சனி, 10 அக்டோபர், 2026

விடுதலை என்பது..

வரப்பு வேம்பு தன் வேரால்

ஆயிரம் ஆண்டுகளின் அடுக்குகளைத் துளைத்து

முதல் உழவனின் எலும்புகளைத் தீண்டியது, 

அதன் குச்சியால் பல்லைத் துலக்குபவன்

கசப்பைத் துப்புகிறான்.


என் பாட்டனின் குதிக்கால் வெடிப்புகளில்

இந்நிலத்தின் ஆறுகள் ஓடுகின்றன, 

அவன் நாவில்

‘நெல்லுக்குச் சேறு,

கனவுக்கு

எவ்விருளும் போதும்.’


மீன்கொத்தியின் கண்ணில்

கழனி பொன்னாய்ப் பழுக்கிறது, 

பசியோ

பச்சையாகவே நிற்கிறது.


கரும்பின் இனிப்புக்குள்

வியர்வையின் உப்பு படிந்து கிடக்கிறது, 

கடலுக்கப்பால் தேநீர்க் கிண்ணங்களில்

எங்கள் உழைப்பு இருமுறை கரைகிறது.


அந்தத் தோட்டத்து வெட்டுக்கிளி

தொடைகளை ஞெலிகோலாய்த் தேய்த்து

கிழக்கைப் பற்றவைக்கிறது.


வேலி முள்ளின் நுனியில்

அதைச் சுமந்து வந்தவனின் 

குருதி கறுத்திருக்கிறது, 

அறுகோ

கணுக்களால் தவழ்ந்து

மறுபுறம் தலைகாட்டுகிறது.


அவர்கள் தெருவைக் கடக்கையில்

எங்கள் செருப்புகள்

கைகளில் நடந்தன.


எங்கள் குடங்களுக்கு

வாய் மூடிய கிணற்றின் அடியிலிருந்து

தவளை

மழைக்குத் தூது அனுப்புகிறது.


நாங்கள் எழுப்பிய குதிரின் இடுக்கில்

மணியைத் தோளில் ஏந்திய சிற்றெறும்பு

முந்தி நுழைகிறது.


காற்றாடி மரக்கிளையில்

நாட்கூலியின் நீளத்துக்குக் கட்டுண்ட தட்டான்

வட்டமிடுகிறது, 

மடைக்கல்லில்

என் சொற்களைத் தீட்டுகிறேன்.


ஊருக்கு வெளியே

தனித்த வாகையின் கீழ் 

அயர்ந்த பண்ணையாளின் இமைகளுக்குள்

விருந்து விரிகிறது, 

இலைகள் யாவும் ஒரே நிரையில்.


கடைசியர் ஊன்றிய நாற்றுகள்

அணிவகுக்கின்றன, 

நடவுப் பாட்டு

பெருவழிக்கு இறங்குகிறது.


குண்டு

உடலில் முடிகிறது, 

குரல்

அங்கே தொடங்குகிறது.


எங்கள் நிறத்துக் காக்கை

சிறைச்சுவரின் பிளவில்

ஆலவிதையைச் சிந்திப் போகிறது, 

காவலனின் நிழலுக்குள்

முளை

புழுதியை மெல்லத் தள்ளுகிறது..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக