சனி, 21 டிசம்பர், 2024

சிதைவுகளின் அமைதி இசை

பாழ்மனை இடையது வளியரற்று கேட்பே

கல்லுடை சிதைவின் கலிழ்வொலி பிறக்கும்

விரிசல் தோறும் பொழுதின் பண்ணிசை

மறந்தன எல்லாம் கலிழின தோன்றி

-

முன்னாள் புகழொடு நின்றன தூண்கள்

வாய்பொத்தி உறைந்தன கிடப்பினும் இன்றே

அவற்றின் நிழல்கள் முடிவிலா நெறியின்

நீண்டன போகிய காட்சியும் காண்குவம்

-

சிதர்ந்து கிடந்த கற்களின் இடையே

பண்டைய செய்திகள் துயின்றன கிடக்கும்

நகையும் கண்ணீர்த் துளியும் இணைந்தே

எதிரொலி கொண்டு முழங்குதல் கேட்பே

-

யார்கொல் இந்நிலம் மிதித்துச் சென்றோர்?

யார்கொல் இங்கிருந்து அழுதனர் மறைந்தோர்?

யார்கொல் காதல் கொண்டிங்கு மகிழ்ந்தோர்?

என்று வளியானது வினாவினை எழுப்ப

விடைகள் எல்லாம் யாண்டுகள் பலவாய்ப்

பாழ்மனைக் கிடக்கும் இடிபாட்டு உறையுள்

புதைந்தன கிடக்கும் உண்மையின் காவல்

நிற்கும் இச்சிதைவு நிலையுடை மனையே

-

உடைந்த உருவம் ஆயினும் இவைதாம்

விட்டிடா நெஞ்சின, குனியா மானத்து

நிற்குமிவ் விடிவுகள் நினைவுறு காலை

வாழ்வின் நிலையாமை வாழ்ந்த வாழ்வொடும்

சான்றாய் நிற்குமிவை சாற்றுதல் வேண்டும்

-

சுவர்கள் இடிந்த போதினும் இன்னும்

பாழ்மனை உயிர்ப்பெழும் பரந்தெழு காலை

பெரும்பேரமைதி சூழ்தர நிற்ப

அடிச்சுவடு யாவும் கருத்தொடு வைக்க

வாழ்வின் இசையது வழிவழி நின்றே

பாடல் பாடும் இப்பாழ்மனை தானே..

வியாழன், 19 டிசம்பர், 2024

தொன்மைத் தீ..

மாலை மறைவின் மருங்கு தோன்றி

கனல் சிறிதெஞ்சி கதிர்விரி காலை

நிலம்புக வேரூன்றி நின்ற பண்பின்

பெருமழை பொழியினும் பேர்புனல் சூழினும்

முன்னோர் வாய்மொழி முகிழ்த்த வேள்வித்

தீச்சுடர் பரப்பி திசையெலாம் நிற்கும்

-

கூடிய மாந்தர் கொண்ட கதைகள்

கேள்வி பூத்த கிளவி ஆயினும்

நினைவின் சுடர்த்தீ நெஞ்சகம் காக்கும்

உயிர்த்த புகையின் உணர்வொடு கலந்து

பண்டைய மொழியின் பரந்த நினைவுகள்

சாம்பல் மணத்தின் சான்றொடு நிற்கும்

-

காற்றின் வலியும் கடுமழை நீரும்

சுடரின் நெஞ்சம் சோர்வுறச் செய்யா

நுண்ணிய தீயின் நுடக்கம் போல

இருளை வென்று இயல்பொடு நிற்கும்

-

அலைகடல் ஓதம் எத்திசை பரவி

நிலைபெறு காலம் நெடிது கழிந்தும்

வாய்மொழி சுமந்த வழித்தடம் காத்து

நின்றது கனலின் நேர்மை யதுவே

-

முதுமொழி கேட்டோர் பயின்ற பாடல்

தண்மை சான்ற தகைமையின் நிற்க

தொன்மை நினைவின் துலங்கிய பேரொளி

கனல்சுடர் மாயா காட்சி காண்க

-

விண்ணின் மீனும் வெயிலின் கதிரும்

மறைந்த போதும் மாயா வண்ணம்

தனித்த தீயின் தகைமை கண்டு

அறிவுடை மாந்தர் அகத்துள் கொள்ப

-

கடல்நீர்ப் பரப்பின் கால்கொண்டு சென்றும்

பழமை காப்போர் பண்பினர் போல

தொன்மொழி சுமந்த துறைமை காத்து

தீயொளி நிலைபெற்று திகழ்ந்து நின்றதே

திங்கள், 16 டிசம்பர், 2024

முடிவிலா இசை..

