பசியாறும்
ஒவ்வொரு யானையின் வயிற்றிலும்
துளிர் விடுகிறது
நாளைக்கான அடர்காடு..
அருகில் இல்லை
ஆனால்
நாசியில் இன்னும்
உன் வாசம்
தொடுதல் இல்லை
ஆனால்
விரல் நுனியில் இன்னும்
உடற் சூடு
பேசுவதில்லை
ஆனால்
எங்கிருந்தோ கேட்கும்
உன் குரல்
பார்ப்பதில்லை
ஆனால்
ஏதோ ஒரு கண் சிமிட்டலில்
உன் முகம்
சுவைத்தலும் இல்லை
ஆனால்
உதட்டில் கசிகிறது
நினைவின் ஈரம்
இப்படித்தான் கண்ணம்மா
உண்மை உறவு மெளனத்தில் நிகழும்..
வெளியில் தெரியாத
விளக்கே உளவின்
உளியில் எமை வார்த்த
கிழக்கே
எளிதில் புரியாத
மலைப்பே தமிழன்
அழியாப் புகழொற்றின்
தலைப்பே
பெருங் கடலின் அடியில்
பெயரின்றி ஓடிநின்ற
உருவங் காட்டாத ஆறே
ஒன்றாக நின்றோர்க்கு
உருகும் மெழுகாகி
உள்ளத்தைக் காட்டுமோர் பேறே
தேர் தெரியும் கண்ணில்
தெரியாத சில் அச்சாய்
போர் நடத்தி சென்றிட்ட
புதிரே
யார் அறிவார் முடிவை
என்றின்னும் சொல்கின்ற
ஊர்சுவடும் மறைவான
ஒளியே
நீருள்ளால் நெருப்போடு
நீந்திக் கடக்கின்ற
போர்முறை சித்தித்த பொறையே
தலைவனின் நிழலாகத்
தாளாத வானாக
நிலையென்றும் தளராத
நிறையே
பொட்டில் உந்தனது
போம் வழியைச் சுமந்து கொண்டே
எட்டி நடக்குமெங்கள்
பயணம்,
எது வந்த போதும்
என்றைக்கும் மாறாது
ஒரு போதும் சிதறாது கவனம்
எந்தக் கனவுக்காய்
இத்தனை நாள் நடந்தோமோ
அந்தக் கனவை நாம்
அடைவோம்,
எந்தக் கனவுக்காய்
இத்தனையைச் சுமந்தோமோ
அந்த நிலத்தை நாம் பெறுவோம்
எம்மானம் மீட்டெடுத்து
எமக்கான தமிழ் நிலத்தில்
அம்மானை பாடி
ஆடிக் களித்திடுவோம்
எம்மானம் மீட்டெடுத்து
எமக்கான தமிழ் நிலத்தில்
அம்மானைப் பாடி
ஆடிக் களித்திடுவோம்..
நெய்தல் நிலம் உற்பவித்த
எங்களின நாயகனே
உய்யவென காணும் வழி நீ ஐயா
உந்தன்
பாதை ஒன்றே மீளும் வழி தானையா
கண்ணிறைய உன் நினைவு
காலமெல்லாம் உன் கனவு
மண்ணிறைய தேசம் இனி பூக்குமே
இதழ் ஒவ்வொன்றையும்
உந்தன் எண்ணம் ஆக்குமே..
ஈழமண்ணின் காற்தடமே
எம்மினத்தின் போர்க்குணமே
ஆளும் தமிழ் வாழும் வரும் காலமே அதில்
கோலம் பெறும் ஆகும் தமிழ் ஈழமே..
கண்ணெட்டிய தூரம்வரை
யாருமற்ற மலைப்பாதை
என்பைத் துளைக்கும்
குளிர்ப் புகை மண்டிய
சறுக்கு வழியில்
வேறெவர் தான் வெளியே வருவார்
என்றெண்ணியபடி
வலது புறம் திரும்புகிறேன்
ஆபத்தான ஏறுவழிப் பாதையில்
எதையோ சுமந்து கொண்டு
ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறான்
மாலை மங்கி இருள்கிறது
உப்புக் காற்றின் ஊழையும் குளிரும்
காதையும் தோலையும் பிளக்க
எவருமற்ற அட்லாண்டிக் கடற்கரையில்
சூன்யமான வாழ்வின்
சுவையற்ற சுவையை
கண்ணெதிரே சூரியனை விழுங்கும்
கடல் போல்
தொண்டையுள் மிண்டி விழுங்குகிறேன்
பார்க்கப் பார்க்க விரியும்
தொடுவானக் கடலின் கரை மணலில்
ஒற்றைப் புள்ளியாய்
நான் மட்டுமே இருப்பதாய்
எண்ணும் பொழுதில்
வெகு தூரத்தில்
கரும்புள்ளியாய் ஓர் படகு
கடைசி நேரச் சூரியனைக் கடக்கிறது
தூக்கம் அறுந்த நள்ளிரவில்
இனியும் புரண்டுபடுக்க இயலாமல்
பற்கள் நடுங்கி அடித்துக் கொள்ள
வீட்டருகே ஓடும் ஆற்றங்கரை வழியால்
தனியே நடந்து செல்கிறேன்,
அரவமற்ற இருள்
உலகே உறைந்து உறங்கும் வேளையில்
நான் மட்டும் விழித்திருகிறேனோ..
எண்ணியபடி
விரிந்து கிடக்கும் வானத்தை
வெறித்துப் பார்க்கிறேன்
விண்மீன்கள் போல்
நாலைந்து விமானங்கள்
இங்கிருதங்காய்
அங்கிருந்திங்காய்
வேகமாய் தம் பாதையில் விரைகின்றன
நண்பா
நானற்ற காலத்தில்
எப்படி வாழ்வரோ
என்ன தான் ஆகுமோ
அதிகமாய் ஏதும் எண்ணாதே
நீ விடைபெற்ற
மறு கணத்தில் இருந்தே
எதுவுமே நடவாதது போல்
உலகு தன்பாட்டில் உருளும்..
தொலைநோக்கியால்
காலத்தை ஊடுருவிப் பார்க்கிறான் மனிதன்
கடந்த காலத்தை
நிகழ்காலத்தில் இருந்து பார்க்கிற
விஞ்ஞான அதிசயம்
பூமி தோன்று முன் தோன்றிய ஒளி
பலகோடி ஆண்டுகளைக் கடந்து
இப்போது தான்
மனிதக் கண்ணை எட்டுகிறது
தோண்டத் தோண்ட
அண்டங்கள்
தோன்றிக் கொண்டே இருப்பதாக
வியக்கிறது விஞ்ஞானம்
மனிதனின்
நேரக் கணிப்பானுள்
அடங்கிற ஒன்றா
கட்டற்று விரிகிற காலம்?
துருவத் துருவ
விரிந்து கொண்டே தான் இருக்கும்
அண்டமும் விஞ்ஞானமும்
தேடலும் அண்டமும் முடிவிலி
இதில் நமது வாழ்வென்பது
கலைந்து செல்கிற மேகம் அல்லது
மங்கலான கனவு..
குப்பி விளக்கே இருந்த போதிலும்
கொட்டிக் கிடந்த மகிழ்ச்சி முகத்தினில்
அப்பிக்கிடந்த காலம் போனதா
அந்தக் காலம் கனவா, மீளுமா..
கொட்டும் மழையிலும், குண்டு மழையிலும்
தெப்பமாய் நனைந்தும் வீரர் வாழ்கையில்
மனசில் வழிந்த சுதந்திரம் இன்று
சொட்டுமில்லையே, என்னதான் ஆனது..?
உலகின் நீண்ட பிண அறையாக
ஓலமாய் வழிந்த கடற்கரை மீதில்
ஒருபேர் இனத்தின் விடுதலைக் கனவில்
உலகே சேர்ந்து திராவகம் ஊற்றினீர்
அண்ணன் வரைந்த மாதிரி நாட்டை
அனைவரும் சேர்ந்து கட்டுவோமென்னும்
எண்ணம் புள்ளியில் சேர்ந்திடும் ஓர்நாள்,
எவர் தடுத்தாலும் தமிழர் தேசம்
எதையும் தாண்டி மலர்ந்திடுமென்பது
என்றோ விதிக்கப்பட்டது
அறிக..
இளமைக்கும் முதுமைக்கும்
நடுவில் நிற்றல்
எவ்வளவு நொடிந்தாலும் அதையும் கற்றல்
அழகுக்கும் அன்புக்கும்
இடையில் சுற்றி
வாழ்வுக்கு எதுவென்ற
வழியைப் பெற்றல்
காசென்று காசென்று
ஓடித் தேய்ந்து
யோசிக்க வாய்ப்பின்றி
உடலம் நொய்ந்து
பேசவே ஆளின்றி
முடிவில் எல்லாம்
கடதாசி தானென்று
புரிந்து கொள்ளல்
நாக்கிற்கும், மனசுக்கும்
இடையிற் சொல்லை
நடப்பதற்குப் பழக்கிடுதல்
குரலைத் தாழ்த்தி
ஆளுக்காள் தேவையுடை
மொழியைத் தேர்ந்து
உரைப்பதற்குத் தெரிந்திடுதல்
இதனின் போது
சுயத்திற்கும் அறிவிற்கும்
இடையில் தோன்றும்
பாதைதனைக் கண்டடைதல்
கொடுப்புப் பல்லை
தெரியாமற் கடித்தபடி
அதன் மேல் போதல்
காமமும் காதலும்
பதின்மம் போல
ஆமாம் உண்டு தான்
ஆனால் இப்போ
ஓமகுண்டத்தை உள்ளே கட்டி
உள்வட்ட முதிர்விற்குள் எரித்தல்
முன்போல் அவிப்பொருட்கள்
தேடுகின்ற மனம்வேறின்றி
புகைந்தடங்கி படிப்படியாய்
பழகிப் போதல்
நாற்பதுகள் நானறிய
வயதில் அழகு
போர்க்களத்தில் பூப்பறிக்கும்
தெளிவின் கனிவு ..
விதைத்தலும் இல்லை
அறுத்தலும் இல்லை
எங்கும் சேமித்தலும் இல்லை
உணவின்றி இறந்ததென எவையுமில்லை
வானளவு சுதந்திரமாய் வாழ்க்கை
பறவைகள்..