ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

ஒற்றைப்பனையாய் வாழ்க்கை..

ஊரின்கோடி மயானத் தீயே
உள்ளே மனசைக் குடையும்
ஊரே எரிந்து மயானமானால்
உறக்கம் எப்படி முடியும்?

வாழ்வினிற் சோகம் வந்திடை போனால்
வலிகள் தாங்கிட முடியும்
வாழ்வே சோகம் என்பதாய் ஆனால்
வாசல் எப்படி விடியும்?

வறண்ட நிலத்தில் வாழும் உயிர்கள்
வானைப் பார்த்தே ஏங்கும்
வானும் பொய்த்துப் போனால் அவையும்
வாழ்வினை எப்படித் தாங்கும்?

எல்லாம் தீய்ந்தும் எஞ்சி நிற்கிற
ஒற்றைப் பனையாய் வாழ்க்கை
இழந்தாய் எல்லாம், தெரிந்தும் இன்னுமேன்
அணைக்கலை என்னை சாக் கை..?

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

நினைவெனும் நெருஞ்சி..

பின்னி மடித்துக் கட்டிய
நெளி முடியும், இடுப்பிற் பட்டியும்
கானக நிறத்தில் ஆடையுமாய்
கடைசியாக உன்னைப் கண்டிருந்தேன்

மீனைக் குறிபார்க்கும்
கொக்கின் கவனத்தோடு
வரைபடமொன்றில் மூழ்கி இருந்தாய்
அதிர்வு வந்த திசைநோக்கி
வெடுக்கெனக் கழுத்தைத் திருப்பும்
மரங்கொத்தியாய்
அருகே கடந்த என்னை
பாதாதி கேசமாய்
அவ்வளவு வேகமாய் அளந்தாய்

பூமலரும் ஓசையை
பூவுலகு உணர்வதில்லை ஆனால்
மெல்லென மூடித்திறந்து
ஆம்பல் மலராய்
உன் விழி அவிழ்ந்த ஓசை
என் செவிகளுக்குக் கேட்டிருந்தது

இரு வழியாய் பிரியுமுன்னான
காட்டிடை  வெளியில்
யானை லத்தி விலக்கி
குளத்தில் நீரள்ளக் குனிந்த போது
விரல் பட்டு
விரிந்தகன்ற நீர் வளையங்களில்
உன் முகந்தான் எனக்குப்
பூத்து மறைந்தது

மாலை விழுந்து மங்க
உதட்டை அவிழ்க்காத
ஒரு விதச் சிரிப்போடு
காட்டைக் கிழித்தபடி
ஒரு புறமாய் நீயும்
அருகப்பால் நானும் அணிகளோடு,
சில நாட்களின் பின்
திரும்பியவர்களில் நீயிருக்கவில்லை
காயப்பட்டிருந்தவரிலும்
காணவில்லையென்றானபோது
வங்கக்கடலில் மிதந்த கண்களுக்கு
வலுக்கட்டாயமாய் அணைகள் போட்டேன்

எதுவுமே நடவாதது போல்
அத்தனை வேகமாய் ஓடிப்போய் விட்டன
ஆண்டுகள்
ஆயினும் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
திரும்பி வராத நீ வெள்ளியாயும்
திரும்பி வந்த நான் பிணமாயும்..


வியாழன், 2 ஏப்ரல், 2015

நினைவோர் இறகு..

பனிக்காலம் கரைந்தொழுகும்
வசந்தமுன் மழைக்காலம்
இருள்வானத் தூவானம்
ஓர் மனங்கரைப்பான்
ஊசி இலைநுனிகளில்
தொங்கித் துமிக்கும் நீரை
என் இமைகளும் அப்படியே
பிரதி செய்கிறதா..?