கண்ணுறா வினைஞன்

கைவல் யாழினால் வாழ்வெனும்

பண்ணிசை பாணன் மீட்டலின்

நகையொலி

தண்ணுமை நயந்து கேட்பவும்

அழல்வலி குழலிசை அகன்று பாயவும்

கலந்துடன் முழங்கிய களிநடம் போலவே

இசைத்திடும் வாழ்வெனும்

யாழின் ஓசையே

-

பாடா வரிகளின் பரந்த பேரழகு

மௌனம் தழுவிய மாண்பின் பொற்புடன்

நிறைவுறா யாழிசை நெஞ்சம் கொள்ளுமே

யாவனோ இவ்விசை இயற்றும் பாணனும்?

நெஞ்சமோ? உயிரோ? நேர்ந்த இன்பமோ?

துன்பமோ? என வினா துயர்ந்து நிற்குமே

-

தனித்தனி உயிர்களின் தகைசால் பாட்டினால்

மாந்தர் நெஞ்சத்து மாபெரும் யாழிசை

இசைத்திடும் வண்ணமே இனிது பாடுக

-

பின்வரும் அமைதியில் பிறங்கும் பேறுடன்

மரபுடை மாண்பினை மறவா வண்ணமப்

பேரொலி வானில் பெருகி ஓங்கிட

யாழிசை அடங்கினும் எதிரொலி நிற்குமே..

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

என் மண்ணே

காயப்பட்ட பறவை

வானத்திற்காக ஏங்குவது போல

கட்டப்பட்ட யானை

காட்டுக்காக ஏங்குவதைப் போல

தூண்டில் பட்ட மீன்கள்

கடலுக்காக ஏங்குவதைப் போல

என் தேசப்பளிங்கே

நானும்..

- திரு

வெள்ளி, 13 டிசம்பர், 2024

தமிழரின் தலைப்பயணி..

