்தையின் உதடுகளிலும்,

உணர்வை இன்னமும்

வெளிச் சொல்லத் தெரியாத

குழந்தைகளில் பெருமூச்சுகளிலும்

காத்திருப்பின் ஊமையான

வலியில் உறைந்திருக்கிறது.

-

போர்கள் முடிவடையும்,

ஆனால் காயங்கள் ஒருபோதும்

ஆறுவதில்லை,

மண்ணின் மடியில் வீழ்ந்த

மனிதனின் இடத்தை

எந்த வெற்றியாலும் நிரப்பவிட முடியாது.

ஓ.. இதுதான் விடுதலையின் விலையா?

-

ஆனால் இப்போது நாம்

கற்றுக்கொண்டே ஆகவேண்டும்

எப்படி வெற்றிடத்துடன் வாழ்வது

எப்படி இல்லாமையின் இருப்புடன்

இணைந்திருப்பது

எப்படி எல்லாவற்றையும்

மறக்கப் பழகும் மூளையைப் பெறுவது

அல்லது நினைவுகள் எதுவும் தங்காத

பைத்திய நிலையை அடைவது..

செவ்வாய், 6 மே, 2025

மிக நீண்ட கொல்களம்..

அந்தக் கடற்கரையில் இரத்தம் உப்பாகிறது

சிதைந்த உடல்களின்

சாம்பல்கள் அலைகளாக எழுகின்றன.

நான் கேட்கிறேன்

இந்தப் பூமி இன்னும்

எத்தனை துயரங்களைத்தான் தாங்கும்?

-

பல்லாயிரம் உடலங்கள்

உலகின் நீண்ட கொல்களத்தில்

கேட்பாரற்றுச் சிதறிக் கிடந்ததை

எப்படி மறக்க முடியும்?

-

கருவறையில் கிழிக்கப்பட்ட குழந்தைகளின்

முடிவடையாத கனவுகளை

யார் பாடுவார் ?

மிதிபட்ட பூக்களின் வாசனையை

யார் நுகர்வார் ?

முள்ளிவாய்க்காலின் மணலில்

என் இனத்தின் பெயரை

யார் மீண்டும் எழுதுவார் ?

-

உலகத்தின் அமைதி

என் மக்களின் சாவில் உறங்குகிறது

அவர்களின் கண்களில்

கடைசி வெளிச்சம் இன்னும் எரிகிறது

மரணம் என்ற பறவை

எம் வானத்தை மூடியது

எம்முடைய கிழக்கில்

நீதி என்ற கதிரவன்

இன்றுவரை எழவில்லை

-

கொலையாளிகளுக்கு

வாக்களிக்க சொல்கிறார்கள்

அவர்களின் கரங்களில்

இன்னும் எம் குருதி உலர்ந்திருக்கிறது

இனவெறியின் கூத்தில்

எம் ஈழம் சிதைந்தது

இப்போது அதே கூத்தாடிகள்

நீதி பேசுகிறார்கள்

-

எனது மக்களின் தோல் உரிக்கப்பட்டது

அவர்களின் சதை வெட்டப்பட்டது

அவர்களின் எலும்புகள் உடைக்கப்பட்டது

ஆனால் நினைவு,

நினைவை உடைக்க முடியாது.

-

இன்று தமிழீழம்

ஒரு கவிதையாக வாழ்கிறது

ஒவ்வொரு சொல்லும் ஒரு சாட்சி

ஒவ்வொரு வரியும் ஒரு வடு

ஒவ்வொரு பாடலும் ஒரு போராட்டம்..

வெள்ளி, 2 மே, 2025

விதியெனச் சொல்வதா..

உன் கண்களில்

காலம் தேங்கி நிற்கிறது

நினைவுகளின் ஆழத்தில்

முகங்கள் மறைகின்றன.

-

வாழ்க்கை என்ற நதியில்

சந்திக்கும் கரைகள் நாம்

சிறிது நேரம் தொடும்

அலைகள் போல் உறவுகள்.

விதியா தற்செயலா இந்த சந்திப்புகள்?

-

யாரோ ஒருவர் வருகிறார்

யாரோ ஒருவர் போகிறார்

இடைவெளியில் வாழ்க்கை ஓடுகிறது

மணல் கடிகாரத்தின் நுண்துகள்கள் போல

-

தேடாத போதும் காண நேர்கிறது

தேடியும் காணாமல் போகிறது

நட்சத்திரங்கள்

ஒருமுறை தொடும் பாதைகள் போல

சில உறவுகள்

ஒருமுறை மட்டுமே சந்திக்கின்றன

-

முன்னரே எழுதப்பட்ட கதை அல்ல இது

ஆனால் தற்செயலின் விளையாட்டும் அல்ல

கடலில் கலக்கும் ஆறுகள் போல

நாம் யாரைச் சந்திப்போம் என்பது

இடையில் வந்த

ஏதோவோர் ஏற்பாடு தானோ..?

