Tuesday 7 April 2015

நினைவெனும் நெருஞ்சி..

பின்னி மடித்துக் கட்டிய
நெளி முடியும், இடுப்பிற் பட்டியும்
கானக நிறத்தில் ஆடையுமாய்
கடைசியாக உன்னைப் கண்டிருந்தேன்

மீனைக் குறிபார்க்கும்
கொக்கின் கவனத்தோடு
வரைபடமொன்றில் மூழ்கி இருந்தாய்
அதிர்வு வந்த திசைநோக்கி
வெடுக்கெனக் கழுத்தைத் திருப்பும்
மரங்கொத்தியாய்
அருகே கடந்த என்னை
பாதாதி கேசமாய்
அவ்வளவு வேகமாய் அளந்தாய்

பூமலரும் ஓசையை
பூவுலகு உணர்வதில்லை ஆனால்
மெல்லென மூடித்திறந்து
ஆம்பல் மலராய்
உன் விழி அவிழ்ந்த ஓசை
என் செவிகளுக்குக் கேட்டிருந்தது

இரு வழியாய் பிரியுமுன்னான
காட்டிடை  வெளியில்
யானை லத்தி விலக்கி
குளத்தில் நீரள்ளக் குனிந்த போது
விரல் பட்டு
விரிந்தகன்ற நீர் வளையங்களில்
உன் முகந்தான் எனக்குப்
பூத்து மறைந்தது

மாலை விழுந்து மங்க
உதட்டை அவிழ்க்காத
ஒரு விதச் சிரிப்போடு
காட்டைக் கிழித்தபடி
ஒரு புறமாய் நீயும்
அருகப்பால் நானும் அணிகளோடு,
சில நாட்களின் பின்
திரும்பியவர்களில் நீயிருக்கவில்லை
காயப்பட்டிருந்தவரிலும்
காணவில்லையென்றானபோது
வங்கக்கடலில் மிதந்த கண்களுக்கு
வலுக்கட்டாயமாய் அணைகள் போட்டேன்

எதுவுமே நடவாதது போல்
அத்தனை வேகமாய் ஓடிப்போய் விட்டன
ஆண்டுகள்
ஆயினும் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
திரும்பி வராத நீ வெள்ளியாயும்
திரும்பி வந்த நான் பிணமாயும்..


1 comment:

  1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete