புறப்படுகையில்
உன் தயிர்ச்சட்டியிலிருந்து
ஒரு துளி தந்தாய்.
இந்நிலத்துப் புல்லை மேய்ந்த
பசுக்களின் ஆறிய பாலில்
அதனைச் சேர்த்தேன்,
முதலிரவு
விடிந்தபோது
உன் கைமணத்தில் தோய்ந்திருந்தது.
துவைத்த போர்வையை
இடமாய் நீ திருகுவாய்
வலமாய் நான்
முறுக்கேறிக் குறுகி வர
பிழிநீர் உன் மணிக்கட்டுகளில் வழிய
என் விரற்கணுக்கள்
உன்னுடையவற்றில் மோதும்.
இன்று
நமக்கு நடுவே கடல்
நாளும் இறுகுகிறது
என்றாவது
இதனையும் மடித்தபடி நெருங்குவோம்,
முடிவில்
என் மூலைகளை
உன்னிடம் ஒப்படைப்பேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக