வெள்ளி, 17 மே, 2019

இந்த நாட்கள் மே 17-18

சில் வண்டில்லாத
அடர் காடாய்
காற்றூதல் கேட்காத
இராக் கடலாய்
தவளைகள் பேசாத
குளக் கரையாய்
சிறகோசை இல்லாத
பழ மரமாய்
தொடுவானம் தெரியாத
விரி வெளியாய்
நீங்களும் விடைபெற்ற
இந் நாட்கள்..


திங்கள், 13 மே, 2019

கீறுவோம் எமக்கான திசை..

தீ எம் வாசலையும் தீண்டினாலென
தீட்டி வைத்தவை எல்லாம்
தணிக்கவும், தற்காக்கவுந்தானென
எடுத்துக் கொள்ள வேண்டிய
மனதில் இருக்கிறோம்
ஏனெனில்
எவர் எவரை அடக்க நினைத்தாலும்
எம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை
அவர்களோடு சேர்ந்து
நீரெம்மை நீறாக்கிய நோவு
உடலெல்லாம் இருந்தாலும்
எதுவோ துடிக்கிறது உமக்காய்

அடித்தவன் தான் சரியோ
என்ற ஐயத்துக்கு
உம்மை ஆளாக்கும் வரை
அவர்களும் ஓயப்போவதில்லை

ஓரினம் நாமென்ற
உள்ளம் உமக்குள்ளே
உருவாகினால் மட்டும் தான்
தேறுவோம் நாம்
அன்றில் தீர்வு வேறில்லை

சேருவோம் நாமென்று
சிந்தித்தெழும், நாளை
கீறலாம் எமக்கான
திசை..


புதன், 8 மே, 2019

நேருமிது என்று அறிந்தாயோ..

அள்ளி இரு கையில்
அன்பை முழுதாக
கொள்ளு பிடியென்று
கொடுத்தாலும்
உள்ள மனம் பூட்டி
ஒதுங்கி எனைநீங்கி
தள்ளி மெதுவாக
தவிர்ப்பாயோ?

சேர நிலம் வந்து
சேரு எனையென்று
ஈர மொழி பேசி
எனை யுந்தி
ஆறு கடலோடு
ஆவலொடு கூட
ஊறி வரும் போது
உதைவாயோ?

நேருமிது என்று
நெஞ்சின் அடிஉள்ளின்
ஓர அறையோரம்
உரப்பாக
கூறும் அசரீரி
கொட்டும் உடுக்கொன்று
ஏறிச் செவிகேட்டு
எறிந்தாயோ..


மூச்சின் வாசனையை முகர்..

தகிப்பில் அதிரும்
நரம்புகளின் உணர்முடிச்சின் பீடத்தில்
உன்மத்தம் துடித்த ஒருகணத்தின் போது
உனையே மறந்து
காதல் அவிழும் என் கண்களை
காணவென நீ திரும்பிய போது
சூரியனை கடல் விழுங்கிற்று

கத்தியேனும் மனசை
காதில் விழுத்த நீ
எத்தனித்தபோது வான் குலுங்க
என்றுமில்லா இடி
பேரோசை சிற்றோசையைத் தின்றது

ஈரநெருப்பின் இதத்தில்
அங்கம் இணைத்தேனும்
ஆசையைச் சொல்வமென
கைகளை நீட்டிய படி
நீ ஓடிவந்த போது
கால்களின் முன் காய்ந்திருந்த பள்ளத்தால்
காத்திருந்த காட்டாறு
கரைபுரண்டு தன்னோடு
அந்த முயல்வினையும் அடித்துச் சென்றது

மூச்சின் வாசனை அறியாதவளா நீ
முகர்ந்தேனும் எனை உணர முற்பட
காலில் நசிந்த குளைகளின்
காட்டு மணம் காற்றெங்கும்

பருவத்தில் மட்டுமே ஊறும்
மலையருவி நீ
காலவிதி இடையே ஊடறுத்து
வேளையினை நீட்ட
ஊற்றடங்கி, கசிந்த நீர்காய்ந்து
உன்நிலை
தன்நிலை உணரத் தலைப்பட்ட போது
என்நிலை தெரிந்த இதயம் நின்று
மீண்டும் துடித்ததுன் மூளை

இமைக்குமுன்
ஏதோ உணர்ந்தவளாய்
எதிர்த்திசையில் திரும்பி
ஏறத் தொடங்கினாய்
கடந்து செல்லும் முகிலாய்
ரதியின் உரு கலைந்து செல்கிறது

உயிர்ச் சஞ்சாரமற்ற
பொட்டல் வெளியின் தொடுவான் கரையில்
மங்கலாய்த் தெரியும் ஒற்றைப் பனையாய்
மீண்டும் நான்..


வாழ்நாட் கனவு..

எத்தனை உயிர்கள்
எத்துணை தியாகம்
எத்தனை ஆண்டுக் கனவு
அத்தனை உழைப்பின்
ஆயுளும் எப்படி
இத்தனை சீக்கிரம் கலைந்தது..?

வீழும் என்று எண்ணியே இராத
வீரயுகங்கள் கண்களின் முன்னால்
மாழும் என்கிற படிப்பினை தன்னை
மனசும் நம்ப மறுக்குது,

கந்தகப் புகையாய் கலைந்தன்று சென்ற
கட்டி நாம் காத்த நற்கனவு
எந்த நாள் நனவாய் ஆகுமோ அறியேன்,
இருப்பனோ என்பதும் தெரியேன்.

எந்தநாள் ஆயினும் ஆகட்டும்
ஆனால்
ஆகத்தான் வேண்டும் இறைவா..

வியாழன், 25 ஏப்ரல், 2019

இன்னமும் இருக்கிறது..

ஓர விழிகளில்
உள்ளம் கசிகிறது
ஒரு போதும் அதை நீ சொல்லுவதில்லை

ஈரமாகும் மனம்
எனக்கும் இருக்கிறது
என்றும் அதை நானும் காட்டுவதில்லை

கவிதையென்று மெதுவாய்
நீ தொடங்குவாய்
காலநிலை பற்றி நான்
கதை பேசுவேன்

பாடலின்று கேட்டாயா
நான் தொடங்குவேன்
வேலையின்று கடினமென
நீ விழுங்குவாய்

இப்படியாய் துளிர்த்த மரம்
கிளை வைத்து இலை அடர்ந்து
நிழலில் இருமனமும்
நிம்மதியாய் கால் நீட்டி
அமர எண்ணுகையில்
நிலத்தைப் பிளந்தது
யுகப் பிரிகோடு,
வழியின்றி நடக்கத் தொடங்கினோம்
வடக்காய் நானும்
தெற்காய் நீயும்

அந்த மரம் இன்னும்
அப்படியே இருக்கிறது..


திங்கள், 18 மார்ச், 2019

கரங்களை நீட்டும் கனவு

இலை உதிர்ந்தாலென்ன நண்பா
பார்த்துக் கொண்டிருக்க
பருவம் மாறும் துளிர்க்கும்
கிளை உடைந்தாலும்,
இருக்கட்டும்,
இன்னொரு கிளையுண்டே,
போதும்,
மரமே பாறி வீழ்கிறபோதுதான்
உரஞ்சிதறிப் போகிறது
ஆயினும்
இப்போதும் கூட எழச்சொல்லி
கரங்களை நீட்டுகிறதென்
கனவு..


அவதானம்..

தோற்ற தன் நண்பனுக்கு
தோள் கொடுத்து அவன் மனசை
ஆற்றுப்படுத்துமோர் ஆறுதலைச் சொல்லாமல்
விழுந்தான் எனுங் கணத்தில்
விலத்தி மிகத் தந்திரமாய்
அத்துணை வேகமாய் கழன்ற அவன்
உமை நோக்கி
ஓடி வருகின்றான் ஒட்ட,
அவதானம்..


அப்படியே தான் இருக்கிறது..

வாழ முடிந்த வாழ்வையும்
இன்புறக் கிடைத்த இளமையையும்
எதன் பொருட்டு துறந்தாயோ

வெடித்துப் பறக்கும்
பருத்திப் பஞ்சின் கனம் தான்
உயிரென்பதுவாய்
இரெண்டு கைகளாலும்
அப்படியே வழித்தெடுத்து
எதற்காக உன்னையே நீ
தாரை வார்த்தாயோ

ஆண்டுகள் பல ஓடிப்போயிருப்பினும்
அதற்கான காரணங்கள்
இன்னும் அப்படியே தான் இருக்கின்றன
நண்ப..


விடுதலைக் கனவு..

எந்தைகள் முயன்றதை
நாங்களும்
நாங்கள் முயன்றதை
மகன்(ள்)களும்
மகன்(ள்)கள் முயன்றதை
பேரர்களுமென
எத்துணை இழப்பினும்
நனவாகுமெனும்
நம்பிக்கையை மட்டும் இழப்பதில்லை
விடுதலைக் கனவு..