சனி, 2 மே, 2020

முடிந்த இடத்தில் தொடங்கும்..


இழப்பும், எது செய்தும் மீண்டெழலும் இன்றுவரை
தழலாய், நினைவுகளாய் தகிக்கிறது கண்களுக்குள்

கண்களை மூடினும், திறப்பினும் கண்மணிக்குள்
மண்ணின் விடுதலையே மனக்கொழுந்தாய் ஒளிர்கிறது

ஒளிரும் கொழுந்துக்குள் ஓராயிரங் கதைகள்,
களித்திருந்த வாழ்வும் கந்தகப் புகையாக

புகையும் மேகமாய் கலைந்தெங்கோ போயின்று
பகை மறந்து அறணையாய் போனோமா.?

போனோர் கனவென்ன? போனோரேன் போனார்கள் ?
ஏனவர் மனதுவந்து இத்தனையும் கொடுத்தார்கள்?

கொடுத்ததில் இருந்த கொள்கை இந்நாளில்
எடுத்தாளப் படுகிறதா எவராலும்? விடையுண்டா..?

விடையைக் காண்கின்ற வெளிச்சமுண்டா கைகளிலே?
தடை இருக்கும் அதைத் தாண்டாமல் விடுதலையா..?

விடுதலைப் பயணமென்றும் நெடிதுதான் நாளைக்கே
சடுதியாய் எண்ணுதல் போல் சாளரத்தால் மலராது

மலர்வதற் கென்றுமோர் நாளுண்டு அந்நாளில்
பலர் வந்து தடுத்தாலும் பாரே பிளந்தாலும்

பிளந்து நிலஞ்சிவக்க பிறக்குமெம் தேசத்தில்
கலந்துகொள் ஒரு கையும் கொடு, விடியுமடா..


ஐம்புலனும் மறவாத அந்நாள்..


இன்றும் பூக்கள் மலர்கிறது
வாசம் காற்றில் அவிழ்கிறது
ஆனாலெம்
சுவாசத்தில் மட்டும் இன்னமும் மாறவேயில்லை
நாசிக்குள் நின்று விட்ட
கந்தக வாசம்

நிறையப் பாடல்களும், பேச்சுகளுமாய்
அறை நிறையக் கிடக்கிறது இற்றை,
ஆயினுமெம்
செவிப்பறை கிழிந்து வழிந்த
குண்டின் ஓசைகளோ
காலவெளிகளைத் தாண்டி
இன்னமும் காதுகளில்

கட்டிடம் மேவினாலும்
காட்சிகள் மாறினாலும்
சாட்சியாய் இன்றும் கண்ணில்
காட்சிகள் உண்டு, வெண்மண்
செம்மண்ணாகி ரெத்தச் சேறாகி
புகையாயெம்
கனவு மேலெழுந்து கலைந்த காட்சி ஒன்றே
என்றைக்கும் கண்முன்னால் எப்பொழுதும்..

சுவை நரம்பறுந்ததா, சுவையிலா அமுதிதா?
எதுவும் தெரியாத உணவு, கரை நெடுக
பேச்சறுந்து போய் பெரும் மெளனம்
வெறும் வாயால்
ஆச்சரியம் ஏதும் ஆகாதென்றறிவு
வீச்சாக நின்றவர் விடைதந்து
வேகமாய் நாட்களும் ஓடிற்று
ஆனாலும் கூட அறிக, உமையென்றோ
நான் மறந்தாலும் கூட
‘நா’ மறக்காது  நாயகரே

தெய்வத்தால் ஆகாத தீராத கவலையிற் தான்
மெய்யிலும் உணர்வுற்று
மெய் வருந்த வழி அமைத்தோம்
உய்வோம் என்றெண்ணித்தான்
உயிரையும் கொடுத்து நின்றோம்
கை நழுவிப் போய்விடுமா கனவு?
எதுவெனினும்
பொய்யில்லை எங்கள் போராட்டம்
என்றைக்கோ
மெய்யுணர்வே மெய்யாகி மீண்டெழுவோம்

ஐந்து புலனும் அவிந்து அடங்கி
சிந்தை மரிக்கும் நேரம் வரைக்கும்
அந்தா நிகழ்ந்த இனப்படுகொலையை
வெந்து எரியும் போதிலும் மறவோம்
எந்த நாளில் எம்முடை விடுதலை
எந்தையர்  மண்ணில் பரணியியைப் பாடுதோ
அந்த நாள் வரும்வரை ஆவியில் கூட
சொந்தமண் வாசமே சுற்றி வருமடா..


வெள்ளி, 1 மே, 2020

உயிரால் எழுதல்..

