Friday, 31 January 2025

தாயகத் தாகம்..

கானப்பறவை கதிரவன் நோக்கி

ஏங்கி நிற்கும் இயல்பினைப் போலவும்

மலைவாழ் யானை மரங்களை நோக்கி

தளைபட்டிருந்து தவிக்கும் தன்மையும்

நீர்வாழ் மீனினம் நெடுங்கடல் நினைந்து

தூண்டில் பட்டுத் துயருறும் போன்று

மண்ணில் வாழ்தல் மனம்கொள்வதிலையே

விண்ணைப் போல விரிந்த நெஞ்சினேன்

தாயக மீட்பில் தணியா வேட்கையேன்

பாடல்பாடிப் பரிதவிப்பேனே..

Thursday, 30 January 2025

தொன்மைத் தீ..

தொன்மை உலைக்களத்தின் ஓரத்தில்

முன்னோர் நெருப்பின் நினைவு

இன்னும் என் விரல்களில் துடிக்கிறது

ஒவ்வொரு பொறியிலும் ஒரு கதை

தொன்று நிலைத்த இரும்பின் மௌனம்

உலைக்களத்து நெருப்பில் உருகி

புதிய வடிவம் பெறும் நொடியில்

புதைந்து கிடந்த காலம் விழித்தது

துருவும் காற்றில் துடிக்கும் சுடரில்

துருத்தியின் மூச்சில் துள்ளும் தீயில்

கறுப்பு இரும்பின் கனவுகள் கரைந்து

செந்நிற ஊற்றாய் செழித்து வழிந்தன

எத்தனை தலைமுறை எத்தனை கைகள்

இந்த நெருப்பை ஏந்தி வந்தன

குளிர்காலக் காலைப் பனியில் நடுங்கி

குடிசையின் அடுப்பில் குடியேறியது

மூதாதையரின் முதல் கண்டுபிடிப்பு

மனிதக் கைகளின் முதல் ஆயுதம்

காடுகளை வெட்டி கனவுகள் விதைத்த

காலத்தின் முதல் வெளிச்சம்

சமவெளிக் குடியிருப்பில் சமைந்த

முதல் உணவின் மணம் இன்னும்

புகையின் நினைவில் படர்கிறது - அதன்

சாம்பலில் புதைந்த சரித்திரம் பேசுகிறது

பண்டைய பயிர்களின் பச்சை நினைவில்

பருவம் தவறாமல் பாய்ந்தெழுந்த

வெப்பத்தின் விதைகள் வேர்விட்டு

விளைந்த விடியல்கள் விரிகின்றன

கல்லில் தீப்பொறி கண்டெடுத்த நாளின்

கணநேர வியப்பில் கண்விழித்த

மனித இனத்தின் முதற் கனவு

மண்ணில் வேரூன்றி மரமாய் வளர்ந்தது

அடுப்பங்கரையில் அமர்ந்து கேட்ட

பழங்கதைகளின் பரம்பரை மரபில்

நெருப்பின் நாவில் நீண்ட நினைவில்

நிகழ்காலம் நெய்யப்படுகிறது

இப்போதும் உலைக்களத்தின் ஓரத்தில்

இளைஞன் ஒருவன் நின்று

முன்னோர் விட்டுச் சென்ற

தீயின் கதையைத் தொடர்கிறான்..

Monday, 27 January 2025

தனிமையின் விண்மீன்..

அந்த விண்மீன்

எப்போதும் தனியாகத்தான் இருக்கிறது

அதன் ஒளியும் அதன் வலியும் ஒன்றுதான்

ஆயிரம் விண்மீன்கள் சூழ இருந்தும்

அது தனது தனிமையை விரும்புகிறது.

எத்தனை சாம்பல் மேகங்கள்

அதன் கண்களை மறைக்க முயன்றன

எத்தனை கறுப்பு இரவுகள்

அதன் ஒளியை விழுங்க முயன்றன

ஆனால் அந்தக் கனல் மீன்

இன்னும் எரிகிறது, பிரகாசிக்கிறது.

அது காதலர்களின் விண்மீன்

பிரிந்தவர்களின் விண்மீன்

எதிர்பார்ப்பவர்களின் விண்மீன்

கடலின் ஆழத்தில் மிதக்கும் மீனவர்களின்

கண்களில் தெரியும் ஒளி அது

தொலைந்து போன வழிப்போக்கர்களின்

நெஞ்சில் துடிக்கும் நம்பிக்கை அது.

அதன் தனிமை எனக்குத் தெரியும்

நானும் ஒரு விண்மீன் தான்

பூமியில் தனியாக எரியும் விண்மீன்

என் வார்த்தைகள் என் ஒளி

என் கவிதைகள் என் கதிர்கள்.

நள்ளிரவில் நான் பார்க்கிறேன்

அந்த விண்மீனின் தனிமையை

அது என் தனிமையை பார்க்கிறது

நாங்கள் இருவரும் புரிந்து கொள்கிறோம்

மௌனத்தின் மொழியை

வலியின் வரலாற்றை

ஒளியின் இரகசியத்தை.

எங்கோ ஒரு காதலி காத்திருக்கிறாள்

அந்த விண்மீனைப் பார்த்தபடி

எங்கோ ஒரு கவிஞன் எழுதிக்கொண்டிருக்கிறான்

அந்த விண்மீனை நினைத்தபடி

எங்கோ ஒரு புரட்சியாளன் நடந்து கொண்டிருக்கிறான்

அந்த விண்மீனை நம்பியபடி.

விண்ணின் கருமையில் ஒளிரும்

அந்தத் தனி விண்மீன்

நமது தனிமையின் வேர்களை

நமக்குக் காட்டுகிறது

நமது வலிமையின் ஆதாரத்தை

நமக்குப் போதிக்கிறது.

இறுதியில் நாம் அனைவரும்

தனித்தனி விண்மீன்கள் தான்

ஒவ்வொருவரும் தனித்து ஒளிர்கிறோம்

ஒவ்வொருவரும் தனித்து எரிகிறோம்

தனிமையின் வலிமையை, ஒளியின் நேர்மையை

இருளின் தேவையை, காதலின் நித்தியத்தை

விண்மீன் சொல்லிக் கொண்டிருக்கிறது

காதுகொடு கேள்

இது தான்

அந்த விண்மீனின் பாடல்

நமது பாடல், தனிமையின் சங்கீதம்

ஒளியின் கவிதை..

-திரு

Thursday, 23 January 2025

அன்பின் ஐந்திணை..

அகத்திணைத் தொடர்நிலைச் செய்யுள்கள்

---

குறிஞ்சித் திணை - கந்தருவ மணத்துறை 

யாஅம் காதல் கொண்டனம் அவள்கண்

மாஅல் கொண்ட நிலவொப்ப முகத்தள்

வேஎய் அன்ன மெல்விரல் நுடங்க

தேஎம் பாய்ந்த தீங்குரல் பாட

காந்தள் மலரும் பொழிலிடைக் கண்டேன்

வண்டறை பொழுதில் வந்தனள் நின்றாள்

பண்டைநாள் முதலே பயின்றது போலப்

புணர்ந்தனம் யாமே புதுவதின் மகிழ்ந்தே

-
முல்லைத் திணை - தலைவன் வரவு எதிர்கோள் துறை 

காஅர் கொண்ட கார்முகில் போல

நீலம் துளும்பும் நெடுங்கண் பெண்ணே

மான்பிணை அன்ன மெல்நடை பயிற்றி

தேன்கமழ் கூந்தல் நெற்றியள் உடையள்

அழகு மிளிரும் அணிபொலிந் தோன்றி

நெஞ்சம் கவர்ந்தனள் நல்லணி யாளே

வெம்பகல் வேந்தன் வீழ்ந்திடும் பொழுதில்

அஞ்சிறை வண்டின் அரவமும் அடங்கி

முல்லை மலரின் மணம்வீ சும்மே

-
மருதத் திணை- புணர்ச்சியின்பின் பிரிதற் துறை 

தாமரை மலரின் தண்ணறு நறவம்

காமர் உண்கண் பாவையின் நோக்கம்

பொருனை யாற்றின் வளம்பெரு துறையில்

செய்ய வாயள் சிறுநகை பூத்தனள்

பொய்யா நெஞ்சம் புலம்புற நோக்கி

மெய்யே காதல் மேவிய பொழுதில்

கையால் தொட்டுக் கதிர்முலை தழீஇ

நெய்தல் நாணும் நெடுங்கண் காட்டி

நற்பொருள் தந்தனள் நங்கையே யானுக்கே

-

நெய்தல் திணை - காதல் மிகுதிறத் துறை 

கடல்திரை ஓதம் கரையினைத் தழீஇ

மடல்விரி தாழை மணற்கரை ஓரம்

வலம்புரி சங்கின் வார்முத்து அன்ன

நன்மைசேர் பல்லள் நகைமுகம் காட்ட

புலம்பொடு வந்தேன் பொழுதுடன் காண

ஒள்ளொளி பிறையம் எழுந்தது வானில்

கலங்கிய நெஞ்சம் அழகுற நோக்கி

தடுத்த காதல் வேட்கையின் மீதூர

நிலம்பக வந்தனள் நல்லணி தானே

-

பாலைத் திணை- பிரிவாற்றாமைத் துறை 

பிரிந்தனள் போனாள் பெருங்குறி காட்டி

வருந்திய நெஞ்சம் வாடிய பொழுதில்

பருந்துபட வறந்த பாலை நிலத்தில்

கருங்கல் பாலையில் கானல் தோன்ற

வெம்மை மிகுந்த வேனில் காலத்து

இம்மை யாக்கை இடர்ப்பட நோவ

செம்மை யாளர் செப்பிய மொழியே

தம்மை யானும் தளர்வற நினைந்தே

-
குறிஞ்சித் திணை - முதற் சந்திப்பு துறை 

வேய்மலர் பொழிலில் வெற்பகம் ஏறி

குயிலினம் பாட கூவும் பொழுதினில்

தேன்கொள் மொழியள் தேமொழி பாட

மலையகம் புல்கி மருண்டனள் நிற்ப

தளிர்க்குரல் கேட்டு தயங்கினள் நோக்கி

பாங்குற அணைந்து பணிமொழி கூறி

வீங்கிய முலையள் வெருவர நோக்க

தாங்கொணா காதல் தலைத்தலை சிறந்தே

-
முல்லைத் திணை- இருத்தல் துறை 

கார்கொண்ட வானம் கறுத்துமின் னாட

நலம்கொண்ட முல்லை செழித்துப்பூத் தாங்கு

நீர்கொண்ட முகில்கள் நிறைந்துபெய் தாங்கு

பார்கொண்ட காதல் பரந்துவிம் மாட

நலம்கொண்ட முகில்கள் இனிதுவந் தீண்ட

நெடும்கொண்ட முலையள் வழிமொழிந் தாளே

சேர்கொண்ட நெஞ்சம் திளைத்துள மகிழ

நேர்கொண்ட காதல் நிறைந்துள தம்மா

-
மருதத் திணை - ஊடல் நிமித்தத் துறை 


வயல்வளர் தாமரை வண்டமர் பொய்கை

அயல்வளர் நெய்தல் அலர்நிலா வீச

மயில்நடை பயிலும் மங்கையர் கூட்டத்து

கயல்விழி உடையாள் அழகொடு தோன்றி

வினைமறந் திருந்தேன் செழுங்கயல் விழியால்

பழகிய காதல் பரிவுடன் கொண்டே

அயர்வற நோக்கி அருள்செய்த வாறே

உயிர்க்குயி ராகி உள்ளுறைந் தனளே

-
நெய்தற் திணை- இரங்கற் துறை 

கானல் அலவன் கரையோ டாட

மீனின் கூட்டம் மிளிர்திரை பாய

ஊனுறு காதல் உள்ளத்துக் கொண்டு

தேனுறு மொழியள் திருமுகம் காட்ட

யானுறு துயரம் யாவரும் அறிய

மானுறு நோக்கி மனம்புகுந் தாளே

வானுறு பிறையம் வழிகாட்ட வந்து

மீனுறு கடலின் மெல்லடி பதித்தே

-
பாலைத் திணை - பொருள்வயிற் பிரிவுத்துறை 


பொருள்வயின் பிரிந்து பொன்னகம் தேடி

மனைமுகம் நோக்கி மனம்பெரிது உருகி

பனிபடு கானம் பலபக லிருந்து

துனிகொள் நெஞ்சம் துயர்மிகப் பெருக

இரங்குவென் யானும் இடர்ப்படும் பொழுதில்

மரங்கொண்ட பொழில்கள் மறைத்திட வந்து

பொறையுடை நெஞ்சம் புலம்புறத் தேற்றி

மறவாக் காதல் மனத்துள் நிறைந்தே

-
குறிஞ்சித் திணை - இயற்பழித்துக் கூறல் துறை


குன்றக நாடன் மாண்புடை மகளே

நிலையக மானும் நேர்கொண்ட விழியள்

நூலுணர் நுண்ணிடை அழகொடு நடந்து

மலையுறை தெய்வம் மருளுற வந்து

பேரருள் செய்த பண்புடை யாளாய்

என்றும் காதல் நெஞ்சினில் தந்து

பாடல்கள் பயிலும் பாவையள் ஆகி

மலைமகள் போல மனங்கவர்ந் தனளே

-

முல்லைத் திணை - தலைவி பருவங்கண்டு அழிதற் துறை 


முல்லையம் கானல் முகிழ்த்தன பூக்க

பழமையம் காதல் பாங்குற வந்து

வன்மையம் கூந்தல் வண்டமர் குழலி

மென்மையம் மொழியள் மெல்நடை பயின்று

சொல்லியல் தமிழால் சொல்லிய பாடல்

நன்மையம் நெஞ்சம் நயந்துகொண் டதுவே

இன்பியல் வாழ்க்கை இனிதுடன் அமைய

வளைந்த புருவம் வேட்கையின் வளைந்தே

-
மருதத் திணை - புலவித் துறை 

வயல்வளர் செந்நெல் வளம்பெருக் கெடுத்து

அயல்வளர் தாமரை அலர்மிசை அமர்ந்து

முயல்வளர் பிறையம் முகம்போல் விரிந்து

கயல்வளர் கண்ணி அழகொடு நடந்து

பயில்வளர் காதல் பண்புடன் மொழிந்து

துயில்வளர் கண்ணித் தூக்கம் கெடுத்து

மயில்நடை சாயல் மனங்கவர்ந் தனளே

நுண்மைசேர் விழியால் அன்புசெய் தாளே

-

நெய்தற் திணை - களவு வெளிப்பாட்டுத் துறை 


கடல்மிசை ஓதம் கரையினை முத்தும்

தடமலர் நெய்தல் தண்ணறு மலரும்

படுமணல் பரப்பில் பாவை வந்தனள்

நெடுநிலை மனையம் நேர்படக் கண்டு

கொடிநுடங்கு இடையாள் அழகினள் ஆகி

அடிவருந் தாமல் அணைந்துடன் வந்து

முடிவிலா காதல் முகிழ்த்துப்பூத் ததுவே

கடிமலர் கமழும் கானல் ஊரே

-

பாலைத் திணை - மீள்வழித் துயர் துறை 


பாலைவன் காடு பருந்துபட வறந்து

காலையம் பொழுதில் கதிரவன் கனல

மாலையம் பொழுதில் மனம்தளர்ந் திருந்து

பாதையம் வழியே தனித்துநின் றழுங்க

துயரம்தான் மிகுதி விளைந்துநின் றதுவே

நீள்விழி மடந்தை நல்கிய நோய்தீர

மேலையம் வானில் மின்னொளி தோன்ற

நெஞ்சகம் தன்னில் அமைதியுற் றதுவே

-

குறிஞ்சித் திணை - தோழி அறத்தோடு நிற்றல் துறை 

அன்னையும் ஊரும் அறிந்திலர் நம்மை

மின்னிடை மடந்தை மெய்யுறத் தழுவி

பொன்னிற மேனி பூத்துட னிலங்க

தன்னுடை நலத்தால் தளிர்க்கை பற்றி

மன்னிய காதல் மனத்தினில் கொண்டு

பின்னிய கூந்தல் பிறழவிட் டாங்கே

பெண்டிரும் காணப் பேரழ கோடு

இன்னுயிர் ஆகி இதயத்துள் நிறைந்து

தன்னுடை அன்பால் தவிப்பறச் செய்தாள்

என்னுடை நெஞ்சம் இன்பமே கொண்டே

-
குறிஞ்சித் திணை - தலைவி கூற்றுத் துறை 


மலையகம் புகுந்து மறைமுகம் நோக்கி

நூலுணர் மடவரல் ஒள்நுதல் காட்ட

வளைந்த புருவம் நெளிய நகைபூத்து

நிலவொளி பரப்பி நெஞ்சகம் புகுந்து

குடிமகள் ஆயினும் குறிப்பறிந் தணைந்து

நலமிகு தோளில் நறுமலர் சூட்டி

வலமுறை வந்து வழிமொழிந் தனளே

உணர்வெலாம் கலந்து உள்ளம் மலர்ந்ததே

-

மருதத்திணை- கற்பின் சிறப்பு துறை


மனையகம் புகுந்து நன்னாள் நாணால்

கால்சிலம் பொலிய கரம்பற்றிக் கொண்டு

தினையளவு பிரியா திருமணம் முடித்து

நினைவெலாம் ஒன்றி நெஞ்சகம் கலந்து

கனவிலும் பிரியா காதலள் ஆகி

இனியநல் வாழ்வில் இல்லறம் நடத்தி

தனிமையில் கூடி தழுவியே நின்று

பனிமலர் போலப் பரிவுடன் வாழ்ந்தே

-
குறிஞ்சித் திணை - இயற்கைப் புணர்ச்சித் துறை 


தேன்பிழி நறவின் திருந்திய வாயள்

காம்புடை முல்லை கமழ்ந்திடும் கூந்தல்

பாங்குற நெஞ்சில் இனியளாய்த் தோன்றி

வாடிய உள்ளம் தளிர்த்திட வந்து

வேம்புறு துயரம் விலக்கிட வல்லாள்

பூம்புனல் ஊற்றம் பொழிந்திடும் கண்ணள்

தாம்புணர் காதல் தலைக்கொண்டு நின்று

காப்புடை யாகி உயிர்க்குயி ரானாள்

-

முல்லைத் திணை - வாழ்த்தியற் துறை 


யாழினும் இனிய யாமத்து வந்து

தாழ்விலா காதல் தலைமகள் தந்த

வாழ்வின் இன்பம் வளம்பெறத் தோன்ற

சூழ்வினை யாவும் துயரறப் போக

ஊழியும் நிலைக்கும் உறுதியள் ஆகி

தூயநல் நெஞ்சில் பண்புடன் நிறைந்து

வானிடை மதியம் விண்ணிடை போல

ஆழ்கடல் அனைத்தும் அன்பினில் ஆக்கி

பெண்டிரும் புகழப் பேரருள் பெற்று

வாழியர் என்றும் வளமுடன் தானே..

Wednesday, 22 January 2025

அழகெனப்படுவது..

குடிசையின் கூரையில்

கொட்டும் மழைநீரில்

கரைகிறது இசை

தொழிலாளியின்

தழும்பேறிய கைகளில்

தவழ்கிறது அழகு

-

தெருவோர வாங்கிலில்

முதியவனின் முகத்தில்

மூழ்கியிருக்கிறது கவிதை

கூலித்தொழிலாளி

உடலில் வழியும்

வியர்வையில் மின்னுகிறது

சிற்பத்தின் ஒளி

-

உண்மை நிர்வாணமாய்

நடமாடும் தெருக்களில்

வறுமையின் வலியும்

வாழ்வின் அழகும்

வேறுவேறல்ல

-

நீ கவலைப்படாதே தோழா

அழகு எங்கும் இருக்கிறது

தொழிற்சாலை புகையிலும்

தொழிலாளி கண்ணீரிலும்

வியர்வை துளிகளிலும்

வீதியோர பிச்சைக்காரனின்

விரிசல் விழுந்த முகத்திலும்

-

பொய்யென நினைத்தது

மெய்யாய் மாறுகிறது

உண்மையென நம்பியது

பொய்யாய் உதிர்கிறது

அழகு மட்டும்

அப்படியே நிற்கிறது

முதலாளித்துவம்

விற்பனைப் பொருளாக்கிய

அழகு அல்ல இது

உழைக்கும் மக்களின்

உயிர்த்துடிப்பில் பிறந்த

உழைப்பின் உண்மை

-

கலையரங்கின் சுவர்களில்

காட்சிப்பொருளாய்

தொங்கும் ஓவியங்கள் அல்ல

கடின உழைப்பாளியின்

கரங்களில் மலரும்

காயங்களின் கவிதை

-

வர்க்க வேறுபாடற்ற

வருங்கால உலகின்

விடிவெள்ளி போல

வெளிச்சமாய் தெரிகிறது

அழகின் உண்மை

-

நாளை மலரும்

நம் கனவுகளின்

நித்திய இளமை போல

நிலைத்து நிற்கிறது

அழகின் மெய்மை

Monday, 20 January 2025

வான்பெயல் வண்ணம்..

யாழின் நரம்பின் இசையெனப் பொழியும் 

வான்துளி வீழ்ந்து வயங்கொளி பரப்ப 

திங்கள் முகத்து தெள்ளொளி போல 

மங்குல் சிந்தும் மாமழைத் துளிகள்

பானல் மலர்மேல் பனித்துளி துயில 

நீலம் பூத்த நெடுவான் கீழே 

காலை வெயிலின் கதிர்க்கை பற்றி 

தேமா மலரின் தேன்துளி சிந்த 

நறுமொழி கேட்டு நெஞ்சம் துடிப்ப 

கானக் குயிலின் கனிமொழி யாக 

வானம் உரைக்கும் வண்மொழி கேட்டு 

குன்றின் நெஞ்சில் குளிர்த் துளி பாய்ந்து 

நின்று நிலவும் நேயம் போல 

தண்ணீர்த் துளியின் தகைமையை நோக்கி 

மண்ணின் மடியில் மறைபொருள் தேடி 

நீர்த்துளி சிதறி நெஞ்சம் நனைய 

யார்பெயர் சொல்லி அழைத்தனை இங்கே? 

விழியில் நிறைந்த வியப்பினை நோக்கி 

மொழியற்று நின்ற முகிலின் கீழே 

அகத்துள் உறையும் அன்பினை உணர்த்தி 

புலரும் விடியல் பொழுதினில் தோன்றி 

மலரும் மனத்தின் மகிழ்வினைப் போல 

தண்மைப் பெருமழை தன்னுள் கரைக..

கடலின் மூச்சு..

நீ சொல்கிறாய் கடல் சுவாசிக்கிறது என்று

நான் கேட்கிறேன் யார் மூச்சு அது என்று

மீனவனின் இறுதிப் பெருமூச்சா?

அல்லது அலையில் கரைந்த கலப்பை உழவனின்

கனவுகளின் பெருமூச்சா?

-

தொழிற்சாலைக் கழிவுகளால்

மூச்சுத் திணறும் கடல்தாயின்

வலிகளை யார் கேட்பார்?

விட நுரையில் விக்கித் தவிக்கும்

மீன்களின் இறுதி மூச்சை யார் பதிவு செய்வார்?

-

எண்ணெய்க் கறையில் எரியும் பறவைகளின்

சிறகுகளில் சிக்கிய காற்றின் கதறல்

கேட்கிறதா உன் செவிகளில்?

-

இயந்திரங்களின் இரைச்சலில்

இழந்துபோன இயற்கையின் இசை

நினைவிருக்கிறதா உனக்கு?

-

ஆனாலும் கடல் சுவாசிக்கிறது

அதன் ஒவ்வொரு மூச்சிலும்

புரட்சியின் விதைகள் முளைக்கின்றன

ஒவ்வொரு அலையிலும்

எதிர்ப்பின் குரல் ஒலிக்கிறது

ஒவ்வொரு நுரைத்துளியிலும்

போராட்டத்தின் துளிர்கள் தெறிக்கின்றன

-

கடலின் நெஞ்சில்

காலம் முழுவதும் கேட்கும்

மீனவப் பெண்களின் காத்திருப்புப் பாடல்

அலைகளின் ஓசையில் கரைந்துபோகும்

வறுமையின் வலிகள்

நுரைக்கும் திரைகளில் தெறிக்கும்

வாழ்வின் வியர்வைத் துளிகள்

-

கடல் சுவாசிக்கிறது

அதன் மூச்சில் கலந்திருக்கிறது

மனித இனத்தின் முழு வரலாறும்

அடிமைத்தனமும் விடுதலையும்

அழிவும் எழுச்சியும்

தோல்விகளும் வெற்றிகளும்

-

நீ கேட்கிறாய் கடலின் இரகசியங்கள் என்ன என்று

நான் சொல்கிறேன்

கடலின் ஆழத்தில் மூழ்கியிருக்கிறது

மனிதனின் முழு அவலமும்

அதன் அலைகளில் மிதக்கிறது

நம் விடுதலைக் கனவுகளின்

தாகம் நுரைகளாய்,

கரைந்தும் மீண்டும்..

கடற்பெருங் காதல்..

பேராழி எழுப்பும் பெருந்திரை ஓதம்தான்

நீராடு காலம் நினைவுற - பாராளும்

பண்டைய கதைகளைப் பாய்திரை கொண்டுவரும்

வண்டமிழ் சான்றோர் வழி

-

முன்னோர் மொழிந்த முதுமொழி பேணியே

பின்னோர்க்கு நல்கும் பெருங்கடல் - என்னாளும்

ஆழத்து மூச்சாய் அலைமேல் அலைபரப்பித்

தாழ்வற வாழ்வைத் தரும்

-

திரைமேல் திரையாய்த் திசைதிசை சென்றிடும்

கரைசேர் பவர்க்குக் கதிகாட்டும் - விரைவுடன்

தேடும் மனத்தோர்க்குத் தெள்ளமுதம் ஊட்டும்

ஆடும் அலைக்கடல் காண்

-

நுண்ணிய நீலம் நுழைந்துள பொன்னெலாம்

கண்ணுக்குப் பூத்த கதிர்வீசும் - எண்ணரும்

மூழ்கிய மாந்தர் முடிவிலா வாழ்வினைக்

கீழ்மேல் என்றே கிளர்

-

பேராழி தன்னிற் பெருமைகள் நோக்கினால்

ஓராழி போலும் உயிர்ப்பெலாம் - நீராடிப்

போந்தது போலப் புணரிதான் போய்விடும்

ஆய்ந்தபின் முற்றும் அறிந்து

நாடற்ற நாவாய்கள்..

ஓ காலமே..!

உன் வெண்ணிலா விழிகளில் படிந்த

இரவின் கண்ணீர் துளிகளை

எம் வாழ்வின் கனவுகளாய் மாற்றும்

மாயக் கலைஞனே

-

கடற்பரப்பின் பேரலைகள் போல

கரைந்து கரைந்து வரும் நாட்களின்

கரையில் நாங்கள் சிறு கூழாங்கற்கள்

உன் அலைகள் எம்மை உருட்டி உருட்டி

உயிரின் வண்ணம் தீட்டுகின்றன

-

யாழின் நரம்புகள் போல் இழுக்கும்

இளவேனிற் காற்றின் கீதங்களில்

எம் இதயம் துடிக்கும் ஒவ்வொரு துடிப்பிலும்

உன் தூரிகையின் தடங்கள்

தனிமையின் பெருங்காட்டில்

தவழும் பனிப்பூக்கள் நாங்கள்

-

முற்றா முகிலின் கருவறையில்

முகிழ்க்கும் மின்னல் ஒளி போல

எம் வாழ்வின் கணநேரங்கள்

உன் கைவண்ணத்தில் பதிந்து

வலிகளின் வண்ணக் கனவுகளாய்

மலர்கின்றன, மறைகின்றன

-

நீலக் கடலின் ஆழத்தில்

நித்திரை கொள்ளும் முத்துக்கள் போல

எம் கனவுகள் உன் மார்பில் உறங்க

காலங்கள் கடந்தும் ஊறும்

கவிதையின் சுவை ஊற்றே

-

நீ வரையும் வானவில்லின் கீழ்

நிலவொளி குடித்து வளரும்

நெஞ்சின் மலர்க்கொடிகள் நாங்கள்

உன் அழியாப் பேரழகின் முன்

கரையற்ற கடலில் மிதக்கும்

நாடற்ற நாவாய்களாய்

நாமும் வாழ்வும்..

Friday, 17 January 2025

மாற்றமும் மாயை தானோ..

வானிலே மின்னும் மேகம் வழிகளில் நிழலைத் தந்து

கானலாய்க் கரைந்து போகும் காட்சியைக் கண்டு நின்றேன்

தேனெனத் திரண்ட வாழ்வும் திசையெலாம் சிதறிப் போக

ஞானமே துணையாய்க் கொண்டு நான்மறை உணர்ந்து நின்றேன்

-

பூவிதழ் சிதறும் போதும் புனலிடை மிதக்கும் போதும்

காவியம் படைக்கும் வண்ணம் கவிதையாய் மலர்ந்த போதும்

ஆவியின் பயணம் தன்னில் அழகெலாம் கனவே யென்று

மேவிய பொழுதி னாலே மெய்யுணர் வெய்தி னேனே

-

காதலென் றெழுந்த போதும் கனவெனத் தோன்றும் போதும்

ஓதிய கலைகள் யாவும் உணர்வினில் தேய்ந்த போதும்

சோதனை முடிவில் கண்ட துணிபெலாம் பொய்யே யென்று

தீதறப் புரிந்து கொண்டேன் திக்குகள் பட்ட தாலே

-

மண்ணிலே விதைத்த நீரும் மலரெனப் பூத்த வானும்

கண்ணினால் காணும் யாவும் கருத்தினில் தேய்ந்து போகப்

பண்ணிசை பாடி நின்ற பறவையும் காலம் என்னும்

வெண்ணிலா வெளியில் நின்று வீழ்ந்திடும் நேரம் கண்டேன்

-

நேற்றென வந்த தெல்லாம் நினைவிடை மறைந்து போக

ஆற்றலாய் நின்ற யாவும் அலைகடல் நுரையாய்க் காண

தோற்றமும் ஒளியும் கொண்ட தூயவெண் பிறையும் கூட

மாற்றமே உலக மென்னும் மறைபொருள் உணர்த்திற் றன்றே

Wednesday, 15 January 2025

மழையில் கரையும் நாட்கள்..

நேற்றென்பது

கடந்துபோன கனவின் நிழல்தான்

அதன் விளிம்புகளில் தேங்கிய பனித்துளிகள் போல

இன்று நம் விரல்களில் வழிகிறது காலம்

நாளையென்பது

இன்றின் கண்ணாடியில்

மங்கலாய் தெரியும் முகம்தான்

-

நினைவுகளின் மழைக்குள் நனைந்தபடி

நிற்கிறோம் நாம்,

ஒவ்வொரு துளியிலும் ஒரு கதை,

ஒவ்வொரு சொட்டிலும் ஒரு காலம்,

இடைவெளிகளில் தவழும் மௌனம்

இன்னொரு மொழியில் பேசுகிறது.

-

கனவுகளும் நினைவுகளும்

ஒரே நதியின் இரு கரைகள்தான்

நடுவே ஓடும் நீரில்

நம் விம்பங்கள் கரைகின்றன

யார் சொன்னது நேற்று வேறு,

நாளை வேறு என்று?

-

இரண்டும் ஒரே பறவையின்

இறக்கைகள்தான்

ஒன்று கனவின் நிறத்தில்,

மற்றொன்று நினைவின் நிழலில்

இடையே பறக்கிறது ‘இன்று’

இமைப்பொழுதில்..​​​​​​​

Saturday, 11 January 2025

என் நிழல்..


என் நிழல்
என்னைத் தொடர்கிறது
தெருவோரம்
ஒரு நாய்க்குட்டி போல

கூப்பிட்டால்
வருவதில்லை
விரட்டினால்
போவதில்லை

காலையில்
என் முன்னால் நடக்கிறது
மாலையில் 
பின்னால் தொடர்கிறது
இரவில்
எங்கோ மறைந்து போகிறது.

சாலையோர மரங்களுக்கடியில்
என் நிழல் சந்திக்கிறது
பல நிழல்களை.
அவை பேசிக்கொள்கின்றன
மௌனத்தில்
நாம் கேட்க முடியாத
பல கதைகளை.

நான் போகும் போதெல்லாம்
நிழல் என் காலடிச் சுவடுகளை
அதன் கருப்பு நினைவுப் பெட்டியில் சேகரித்து வைக்கிறது

வீட்டுச் சுவற்றில்
தலைகீழாக நிற்கிறது
என் நிழல்.
உலகைப் புரிந்து கொள்ள
சில நேரங்களில்
நாமும் தலைகீழாக
நின்று பார்க்க வேண்டியிருக்கிறது.

மேசையில் விளக்கொளியில்
என் நிழல் படிக்கிறது
என்னோடு சேர்ந்து
ஆனால் அதற்குப் புரிகிறது
நான் புரிந்து கொள்ளாத
பல அர்த்தங்கள்.

சில நேரங்களில்
என் நிழல் தெரிவதில்லை.
அப்போது நான்
பயப்படுகிறேன்
நான் இருக்கிறேனா என்று.

வெயிலில் நடக்கும்போது
என் நிழல் குட்டையாகிறது
குளிரில் நடக்கும்போது
நீளமாகிறது.
மனிதர்களும் அப்படித்தான்
சூழ்நிலைக்கு ஏற்ப
மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்போது
இந்தக் கவிதையை எழுதும்போது
என் நிழல்
என் கையசைவுகளைப் பார்த்து
புன்னகைக்கிறது.
அதற்குத் தெரியும்
நான் எழுதப் போகும்
அடுத்த வரி..

Friday, 10 January 2025

விசும்பின் அசை..

மண்திணி ஞாலத்து மாநில மடந்தை

விண்தொடு நெடுவரை விளிம்பினில் நின்று

கால்கொள் வளியின் கதிர்விரி கற்றை

மேல்வரும் விசும்பின் மீமிசை ஏற்றி

-

பனிபடு விசும்பின் பல்மீன் ஊர்தி

தினைத்துணை யளவும் திசைமுக நோக்கி

நனைபடு புற்றின் நறுமலர் போல

கனைகடல் பரப்பின் கதிர்விரி காலை

-

யாணர் புதுவெளி யாங்கணும் பரந்து

காணரும் பேரொளி கடல்கொள நிறைந்து

மூவகை உலகின் முழுமுதல் தோற்றம்

யாவரும் அறியா இருளகம் கிழித்து

-

பொங்குநீர்ப் பரப்பின் புணர்முக வரையின்

திங்கள்தன் கதிரின் திசைமுகம் நோக்கி

மண்ணின் மடந்தை மனமொடு கலந்த

விண்ணின் வெளியே வியன்பெரும் பாட்டு

-

கால்கொள் வளியின் கடுங்குரல் கேளாய்

மால்கொள் யாமத்து மதிமுகம் நோக்கி

நீள்நிலம் தழுவும் நெடுவெளி யாற்றின்

வாள்நுதி மின்னின் வழிவழி யாக

-

பாம்பொடு சுழலும் பால்வெளி நீந்தி

காம்புடை மலரின் கதிர்விடு தேறல்

தேம்பிழி தொடையல் திசைமுகம் பரப்பி

ஏந்துபொற் கிண்ணத்து இசைபட வீழும்

-

அகன்ற வானின் அடிமுதல் தொடங்கி

மிகுபெரும் வெளியின் மேல்முக நோக்கி

புல்லிய துகளின் பொடிபட மிதந்து

சொல்லிய பொருளின் துணிபொருள் ஆகி

-

நிலனுற வந்த நெடுவெளி யாற்றின்

குலமுதல் தொடங்கி குன்றுற வளர்ந்த

கானக் குரலும் கடல்திரைப் பாட்டும்

யாணர் வெளியின் யாழிசை தருமே

அண்டத்தின் தாளம்..

உலகம் சுழலும் ஓசையைக் கேள்

காற்றும் கடலும் தாளம் போடும்

இசையைக் கேள்

-

வானத்து மீன்கள்

மின்னி மறையும் வேளையிலே

பூமியின் தாலாட்டு ஒலிக்கிறது,

மலைகளின் உச்சியில்

காலம் ஊர்ந்து செல்கிறது,

பறவைகளின் இறக்கைகளில்

விதி எழுதப்படுகிறது.

-

மண்ணின் மகனே

நீயும் இந்த இசையின் ஒரு துளிதான்

உன் உயிர்ப்பின் ஒவ்வொரு துடிப்பும்

இந்தப் பேரிசையின் அசைவுதான்.

-

புல்லின் நுனியில்

பனித்துளி நடனமாடும் வேளையிலே

பூமியின் சுழற்சி

உன்னைத் தாங்கிக்கொண்டு போகிறது

நீ தனியன் அல்ல

-

ஒவ்வொரு மரத்தின் அசைவிலும்

ஒவ்வொரு அலையின் எழலிலும்

ஒவ்வொரு காற்றின் சுழல்விலும்

நீ இருக்கிறாய், உன் வாழ்வு

இந்தப் பேரண்டப் பெருங்கதையில்

ஒரு வரி

-

கேள்

இந்த மௌன இசையைக் கேள்

உன் இதயத்தின் துடிப்பிலே

உலகத்தின் தாளம் ஒலிக்கிறது

நீ இந்த வாழ்வின் பாடல்..

Wednesday, 1 January 2025

நினைவின் நிலவியல்..

கால்களில் பனிக்கட்டி படிந்த இடத்தில்

இல்லாமையின் கணக்கீடுகளைத் தொகுக்கின்றேன்

ஒவ்வொரு படிகமும் இழப்பின் நிலையம்

ஒவ்வொரு மூச்சும்

பனிக்காலத்தின் மீதான எதிர்ப்பு

வயல்களில் எழும் நீராவியில்

பிழைத்தலின் வடிவியல் தன்னை எழுதுகிறது

இப்பனி ஆளும் நிலத்தில்

தனித்த வெப்பம்

-

என் ஆவணங்களைக் கேட்கின்றனர்

ஆனால் என் வீட்டின் குருமண் முற்றத்தில் ஊரும்

மழையின் மணத்தை எப்படி ஆவணப்படுத்துவேன்?

என் தாயகம் இருமச் சொற்களாய் கரைகிறது

குவாண்டம் நிச்சயமின்மை போல

இருப்பதும் இல்லாததுமாய்

இல்லாமையை மட்டுமே பிரதிபலிக்கும்

திரைகளில் சிதறிய துகள்களாய் வாழ்வு,

-

அலுவலர் கேட்கிறார், பிறந்த இடம்?

"பூவரசின் இதயம்,

பனங்கூடலுக்கிடையே உள்ள வெளி,

விடியலில் பழைய கோயில்களின் நிழல்" என்று

சொல்ல விரும்புகிறேன் ஆனால் அவர்களின்

அதிகாரப்பூர்வ வரைபடத்தில்

ஒரு புள்ளியைச் சுட்டிக்காட்டுகிறேன்.

-

காலம் அந்நிய நாணயங்களில் வர்த்தகம் செய்கிறது

கொடூரமான விகிதங்களில் பரிமாறப்படும் நினைவுகள்,

தூரத்தின் சந்தையில் தினமும் மதிப்பிழக்கும் அடையாளம்,

அந்நிய மண்ணில் பிடிவாதமான சமன்பாடு போல வளர்கிறேன்,

வீட்டின் மாறிலியைத் தேடி

என் வேர்கள் பழகிய எண்களை வரைகின்றன

-

நாடுகடத்தப்பட்ட இதயத்தைச் சுற்றி

வெளி வளைவதை ஐன்ஸ்டீன் கணக்கிடவில்லை,

தூரம் எப்படி ஏக்கத்தின்

ஒருபக்கப்பட்டையாக வளைகிறது

விடைபெறுதல் வருதலாகி மீண்டும் விடைபெறுதலாகிறது

ஒவ்வொரு பிரிவும் இயக்கவிதிகளை மீண்டும் எழுதுகிறது

ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை

தென்றல் காற்றின் நினைவு.

-

நான் திரும்பி வரும்போது,

தொல்லியலாளர்கள் என் மார்புக்குழியில்

இல்லாமையின் அடுக்குகளை ஆய்வு செய்வார்கள்,

என் தனித்தமிழின் புதைபடிவங்களை

கரிம காலக்கணிப்பு செய்வார்கள்,

என் நிழலுக்கு முன்பே

ஆலமரங்கள் என்னை அடையாளம் காணும்

அவற்றின் வளையங்களில்

என் பிரிவின் ஆண்டுக்குறிப்புகள்,

அவற்றின் இலைகள்

செந்தமிழில் சலசலக்கின்றன.

-

கனவுகளில், சேர்தலின் புதிய வழிமுறைகளை

குறியீடாக்குகிறேன்,

நினைவின் மீள்செயல்பாடுகள்

அடையாளத்தின் முடிவில்லா சுழல்களை உருவாக்குகின்றன

என் முகம் ஆயிரம் கண்ணாடிகளில் சிதறுகிறது

-

என் இதயத்துடிப்புக்கும்

செந்நிலப்புலங்களின் துடிப்புக்கும்

இடையேயுள்ள தூரம் அவ்வெண் ஆகட்டும்

நாடுகடத்தலின் வளிமண்டலத்தை

வெட்டிச்செல்லும் குயிற்சிறகின் பாதை

இவ்வெண் ஆகட்டும்

வீட்டிற்கான தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டும்

நாளையின் சமன்பாட்டில்

பனை விதை போலப் புதைந்துள்ள மறை எண்

தமிழ் யாப்பின் பண்டைய கணிதவழி

முளைக்கக் காத்திருக்கிறது..