Saturday 1 November 2014

போதுமினி போ..

வீண்நேரம், வெறும்பாரம்
வீழ்ந்தாலும் உடல்திருப்பி
ஏனென்று கேட்பதற்கும்
எவருமில்லாதொரு காலம்
போய்க்கொண்டிருப்பதை நீ
புரிகின்றாய், தெரிந்திருந்தும்
வாய் நிறையச் சிரிப்பு
வாழவேண்டுமெனுமெண்ணம்
ஏனுனக்கு எழுகிறது?
என்னவகை ஆசையிது?

உடல் சொல்லிப் பார்க்கிறது
உள்ளிருந்து எழத்திணறித்
தடக்கிவரும் மூச்சும்
தன்னால் முடிந்தவரை
எச்சரித்தும் உனக்கேனோ
எந்தப் பயமுமில்லை
உளம் கசியும் அன்போடு
உனையிங்கே எவ்வுயிரும்
நலம் வாழ நினைத்ததில்லை என்றும்
நன்கறிவாய் 
இருந்தும் எதை நம்பி
இன்னும் நீ நடக்கின்றாய்?

இருந்தாலும் இதே வாழ்வு
இறந்தாலும் அதுவே தான்
வருந்தியபடி இடையில்
வாசலிற் தரித்து நிற்றல் 
பேராசை மிகப்பிடித்த
பெருநோயென்றுணராயா? 

இரும்பு மனசுருக
எரிதழலும், வெளியேறா
இரணிய உயிர் பிளக்கக்
கூர்நகமும் கொண்டுன்னை
கருணைக்கொலை செய்யும்
காலத்தை இனிமேலும்
இழுத்தாலுன் முடிவு
எல்லோரும் நகைத்தெள்ளும்
அழுகுங் கறுமமாய்
ஆகிவிடுமெனுங் கணிப்பை 
காதுபடக் கேட்டுமென்ன
காத்திருப்பு? இப்போதில்

எஞ்சிப் போய்க்கிடக்கின்ற
ஏதோவோர் பெயரோடும்
அஞ்சான், எதற்குமே
அசையான்தான் ஆனாலும் 
அன்புக்கு முன்னால்
அப்படியே சரணடைந்து
என்புருக நிற்பான்
என்கின்ற நினைவோடும்
புறப்படு நீ, இனிப்போதும்
போய்விடடா சென்று விடு..

6 comments:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அருமையான வரிகள். இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்கள் மேலான இணைப்பிற்கும் கருத்திற்கும்
      திரு

      Delete
  4. http://blogintamil.blogspot.fr/2014/11/blog-post_14.html// சென்று பார்க்க.

    ReplyDelete