வாழ்வோர் பறவைச் சிறகு
அதன் ஒவ்வோர் இறகும்
நினைவுகள்
நீண்ட பறப்பின் இடைவெளியில்
கழன்று வீழ்ந்தவை
மீண்டுமோர் இடைவெளியில்
முளைத்து விடுகின்றன

களைத்தோய்ந்த வேளையில்
ஆசுவாசமாய்
இறகுகளைக் கோதிவிடும்
பறவைச் சொண்டாய்
மனசு
நினைவுகளைக் கோதிவிடுகிறது

சாளரத்தின் இடைவெளியால்
கைகாட்டும் மரக்கிளையில்
சொண்டாற் சொண்டை
நீவிவிட்டபடி சோடிப் புறாக்கள்
விழி அந்தக் காட்சியை
விழுங்கவும்,
புகைத்தலை நிறுத்திய
முதல்நாள் வாயாய்
தவிக்கிறது ஏக்கத் தாபம்

பனி விழுந்தும் அது கரைந்தும்
மழை பொழிந்தும் அது வடிந்தும்
வெயிலடித்தும் அது தணிந்தும்
நீயின்றி வெறிதாய்
எத்தனை பருவங்கள்
எனைக் கடந்து போயிற்று
ஆயினுமின்னும் வானவில்லாய்
நாடியும் நரம்பாயும்
நாமிருந்த மழைக்காலம்
கூடிக் கிடக்குதடி வானில்..

திங்கள், 9 மார்ச், 2015

உறைந்த காலம்..

தொடுவானக் கரையைத்
தொட்டுவிட எத்தனித்து
எட்டியெட்டித் தினமும்
ஏங்குகின்ற கடலலையாய்
தாபம்,

உடைந்திறந்த காலத்தில்
உடைந்தறுந்த முகங்களுடன்
மேலெழுந்து வரமுடியா
மிகு ஆழக் கிணற்றுக்குள்
ஆசை,

வரவே வராத
மழைக்காலம் பார்த்தேங்கி
கடைசி நீர்த்துளியைக்
கைகளுக்குள் பொத்தியுள்ள
கற்றாளைப் பெருமூச்சாய்
காமம்,

வாழ்வே கனவான வலியில்
புலன் சிதறி
கீறலை மறந்து விட்டோன்
கிறுக்கலில் சாம்பலாய்
ஊறி வந்ததிந்த உரு..

அந்தியேட்டி ஏவறை..

வந்தான் வாழ்ந்திருந்தான் அவ்வளவே
போன பின்னும்
வாழ்வான் என்பதெல்லாம்
வாய்குதப்பும் வெற்றிலை தான்
அந்தியேட்டி ஏவறையாய் அதுவும் போம்
பின்னரென்றோ
பிள்ளை ஒருவேளை
பின்னுள்ள பெயருக்காய்
எண்ணலாம், அதுவும்
மழைப்பாட்டம் ஓய்ந்த பின்னால்
குழையாலே வடிகின்ற நீர்..

காத்திருந்து பழகல்..

காலம் எனக்குக் கற்பித்ததொன்றே தான்
காத்திருத்தல், மூச்சு
கைகாட்டி எனை விட்டு
பார்த்துக்கொள் உனையென்று
படலையைச் சாத்தி விட்டு
போகின்ற வேளைவரை
பொறுமையாய்க் காத்திருத்தல்

கையறு நிலையும்
கை விரித்து பிடரியிலே
விரலூர வருடி
விடைபெற்றுச் செல்கையிலும்,
எச்சிலைக் கூட
இறங்கவிட ஒண்ணாமல்
இறுகிப்போய்த் தொண்டை
இரும்பாய்க் கிடக்கையிலும்,
காட்சிகள் மெதுவாய்க்
கலங்கி, ஊற்று வழி
நீர்கரைந்து இமை தாண்டி
நெஞ்சில் விழுகையிலும்
காத்திருத்தல், ஏனென்றால்
என்றைக்கும் இவ்வுலகில்
மெய்ம்மை காத்திருக்க வேண்டும்..

பட்டவனே அறிவான்..

உயிர் கருகித் துடிதுடித்தும்
உடல் சிதைந்து தடதடத்தும்
ஓர் வார்த்தை சொல்லாமல்
உள்ளுக்குள் விழுங்கியது
பனி கொட்டும் தீவொன்றில்
பரதேசி ஆவதற்கா?

வாழ்வதற்கு வழி இருந்தும்
வாசல்கள் பல திறந்தும்
சலுகைக்குத் தலைசரியேன்
என்றன்று நடந்ததெல்லாம்
ஏன் நடந்தாய் வீணென்று
இன்றிவர்கள் கேட்பதற்கா?