புலிக்கொடி பறந்திடப் போர்மறன் வருகையில்

சினத்திறல் கனல் விழி செருமுகம் நோக்கி 

மலைப்பெரும் புயத்தினன் மறவர்கள் தலைவனாய்

நிலத்திடை நடந்திடும் நெடுந்தகை தானே

—

பகைப்புலம் புகுந்திடும் பாய்புலி போலவே

மிகைப்படை கடந்திடும் மேதகு வீரனாய்

தகைப்பெரும் படைக்கலத் தளபதி ஆகியே

நகைத்திடும் பகைவரை நலிவுறச் செய்தனன்

—

கற்றவை கசடற கருத்தினில் கொண்டு

பெற்றவை பிறர்க்களித் தருளும் பெருந்தகை

சொற்றவை துளியிடை பிறழா தவனே

முற்றவும் முறைமையில் முடிவுகள் காண்பவன்

—

நெறிவழி நிலைநின்று நீதியை போற்றி

குறிகொளும் குணமிகு கொள்கையின் ஊற்றம்

வெறியுறு போரினும் விதிமுறை தவறா

அறிவொடு செயல்புரி ஆற்றலின் மிக்கவன்

—

மறைந்துறை போரில் மதிநுட்பம் காட்டி

சிறந்திடு புலியின் செயல்முறை கொண்டு

திறம்பல காட்டி திசைதிசை தோறும்

மறம்புரி வீரர் மனங்குளிர் வித்தான்

—

மூளைவல் லோனாய் முனைமுகம் நோக்கி

ஆளுமை மிக்க அறிவொடு நின்று

தேர்ந்தெடு போரில் திறமுடன் வென்று

சான்றோர் போற்றும் தகைமையன் ஆனான்

—

எண்ணிய எண்ணம் இயற்றலில் வல்லோன்

மண்ணின் மீதே மாற்றார் நடுங்கிட

கண்ணில் கனலும் கடுந்திறல் மிக்கவன்

விண்ணை முட்டும் வெற்றிகள் கொண்டவன்

—

வருவன உணர்ந்து வழிகாட்டும் ஞானி

பொருவரும் திட்டம் புரிவோன் - தெருவெலாம்

மக்கள் மனதினிலே மாமணி யாகவே

மிக்க புகழொடு மேல்

—

தமிழுக்காய் வாழ்ந்த தனித்தகு செம்மல்

அமிழ்தினும் இனிய அருந்தமிழ் காத்து

நிமிர்ந்தெழு தோற்றம் நினைவிடை கொண்டு

சமர்க்களம் புகுந்து சாவினை வென்றான்.. 

புதன், 11 டிசம்பர், 2024

இனமும் மொழியும்.

யாங்கணும் பரந்த இம்மண் ணுலகில்

தேங்கிய மொழிகள் செழித்துள வெல்லாம்

முந்துநீ பிறந்து முகிழ்த்தனை என்பர்

சிந்தையில் தெளிந்த செம்மொழித் தாயே

கற்றவர் போற்றும் கனிச்சுவைத் தமிழே

பொற்புறு செந்தமிழ்ப் பூங்கொடி நீயே

 --

சங்கநூல் தந்த சால்புடை மரபே

பொங்குநீர்க் கடலின் புதுமையும் காட்டி

மலையின் தீரமும் மருதநிலக் களிப்பும்

நிலவிய பாடல் நெஞ்சினில் தந்தாய்

எண்ணிலா நூல்கள் எழுதினர் முன்னோர்

கண்ணுறு தமிழின் கவின்மிகு நெறியே

--

ஓசையின் இனிமை உயர்வுற வளர்ந்து

பேசிய சொற்கள் பெருமையை நல்கி

இலக்கண வளமும் இயல்பொடு கொண்டு

கலக்கமில் சிந்தை கருத்துரை தந்து

நுண்ணிய பொருளும் நுவலுதற் கெளிதாய்

எண்ணிய வெல்லாம் இயம்பிடும் மொழியே

--

வேற்றவர் வந்து வேரறுத் தாலும்

ஆற்றலின் மிகுந்த அருந்தமிழ் வாழும்

எத்தனை காலம் எதிர்த்தனர் ஆயினும்

முத்தமிழ் ஒளியை முடக்கிட முடியா

தென்றமிழ் வாழும் திசைதொறும் பரவி

வென்றிடும் நாளும் விரைவினில் வருமே

--

கால்கொண்ட முகிற்பூ கருநிறம் கொண்டு

மேல்வரும் போதே மின்னொளி காட்டும்

அதுபோல் எங்கள் அடிமைத்த னத்தில்

புதுவெளிச் சுடரின் பொலிவுத் தோளெழும்

விடியலின் ஒளியே வெற்றியின் முரசே

படியெலாம் தமிழர் பரவிடும் அரசே

--

தமிழரின் தாயகம் தனித்திறங் கொண்டு

அமிழ்தென மொழியும் அறிவொளி பரப்பி

பகைவரும் நட்பாய்ப் பணிந்துவந் தேத்த

நகைமுகம் காட்டி நல்லறம் பேணி

தன்னுரி மையோடு தனிநாடு கொண்டு

மன்னுயிர் காக்கும் மாண்புறும் ஆளும்..

செவ்வாய், 26 நவம்பர், 2024

நினைவுகளில் மாவீரம்..

ஒவ்வொரு முறையும் விளாசி எரிந்த

காட்டுத் தீயின் பின்னும்

முளைக்கும் இளந்தளிராய்

இருந்தீர்

இயந்திரங்களாலேயே உடைக்க முடியாத

பாறைகளை பிளக்கும்

வேரின் வீரியமாய் மனத்திடம்

"எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம்"

என்பதுவாய்

ஊறிக்கொண்டே இருந்தது

ஓர்மத்தினவு

நூற்றாண்டுகளாய் மோதி மோதியும்

முயல்வை இழக்காத அலைகளாய் இருந்தீர்

கடலும் கூட வற்றிவிடலாமென்பது

கற்பனையில் கூட இருந்திருக்கவில்லை

கடைசி வேட்டும் தீர்ந்து

மண்டி இருந்த கந்தகப் புகையும்

விலகிய போது

கண் முன்னே வீரயுகம்

கனவாய் முடிந்து போனது

எரிந்த காட்டுத் தீயில்

தீய்ந்தபடி வெளியில் வரும்

உயிரினத்தில் ஒன்றாய்

எஞ்சிய நாம் அலைந்து திரிகிறோம்

விண்ணில் மீனாக

நீங்கள்

மண்ணில் வீணாக

நாங்கள்..

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

துறைமுகமற்ற கப்பல்..

சேர்ந்திருந்தும் 
தனித்திருந்த வாழ்வில் 
இன்மையும் வெறுமையும்
படரும் காலத்தில் 
மென்மையும் அன்பும் நிறைந்த 
ஒரு கரத்தை 
விதி முன்னே நீட்டுகிறது 

துளி நீருக்கு ஏங்கும் 
பாலைவனத் தாகம் 
பற்றிக் கொள்கிறான்

ஈரம் கசியும் அவளின்
உள்ளங்கையை கோர்த்தபடி 
நடக்க, நடக்க
எங்கும் துளிர்க்கிறது பசுஞ்சோலை 

மீண்டும் விதி 
காதில் ஏதோ கிசுகிசுக்க 
பூவிலிருந்து இயல்பாய்  அவிழும் இதழென 
பற்றி இருந்த விரல்களை 
ஒவ்வொன்றாய் விடுவிக்கிறாள்   

அன்பின் சுனையில் துளிர்த்த 
பாலைவனப் பசுஞ்சோலை
மணற்புயலில் காணாமற் போய் விடுறது 

பற்றி நடந்த பழக்கத்தில்
ஒற்றையாய் காற்றில் வீச முடியாமல் 
அவன் கைகள் 

ஒளிவிழும் இடமெங்கும்
இருள் நிழல் 
கலங்கரை விளக்காய் இருந்தவன்
கல்லறை இருளாய் ஆகினான்

துறைமுகம் அற்ற கப்பலாய் 
வாழ்வு.. 

புதன், 24 ஜூலை, 2024

இவரால் நடப்பதாய் எண்ணி..

கருக்கட்டிய மேகத்தின்

பன்னீர்க் குடம் உடைந்த போதில்

மழை வேண்டி அவர்கள்

யாகம் தொடங்கினர்


கனிந்த பழம்

காம்பிலிருந்து கழன்ற வேளையில்

எழுந்தமானமாயொருவன்

மரத்துக்கு கல்லை வீசினான்


அலைகள் வேகமாய்

கரையில் அடித்த போது

கடலில் நீந்திக் கொண்டிருந்தவன்

கையை ஓங்கி அடித்தான்


நூற்றாண்டுப் பெருமரத்தின் முதுவேர்கள்

பற்றியிருந்த மண்ணிலிருந்து

தம்மை விடுவித்த போதில்

அப்பால் வந்த ஒருவன்

கால்களைக் காற்றில் உதைத்தான்


இப்படித் தான்

தாமாய் நடப்பதை

தம்மால் நடப்பதாய்..

திங்கள், 20 மே, 2024

உண்மை அஞ்சலி..

தனக்கென ஏதுமின்றித் 
தன்னையே தந்தவரின் 
கனவைத் தியாகத்தை 
கட்டி உருவாக்கல் தான்
உண்மையாய் அவர்க்குச் செயும்
உயரிய அஞ்சலியாம்

மாறாக

எத்தனை கூட்ட மேளம்
எவரதிகம் , எக்குழுவின் 
கூட்டத்திற் கதிகம் 
கூட்டம் வந்ததென 
தேட்டம் குவித்திடுதல் அல்ல 
எண்ணிப் பார்

இச்சிறு சனத்தொகைக்கு 
எத்தனை தியாகங்கள் 
எச்சகத்திலும் எங்கும் 
நடந்ததிலை, இதன் பிறகும்
கன்னை பிரிந்தடிபடுதல் 
கயமையின் உச்சமடா

வாய்ப்பினியும் வாராது,
வழிவிடுங்கள் அமைப்புகளே 
சாப்பயத்தை சட்டைசெய்யாச்
சரித்திரத்தில் இருந்தொருவன் 
இளையோரை வழி நடத்த 
எழட்டும்..