Friday, 17 January 2025

மாற்றமும் மாயை தானோ..

வானிலே மின்னும் மேகம் வழிகளில் நிழலைத் தந்து

கானலாய்க் கரைந்து போகும் காட்சியைக் கண்டு நின்றேன்

தேனெனத் திரண்ட வாழ்வும் திசையெலாம் சிதறிப் போக

ஞானமே துணையாய்க் கொண்டு நான்மறை உணர்ந்து நின்றேன்

-

பூவிதழ் சிதறும் போதும் புனலிடை மிதக்கும் போதும்

காவியம் படைக்கும் வண்ணம் கவிதையாய் மலர்ந்த போதும்

ஆவியின் பயணம் தன்னில் அழகெலாம் கனவே யென்று

மேவிய பொழுதி னாலே மெய்யுணர் வெய்தி னேனே

-

காதலென் றெழுந்த போதும் கனவெனத் தோன்றும் போதும்

ஓதிய கலைகள் யாவும் உணர்வினில் தேய்ந்த போதும்

சோதனை முடிவில் கண்ட துணிபெலாம் பொய்யே யென்று

தீதறப் புரிந்து கொண்டேன் திக்குகள் பட்ட தாலே

-

மண்ணிலே விதைத்த நீரும் மலரெனப் பூத்த வானும்

கண்ணினால் காணும் யாவும் கருத்தினில் தேய்ந்து போகப்

பண்ணிசை பாடி நின்ற பறவையும் காலம் என்னும்

வெண்ணிலா வெளியில் நின்று வீழ்ந்திடும் நேரம் கண்டேன்

-

நேற்றென வந்த தெல்லாம் நினைவிடை மறைந்து போக

ஆற்றலாய் நின்ற யாவும் அலைகடல் நுரையாய்க் காண

தோற்றமும் ஒளியும் கொண்ட தூயவெண் பிறையும் கூட

மாற்றமே உலக மென்னும் மறைபொருள் உணர்த்திற் றன்றே

No comments:

Post a Comment