என்னை விடு போகட்டும்..,
எத்தனை பேர் தம் வாழ்வை
அப்பிடியே கையிலள்ளி
ஆகுதியாய் வார்த்ததெல்லாம்
அழித்தவனோடு கூடி
ஆரத் தழுவுதற்கா?

வென்றால் மட்டுந்தான்
விடுதலைப் போராட்டம்
நன்றென்ற உந்தன்
ஞாயம், நியாயமில்லை
கன்றுகளை இழந்தலறும்
கண்களினைக் கண்ட பின்னும்
பசு தேடிப்பரிதவிக்கும்
பாலகவாய் பார்த்த பின்னும்
அசையாத உன்னெஞ்சின்
அழுத்தம், அழித்தோர் முன்
மசிவதன் மர்மந்தான்
மயிரளவும் புரியவில்லை..!

உன் வீட்டில் நடந்திருந்தால்
நீ பட்டுச் சிதைந்திருந்தால்
இன்றைக்கு நீ பேசாய் இணக்கமென,
ஏற்கின்றேன்
மறதியும் வாழ மாமருந்து தான்
அதற்காய்
அறணையாய் எப்படி
ஆகலாம் தோழனே..

சனி, 1 நவம்பர், 2014

போதுமினி போ..

வீண்நேரம், வெறும்பாரம்
வீழ்ந்தாலும் உடல்திருப்பி
ஏனென்று கேட்பதற்கும்
எவருமில்லாதொரு காலம்
போய்க்கொண்டிருப்பதை நீ
புரிகின்றாய், தெரிந்திருந்தும்
வாய் நிறையச் சிரிப்பு
வாழவேண்டுமெனுமெண்ணம்
ஏனுனக்கு எழுகிறது?
என்னவகை ஆசையிது?

உடல் சொல்லிப் பார்க்கிறது
உள்ளிருந்து எழத்திணறித்
தடக்கிவரும் மூச்சும்
தன்னால் முடிந்தவரை
எச்சரித்தும் உனக்கேனோ
எந்தப் பயமுமில்லை
உளம் கசியும் அன்போடு
உனையிங்கே எவ்வுயிரும்
நலம் வாழ நினைத்ததில்லை என்றும்
நன்கறிவாய் 
இருந்தும் எதை நம்பி
இன்னும் நீ நடக்கின்றாய்?

இருந்தாலும் இதே வாழ்வு
இறந்தாலும் அதுவே தான்
வருந்தியபடி இடையில்
வாசலிற் தரித்து நிற்றல் 
பேராசை மிகப்பிடித்த
பெருநோயென்றுணராயா? 

இரும்பு மனசுருக
எரிதழலும், வெளியேறா
இரணிய உயிர் பிளக்கக்
கூர்நகமும் கொண்டுன்னை
கருணைக்கொலை செய்யும்
காலத்தை இனிமேலும்
இழுத்தாலுன் முடிவு
எல்லோரும் நகைத்தெள்ளும்
அழுகுங் கறுமமாய்
ஆகிவிடுமெனுங் கணிப்பை 
காதுபடக் கேட்டுமென்ன
காத்திருப்பு? இப்போதில்

எஞ்சிப் போய்க்கிடக்கின்ற
ஏதோவோர் பெயரோடும்
அஞ்சான், எதற்குமே
அசையான்தான் ஆனாலும் 
அன்புக்கு முன்னால்
அப்படியே சரணடைந்து
என்புருக நிற்பான்
என்கின்ற நினைவோடும்
புறப்படு நீ, இனிப்போதும்
போய்விடடா சென்று விடு..

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சதுரங்கம்..

உன் வாழ்வில் ஒரு போதும்
உள் நுளையேன் என்பாள்
எனக்கும் தான் ஒரு வாழ்வு
இனி வேண்டாம் என்பான்
மனக் கண்ணுள் இருவருக்கும்
மறைந்திருப்ப தெதுவென்று
நினைவறியும், நெஞ்சம்
நிசமறியும், ஆனாலும்
தாக்கப் பட்டறிவின்
தாராள அனுபவங்கள்
தள்ளிப் போய் நில்லென்று
தவிப்போடு உடுக்கடிக்கும்