-

இன்று என் வாழ்வில் நீ இருக்கிறாய்,

நாளை உன் நினைவு மட்டுமே மிஞ்சலாம்

ஆனால் நம் சந்திப்பின் நறுமணம்

காலத்தின் கையில்

பொறிக்கப்பட்ட ஒரு கவிதையாய்

நாசிக்குள் ஒழிந்து கிடக்கும்

-

விதியென்று நம்பினால்

தேடுதல் தேவையில்லை,

தற்செயலென்று புரிந்தால்

ஒவ்வொரு சந்திப்பும் அற்புதம்.

-

இவ்வுலகம் ஆழ்ந்தகன்ற பெருங்கடல்

அதில் சிதறித் தெறிக்கும்

பெயரறியா துளிகள் நாம்

ஒருமுறை தன்னை

ஆரத் தழுவும் அலைகளை

மீண்டும் சந்திக்குமா கரை..?

திங்கள், 28 ஏப்ரல், 2025

இல்லியல்..

பிரிவிடைத் துயர்வரா பிணைந்த நெஞ்சம்

அணுவினுள் அடங்கா அனைத்துமாய்ப் பரவி

இல்லையாம் உடலினுள் இருப்பதாம் உணர்வு 

மூக்கினுள் நுழைதந்து முழுநிலா ஆகி

நின்னுயிர்ப் பாவி நிறைந்திடும் என்னுள் 

-

கைத்தலம் பிரிந்தும் கனவினில் தொட்டு

விரல்நுனித் தடத்தில் விரிந்திடும் வெம்மை

இசையிலா அறையினும் இதயத்தின் ஓசை

நின்குரல் தேடி நெளிந்திடும் காதில்

மின்னல்போற் தோன்றி மறையினும் நின்முகம்

கண்ணிமை நொடியில் கனற்றிடும் மனத்தில்

-

சுளையிலா நாவினும் சுவைத்திடும் இன்பம்

இதழ்ப்பரப் பெங்கும் ஈரத்தின் சுவடுகள்

இவ்வுயிர்க் கலப்பே எழுந்திடும் அமைதி

இடையிலா அறிவின் இயல்பின் உரையாடல்

தொலைவிலா அகலம் துலங்கிடும் நின்னொளி

முயங்கலில் சேர்ந்தும் முயங்கலில் பிரிந்தும்

இல்லியல் மீதே எழுகிற துளிர்ப்பு

-

உண்மையுற் றுணர்தல் ஒன்றிய மங்கலம்

உருபொடு சேர்ந்தும் உருவின்றி நின்றும்

இருமையும் கடந்த இயலுணர் அகத்தே

கொம்பினிற் தளிர்போல் குழைந்திடும் உணர்வின்

மென்மையின் தண்டாய் மிளிர்கின்ற பிணைப்பில்

பால்பெயர் கடந்த பாங்கது நிற்க,

உயிரது கரைய உணர்ச்சியில் வாழ்தல்

இவணிது கண்டேன் இதயமார் துணையே..

புதன், 16 ஏப்ரல், 2025

விழுப்புண்ணில் தேச வரைபடம்..

துப்பாக்கி முனையின் கூரிய

கத்திகளால் கிழிக்கப்பட்ட நெஞ்சில்

விழுப்புண்களை ஏந்தி நிற்கும் என்

தேசத்தின் வரைபடம் சுமக்கிறேன்

ஒவ்வொரு காயமும்

என் தேசத்தின் பெயரைச் சொல்கிறது

-

எங்கள் இரத்தம் ஒரே நிறம்

எங்கள் மரணங்கள் ஒரே மொழி

நானும் என் தோழர்களும்

உறங்கும் கனவு ஒன்றே,

நில அபகரிப்பின்

எல்லைகளைக் கடந்த நாங்கள்

மண்ணுக்குப் பதிலாக

பெயர்களை மட்டுமே சுமக்கிறோம்

-

வேர்கள் பறிக்கப்பட்ட மரங்களாய்

தூரத்து நிலத்தில் அலைகிறோம்

ஆனால் துப்பாக்கிகளுக்கிடையே

பூத்த காயங்களில் இருந்து

ஒரு புதிய பாடல் முளைக்கிறது

-

என் தோழர்கள்

சிகரங்களைக் காட்டிலும் உயரமானவர்கள்

இப்போது புல்வெளிகளின் கீழ் கிடக்கிறார்கள்

ஆழ்ந்த மௌனத்தில் உறைந்த அவர்தம் குரல்கள்

காலத்தின் செவிப்பறையில் இன்னும் அதிர்கின்றன

-

இரவில் அவர்கள் நினைவுகளாக வருகிறார்கள்

பகலில் அவர்கள்

உறுதிமொழிகளாக நடக்கிறார்கள்

விடுதலையின் அகராதியில்

அவர்களது பெயர்கள்

வினைச்சொற்களாக உள்ளன

-

இங்கு நான் புலம்பெயர்ந்த நிழல்,

ஒரு மொழியில் இருந்து

மற்றொரு மொழிக்கு அகதியாய் அலைகிறேன்

தேசம் என்பது என் தோள்களிற் சுமக்கும்

நினைவுகளின் கூட்டுத்தொகை

எம் மாவீரர்களின் கண்களில் தெரிந்த எதிர்காலம்

-

நாங்கள் நிழல்களை விட அதிகமானவர்கள்

காயங்களை விட ஆழமானவர்கள்

மரணத்தை விட நிரந்தரமானவர்கள்

ஒரு குண்டின் வழியாக நுழைந்து

வரலாற்றின் வாசல் வழியாக வெளியேறினோம்

-

பகலின் வெளிச்சம்

எங்கள் இருளை அம்பலப்படுத்தவில்லை

குண்டுகளின் சத்தம்

எங்கள் மௌனத்தை அழிக்கவில்லை

இரத்தத்தின் கணிதம்

வெறும் எண்களுக்கு அப்பாற்பட்டது

ஒவ்வொரு துளியும் ஒரு புதிய நாளின் பிறப்பு

-

மரணம் நாங்கள் கடந்த ஒரு வாசல்

விடுதலை நாங்கள் கண்ட ஒரு கனவு

இடைப்பட்ட வெளியில்

நாங்கள் தத்துவங்களாக நிற்கிறோம்

-

காலம் என்ற அமைதியான சாட்சி முன்

நின்று கேட்கிறேன்

இந்த விழுப்புண்களுக்கு என்ன அர்த்தம் ?

என் தோழர்களின் மறைவுக்கு என்ன நியாயம் ?

அவர்களின் இல்லாமை

என்னை நிரப்பும் இந்த இருட்டுக்கு

என்ன பெயர் ?

-

மண்ணின் வாசனையில்

அவர்கள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளனர்

காற்றின் இசையில்

அவர்கள் இன்னும் பேசுகிறார்கள்

விதைகளாய் புதைந்தவர்கள்

வரலாற்றின் விடிவெள்ளியாய் மீள்கிறார்கள்

இதுவே விடுதலைப் போரின் தத்துவம்

-

தோழா..

உயிரைத் தவிர இனத்தின் விடுதலைக்கு

அள்ளிக் கொடுப்பதற்கு

இனி எதுவுமே உன்னிடமில்லை

என்றான பின்னும்

அதே சமூகமே உன்னைக் கண்டுகொள்ளாமல்

கடந்து செல்லலையும் சேர்த்து

தாங்கிக் கொள்வதன் பெயர் தான்

தியாகம்..

சனி, 5 ஏப்ரல், 2025

திரும்பக் கூடும்..

வதைகளின் நினைவுகள் எனது தோலில்

அவர்களின் கோரமுகத்தை வரைந்துள்ளன

ஒவ்வொரு வடுவும் ஒரு கதை சொல்கிறது

நான் மரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக

கண்டங்களைக் கடந்தேன்

தேசங்களைத் தாண்டினேன்

-

உடைந்த என் உடல்

இந்த பனிப்பாறைகளில் தவழ்கிறது

ஆனால் என் கனவுகள்

என் மண்ணின் வெப்பத்தில் விளைகின்றன

அங்கே பனை மரங்கள்

என் வருகைக்காக காத்திருக்கின்றன

அங்கே என் காதலியின் கண்கள்

வீதிகளை நோக்குகின்றன

-

என் கைகளில் என்ன எஞ்சியுள்ளது

ஒன்றாய் நடந்த தோழர்கள் படங்கள்

மற்றும் நாங்கள் சேர்ந்து பாடிய

விடுதலையின் பாடல்கள் அவ்வளவுதான்

-

நினைவுகளின் சிறகுகளில் கனவுகளின் பாதைவழி

இரவில் நான் என் தாயகத்திற்கு திரும்புகிறேன்

அங்கே பூக்கும் பூவரசு மரங்களின் மணம்

இங்கே பனிக்காற்றின் குளிரை துடைக்கிறது

-

இந்த பனிபொழியும் தேசத்தில்

என் உடல் உறையலாம்

ஆனால் என் வார்த்தைகள்

என்றென்றும் என் மண்ணின் வெப்பத்தில்

உயிர்பெறும்

நான் இறந்தாலும்

அடுத்த தலைமுறைக்கு விடுதலையின் விதைகளாக

என் கவிதைகள் வாழும்

-

நாளை என் நாடு விடுதலை பெறுமா

கிழக்கிலிருந்து கதிரவன் உதிக்குமா

நான் அதைப் பார்க்காமல் போனாலும்

என் வார்த்தைகள் அந்த காலையை வரவேற்கும்

-

என் காதலியின் கைகள் என்னை தேடுகின்றன

எங்கள் இடையிலுள்ள பெருங்கடலிலும்

எல்லைகளிலும், தடுப்புச் சுவர்களிலும்

காதல் என்ற அந்த அற்புதமான பறவை பறக்கிறது

-

உயிரோடோ அல்லது வார்த்தைகளிலோ

என்றோ ஒருநாள்

நான் திரும்பி வருவேன்

அதுவரை

இந்த பனிப்பெருக்கிற்கிடையில்

என் தாயகத்தின் வெப்பத்தை

நான் மனதில் சுமக்கிறேன்..