Wednesday, 16 November 2022

உலகு தன்பாட்டில் உருளும்..

 கண்ணெட்டிய தூரம்வரை 

யாருமற்ற மலைப்பாதை

என்பைத் துளைக்கும் 

குளிர்ப் புகை மண்டிய 

சறுக்கு வழியில் 

வேறெவர் தான் வெளியே வருவார் 

என்றெண்ணியபடி 

வலது புறம் திரும்புகிறேன் 

ஆபத்தான ஏறுவழிப் பாதையில் 

எதையோ சுமந்து கொண்டு 

ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறான் 


மாலை மங்கி இருள்கிறது 

உப்புக் காற்றின் ஊழையும் குளிரும் 

காதையும் தோலையும் பிளக்க 

எவருமற்ற அட்லாண்டிக் கடற்கரையில் 

சூன்யமான வாழ்வின் 

சுவையற்ற சுவையை

கண்ணெதிரே சூரியனை விழுங்கும் 

கடல் போல் 

தொண்டையுள் மிண்டி விழுங்குகிறேன் 

பார்க்கப் பார்க்க விரியும் 

தொடுவானக் கடலின்  கரை மணலில் 

ஒற்றைப் புள்ளியாய் 

நான் மட்டுமே இருப்பதாய் 

எண்ணும் பொழுதில் 

வெகு தூரத்தில் 

கரும்புள்ளியாய் ஓர் படகு 

கடைசி நேரச் சூரியனைக் கடக்கிறது 


தூக்கம் அறுந்த நள்ளிரவில்

இனியும் புரண்டுபடுக்க இயலாமல் 

பற்கள் நடுங்கி அடித்துக் கொள்ள 

வீட்டருகே ஓடும் ஆற்றங்கரை வழியால் 

தனியே நடந்து செல்கிறேன், 

அரவமற்ற இருள்

உலகே உறைந்து உறங்கும் வேளையில் 

நான் மட்டும் விழித்திருகிறேனோ.. 

எண்ணியபடி 

விரிந்து கிடக்கும் வானத்தை 

வெறித்துப் பார்க்கிறேன் 

விண்மீன்கள் போல் 

நாலைந்து விமானங்கள் 

இங்கிருதங்காய்

அங்கிருந்திங்காய் 

வேகமாய் தம் பாதையில் விரைகின்றன


நண்பா

நானற்ற காலத்தில்

எப்படி வாழ்வரோ 

என்ன தான் ஆகுமோ 

அதிகமாய் ஏதும் எண்ணாதே


நீ விடைபெற்ற 

மறு கணத்தில் இருந்தே 

எதுவுமே நடவாதது போல் 

உலகு தன்பாட்டில் உருளும்.. 



No comments:

Post a Comment