பேச்சென்னும் இன்பப்
பெருவெளியில் இருவருமே
நீச்சலடிக்கின்ற பொழுதில் முன்னாலே
சதுரங்கப் பலகையொன்றைச்
சாட்டுக்கு வைத்திருப்பர்
அவதானக் காய் நகர்த்தல்
அரங்கேறும், கருக்கலிலே
தவங்கலையும், முன்னிருந்து
தள்ளாடும் பலகையது
மாய மோகினியாய் மறைந்து விடும்
அவன் நனைவான்
அவள் தோய்வாள்
பதின்ம வயதுகளில்
பாரிதுதான் கடைசியென்று
கரமைத்துனம் செய்யும்
கதையாய், நெஞ்செரிந்தால்
இனிமேற் புகைப்பதில்லை
இத்தோடு, என அன்றை
அவ்வேளை கடத்துகின்ற
ஆறுதலாய் நாள் முடியும்

மறுநாள் இல்லையெனின்
அதன் மறுநாள் மறுபடியும்
செருமலுடன் இருவருவருமே
சினைக்காமச் செருக்களத்தில்,
அதே சதுரங்கம், அதே காய்நகர்த்தல்
நனைந்தும் தோய்ந்தும்
நாள் முடிய, வேதாளம்
பனையென்று முருங்கையிலே ஏறும்
மறுபடியும்...

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஒவ்வொரு குழந்தையிலும் நீ..

இம்முறையும் வெயில்
விளாசி அடித்தது
இலைகள் பழுத்து விழுந்தன
புற்கள் கருகிப் போயின
பின்னர் மழை
குருத்துகளும், பூக்களுமாய்
மரங்கள்
புற்களும் பசுமையாய்,
காற்றோடு குளிர் ஆரம்பிக்கிறது
மறுபடியும் குளிராடையைப்
போர்த்தத் துவங்கி இருக்கிறேன்
இப்படியாய்
பருவங்கள் மாறி மாறி
பல ஆண்டுகள்
ஆனால்
நீ தான் இன்னும் என்னிடம் வரவில்லை

இன்றும் கூட என்னைப் பார்த்து
கை காட்டிச் சிரித்துப் போன
அந்தக் குழந்தையின்
கண்களிலும் உன்னைக் கண்டேன்
இங்கு நான் காண்கிற
ஒவ்வொரு குழந்தையிலும்
ஏதோ ஒரு வடிவத்தில்
எப்படியோ நீ இருந்து விடுகிறாய்

அயர்லாந்தின்
லிவி நதி பாய்கின்ற கரையின்
நடைபாதையில் ஒரு கடுவன் குட்டி
தன் தந்தையின் தோள்களில் ஏறியிருந்து
எண் திசைகளுக்கும் கை காட்டி
கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்
பேசும் கண்களோ சிரிப்போ
ஏதோ உன் சாங்கம் அவனிலும்

என்னையே அறியாமல்
என் தோள்களையும் நெஞ்சையும்
தடவிப் பார்த்த போது
நீயும் என் தோள்களில் இருந்தாய்
நிறையக் கேள்விகள் கேட்டாய்
எல்லாவற்றுக்கும்
நீண்ட நேரம் ஆசையாய்ப்
பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்
உன்னிடம் பேசி விட்டுத் திரும்பிய போது
அருகே நின்றிருந்த ஒருவர்
தன் அறிமுக அட்டையை என்னிடம் கொடுத்தார்
திருப்பிப் பார்த்தேன்
மிக நல்ல மனிதர் போல
ம்.. மனநல மருத்துவர்

நதி பாலத்தைக் கடந்து
நுரைத்துப் பாய்கிற சந்திக்கருகில்
வீதிக் கலைஞனொருவன்
பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்
அருகே அவனது சின்ன மகன்
அவ்வளவு அழகாகத் தலையாட்டி
ரசித்தபடி,
அந்தக் குழந்தையின்
உதடுகளும், இமைகளும்
உன்னதைப் போலவே இருந்தது
அந்த வேளையில் நான்
அவனுடைய தந்தையானேன்

அடம் பிடித்தபடியும்
துள்ளிக் குதித்தபடியும்
தன் தந்தையுடன் செல்கின்ற
ஒவ்வொரு
செல்லக்குட்டி மகனின் கண்களும்
என்னைப் பார்த்துச் சொல்கிறது
இந்தக் கணத்திலே
நீ தான் என் அப்பாவாக இருக்கிறாய்..