என்ன தானென் எதிரி ஆகிலும்
கண்ணநீர் கசி கலைவடிவொன்றை நீ
என்புருகும் படி இயம்புவாயெனில்
என்னை மறந்துதுனை ஏற்றிப் புகழுமோர்
தன்மை கொண்டதென் மனசடா,
கலையிலே
உண்மை உண்டெனில் எதுவோ மூளையின்
கண்ணை மறைத்துக் கட்டவும், மனசது
உன்படைப்பதன் மார்பிலே உருளுதல்
என்னை மீறிய ஏதோ உணர்வினால்
உன்னப்பட்டு நடக்குது, ஆகையால்

உயிரை எழுது உந்தன் உயிரால் எழுது,
என்னுடை
அரசியல் வேறென்றும் அறி..


வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

திருவை அழை உந்தன் திருவடிக்கே..

ஆற்றங்கரை மரம் போல் வாழ்வின்
அடுத்த நொடி அறியா அச்சம்
கூற்றுவனாய் என்னைக் கொல்லும்
கொடுமையினின்றென்னை மீட்டு
தேற்றி உளமாற்றி கரை மேல்
ஏற்றுவையோ நல்லூர் வேலா..?

காற்றிடையில் பட்டுலையும்
கலவரின் மனமாய் ஆன
நேற்றையும், இன்றும் இன்னும்
நீளுமோ வேலா? மேலும்
சாற்றவோர் வார்த்தை இல்லை
சக்தியும் இல்லை, பாராய்..

இருபாடும் எரிகின்ற கொள்ளியின்
இடைமாட்டி
எதுசெய்வதறியாது எரிகின்ற
எறும்பைப் போல்
ஒருதிக்கும் அறியாது உடைந்து
நொய்ந்துள்ளே
உருக்குலைந்து போகின்றேன்
வாழ்வு நாளைக்கு
தெருக்கிடந்துலையுமோ தெரிகிலேன்
அதன் முன்னர்
திருவை அழை உந்தன் திருவடிக்கே
என் வேலா..


வெள்ளி, 15 நவம்பர், 2019

ஏன் நடந்தோம் என்பதறி..

கொற்றமும் கனவுகளும்
கொளித்துக் கிடந்த எம்
முற்றத்தில் இன்றந்த
மூச்சின் தினவில்லை

ஏறும் படிகளிலே
இருந்தபடி தோழர்கள்
கூறிய கதைகளிற் தான்
குறிப்பெடுத்ததெம் கனவு
எடுத்த குறிப்புக்கள்
எங்கெங்கோ இருந்தாலும்
எடுத்தவர்கள் இல்லை
இருந்த வீட்டுப் படியுமிலை

கதை அறிந்த கதவும்
கந்தகத்தின் மூர்க்கத்தில்
சதை பிய்ந்து கிடக்கிறது
சாளரத்தின் வழியாக
ஊர்ந்தன்று நுளைந்திட்ட
ஒளிநிலவு இன்றைக்கும்
கூரையற்ற வீட்டுக்குள்
குதித்து, முன்பு தன்னை
பார்த்துருகும் விழிகளினை
பார்ப்பதற்கு படர்கிறது

சிதறிப் போய்க்கிடக்கும்
சுவரில் தொங்குகின்ற
கதையின் நாயகர்கள்
கதையும், சிரிப்பொலியும்
ஒவ்வொரு கற்களிலும்
உளுத்திருக்கும் படலையிலும்
இவ்வளவு நாட்போயும்
இன்னும் கேட்கிறது..

பாறிய பூவரசைப்
பார்த்தழுதே எம்வாழ்வை
கூறிவிற்கும்படி ஆக்காமல்
பதிலுக்கு,
நல்ல கதியால்கள் நடு,
படலை கட்டு,
இலகுவில் இடியாத
எமக்கான கல் தேர்ந்து
படி ஆக்கு,
நிலை, கதவு, சுவர்களெலாம்
பூகம்பத்தையே தாங்கும்
சுவல் வலிமை கொள்ளட்டும்..

முக்கியமாய்
இவ்வளவும் ஏன் நடந்தோம் என்பதறி
விடியுமடி..


வெள்ளி, 26 ஜூலை, 2019

நேரமுள்ளை நிறுத்து

எங்காவதென்னை
ஏந்திச்செல் காற்றே
தங்கித் தங்கித்
தவமிருந்து காத்தும்
எங்கும் விரிந்த இருள்
இறங்குவதாய்த் தோன்றவில்லை
மங்கிய விழியிலொளி
மலர இனி வாய்ப்புமிலை

ஆண்டாண்டோட
அடர்ந்தடர்ந்து வெறுமையது
தோண்டித் தன் கனமென்
தோள் மீது வைக்கிறது
நீண்ட தூரமெந்தன்
நிலைமீறிச் சுமந்து விட்டேன்
பாரமினித் தாங்குகிலேன் பரமே
சீக்கிரமென்
நேரமுள் தன்னை நிறுத்து..


ஞாயிறு, 14 ஜூலை, 2019

மர வளையம்..

வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும்
மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்
தியாகத்தாலும், உழைப்பாலும்
கட்டப்பட்டும் ஏனோ வீழ்ந்துகிடக்கும்
எம் கனவு தேசமே கண் முன் வரும்

காட்டாற்று வேகத்தை
கடும் வறட்சியை
பூட்டிக் கிடக்கின்ற கற்தரையை
வெட்டிப் பிளந்து வெளிவந்தும்
சுற்றி நிற்கின்ற
சூழ்ச்சிகளைத் தாண்டி
உயர்ந்து கிளையகட்டி
நிமிர் விருட்சமாகும் வரை
எத்தனை கதைகளினை
காலக் குறிப்புகளை
ஏந்தி வந்திருக்கும் அந்த மரம்

அறுக்கப்பட்ட குறுக்கு வெட்டில்
தெரியும் ஒவ்வோர் வளையமும்
அதன் பாதச் சுவடென்பர்
பார்க்கத் தெரிந்தோர்
ஒவ்வோர் வட்டத்துள்ளும் வாழும்
ஓராயிரம் கதைகளை
எவரேனும் என்றேனும்
எழுதியதுண்டா..?

இடையனாய் இருந்த
கவிஞனொருவனின் காதுகளுக்கு
கன்றைக் கண்டவுடன்
பசு மடிக்கு பாய்ந்தோடி வரும்
பாலாற்றின் இனிய
சங்கீதம் கேட்குமாம்

கற்காலக் குறியீட்டை
கண்காணாக் காலத்தில்
விண்வெளியில் அசையும்
விந்தைகளை எல்லாம்
கற்றுக் கொள்ள எண்ணும்
மனிதன் ஏனின்னும்
தன்னோடு வாழும்
தனக்கின்னும் மூச்சுத் தரும்
மர வளையம் சொல்லும்
வரி எழுத்தைக் கற்கவில்லை ?
படியெடுக்க முயலவில்லை..?

என்றைக்கு எவனால்
இதையறிய முடிகிறதோ
அன்றைகே அவிழும்
ஆதி நீரூற்றின்
அவிழாத புதிர் முடிச்சும்
அதன் பின் எழுந்தவற்றின்
அத்தனையும்..


வெள்ளி, 5 ஜூலை, 2019

எப்போது பூத்ததிந்த ஒற்றைப் பூ..

காய்ந்து கிடந்த இருள் வனத்தில்
எப்போது பூத்ததிந்த
ஒற்றைப் பூ?
வான் பார்த்து ஏங்கி இருந்த
வரண்ட நிலத்தில்
எங்கிருந்து விழுந்ததிந்த
மழைத்துளி?
ஆண்டுகளாய் புழுதி பறந்த
ஆற்றுத் தடத்தில்
என்றைக்கு ஓடத்தொடங்கிற்று
இந்தக் குளிராறு?
காம்பு முறிந்து தொங்கிய
காய்ந்த மொட்டு
எப்போதிந்த ஈரக்காற்றுப் பட்டு
இதழ்களை அவிழ்த்தது?
இத்தனை கோடி ஊசித்துவாரங்கள்
எனக்கும் கூட உண்டா உடலில்?
அத்தனையிலும் ஆர் நட்டார்
இத்தனை ஆயிரம் குத்திட்ட பயிர்களை?
தகிப்பதனாற் தான் இதனை
தேகம் என்று சொன்னாரோ?
உப்புக்காற்றை ஊதுகின்ற
அடரிரவின் ஊழையில்
ஆழ்கடலில் வழிதொலைந்தவனுக்கு
எங்கோ தூரத்தில் மின்னி மறையும்
வெள்ளியா இந்த
உயிர் விளக்கு..


வெள்ளி, 7 ஜூன், 2019

இப்படியாய் தமிழன் இருப்பு..

பறவையில்லா மாந்தோப்பு
பச்சையற்ற மேய்ச்சல் நிலம்
தேனியற்ற பூஞ்சோலை
நீர்மையற்ற வாழையடி
தலை கருகும் பனைமரங்கள்
தடமழிந்து போன நதி
புராணக் கதையாகும்
பொன்வண்டு, மின்மினிகள்
தம்பளப் பூச்சியற்ற
தண்பனியின் உதிகாலை
தான் வாழ்ந்த வழியெங்கும்
தடைகள், தெரிவின்றி
முட்டிச் சாகின்ற
முரட்டானைக் கூட்டங்கள்
மற்றும் தமிழரும்..


வெள்ளி, 17 மே, 2019

இந்த நாட்கள் மே 17-18

சில் வண்டில்லாத
அடர் காடாய்
காற்றூதல் கேட்காத
இராக் கடலாய்
தவளைகள் பேசாத
குளக் கரையாய்
சிறகோசை இல்லாத
பழ மரமாய்
தொடுவானம் தெரியாத
விரி வெளியாய்
நீங்களும் விடைபெற்ற
இந் நாட்கள்..