புதன், 8 மே, 2019

மூச்சின் வாசனையை முகர்..

தகிப்பில் அதிரும்
நரம்புகளின் உணர்முடிச்சின் பீடத்தில்
உன்மத்தம் துடித்த ஒருகணத்தின் போது
உனையே மறந்து
காதல் அவிழும் என் கண்களை
காணவென நீ திரும்பிய போது
சூரியனை கடல் விழுங்கிற்று

கத்தியேனும் மனசை
காதில் விழுத்த நீ
எத்தனித்தபோது வான் குலுங்க
என்றுமில்லா இடி
பேரோசை சிற்றோசையைத் தின்றது

ஈரநெருப்பின் இதத்தில்
அங்கம் இணைத்தேனும்
ஆசையைச் சொல்வமென
கைகளை நீட்டிய படி
நீ ஓடிவந்த போது
கால்களின் முன் காய்ந்திருந்த பள்ளத்தால்
காத்திருந்த காட்டாறு
கரைபுரண்டு தன்னோடு
அந்த முயல்வினையும் அடித்துச் சென்றது

மூச்சின் வாசனை அறியாதவளா நீ
முகர்ந்தேனும் எனை உணர முற்பட
காலில் நசிந்த குளைகளின்
காட்டு மணம் காற்றெங்கும்

பருவத்தில் மட்டுமே ஊறும்
மலையருவி நீ
காலவிதி இடையே ஊடறுத்து
வேளையினை நீட்ட
ஊற்றடங்கி, கசிந்த நீர்காய்ந்து
உன்நிலை
தன்நிலை உணரத் தலைப்பட்ட போது
என்நிலை தெரிந்த இதயம் நின்று
மீண்டும் துடித்ததுன் மூளை

இமைக்குமுன்
ஏதோ உணர்ந்தவளாய்
எதிர்த்திசையில் திரும்பி
ஏறத் தொடங்கினாய்
கடந்து செல்லும் முகிலாய்
ரதியின் உரு கலைந்து செல்கிறது

உயிர்ச் சஞ்சாரமற்ற
பொட்டல் வெளியின் தொடுவான் கரையில்
மங்கலாய்த் தெரியும் ஒற்றைப் பனையாய்
மீண்டும் நான்..


வாழ்நாட் கனவு..

எத்தனை உயிர்கள்
எத்துணை தியாகம்
எத்தனை ஆண்டுக் கனவு
அத்தனை உழைப்பின்
ஆயுளும் எப்படி
இத்தனை சீக்கிரம் கலைந்தது..?

வீழும் என்று எண்ணியே இராத
வீரயுகங்கள் கண்களின் முன்னால்
மாழும் என்கிற படிப்பினை தன்னை
மனசும் நம்ப மறுக்குது,

கந்தகப் புகையாய் கலைந்தன்று சென்ற
கட்டி நாம் காத்த நற்கனவு
எந்த நாள் நனவாய் ஆகுமோ அறியேன்,
இருப்பனோ என்பதும் தெரியேன்.

எந்தநாள் ஆயினும் ஆகட்டும்
ஆனால்
ஆகத்தான் வேண்டும் இறைவா..

வியாழன், 25 ஏப்ரல், 2019

இன்னமும் இருக்கிறது..

ஓர விழிகளில்
உள்ளம் கசிகிறது
ஒரு போதும் அதை நீ சொல்லுவதில்லை

ஈரமாகும் மனம்
எனக்கும் இருக்கிறது
என்றும் அதை நானும் காட்டுவதில்லை

கவிதையென்று மெதுவாய்
நீ தொடங்குவாய்
காலநிலை பற்றி நான்
கதை பேசுவேன்

பாடலின்று கேட்டாயா
நான் தொடங்குவேன்
வேலையின்று கடினமென
நீ விழுங்குவாய்

இப்படியாய் துளிர்த்த மரம்
கிளை வைத்து இலை அடர்ந்து
நிழலில் இருமனமும்
நிம்மதியாய் கால் நீட்டி
அமர எண்ணுகையில்
நிலத்தைப் பிளந்தது
யுகப் பிரிகோடு,
வழியின்றி நடக்கத் தொடங்கினோம்
வடக்காய் நானும்
தெற்காய் நீயும்

அந்த மரம் இன்னும்
அப்படியே இருக்கிறது..


திங்கள், 18 மார்ச், 2019

கரங்களை நீட்டும் கனவு

இலை உதிர்ந்தாலென்ன நண்பா
பார்த்துக் கொண்டிருக்க
பருவம் மாறும் துளிர்க்கும்
கிளை உடைந்தாலும்,
இருக்கட்டும்,
இன்னொரு கிளையுண்டே,
போதும்,
மரமே பாறி வீழ்கிறபோதுதான்
உரஞ்சிதறிப் போகிறது
ஆயினும்
இப்போதும் கூட எழச்சொல்லி
கரங்களை நீட்டுகிறதென்
கனவு..


அவதானம்..

தோற்ற தன் நண்பனுக்கு
தோள் கொடுத்து அவன் மனசை
ஆற்றுப்படுத்துமோர் ஆறுதலைச் சொல்லாமல்
விழுந்தான் எனுங் கணத்தில்
விலத்தி மிகத் தந்திரமாய்
அத்துணை வேகமாய் கழன்ற அவன்
உமை நோக்கி
ஓடி வருகின்றான் ஒட்ட,
அவதானம்..


அப்படியே தான் இருக்கிறது..

வாழ முடிந்த வாழ்வையும்
இன்புறக் கிடைத்த இளமையையும்
எதன் பொருட்டு துறந்தாயோ

வெடித்துப் பறக்கும்
பருத்திப் பஞ்சின் கனம் தான்
உயிரென்பதுவாய்
இரெண்டு கைகளாலும்
அப்படியே வழித்தெடுத்து
எதற்காக உன்னையே நீ
தாரை வார்த்தாயோ

ஆண்டுகள் பல ஓடிப்போயிருப்பினும்
அதற்கான காரணங்கள்
இன்னும் அப்படியே தான் இருக்கின்றன
நண்ப..


விடுதலைக் கனவு..

எந்தைகள் முயன்றதை
நாங்களும்
நாங்கள் முயன்றதை
மகன்(ள்)களும்
மகன்(ள்)கள் முயன்றதை
பேரர்களுமென
எத்துணை இழப்பினும்
நனவாகுமெனும்
நம்பிக்கையை மட்டும் இழப்பதில்லை
விடுதலைக் கனவு..


செவ்வாய், 5 மார்ச், 2019

மறைவதெல்லாம் காண்பமன்றோ..

நாட்கள் ஓடி நரைத்தாலும்
இன்னும் கமழ்கிறது
நாசியில் காட்டின் வாசனை

எறிகணைக்கு பாதி முறிந்தாலும்
இன்னும் நிமிர்வாய் நிற்கிறது
மனசில் ஒற்றைப் பனை

வற்றிப் போனாலும்
இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது
நினைவில் வழுக்கை ஆறு

மெளனித்துப் போனாலும்
இன்னும் பேசிக் கொண்டிருக்கிறது
காதுகளில் விடுதலைக் குரல்..


சனி, 2 மார்ச், 2019

சமதரை..

உலகைக் காணும் உயரத்துக்கோ
உலகு காணும் உயரத்துக்கோ
எப்படியேனும் செல்ல வேண்டியது
உண்மைதான்,
மலை உச்சி எனினும் நிற்பதற்கு
சமதரை வேண்டுமல்லவா..?
அங்கிருந்து நீ செப்பனிடு
இங்கிருந்து நான் செப்பனிடுகிறேன்
வரைபடத்தில் கூட
தேசம் எல்லைகளில் நடுங்கக் கூடாது

எந்தப் புயலும், வெள்ளமும் இனிமேல்
எதனையும் பிரட்ட முடியாத படிக்கு
அத்தனை தெளிவாய், ஆழமாய்க் கீறு
உயர ஏறி நிற்பதென்பது
நீயும், நானும் தனியாய் நுனியில்
அடையாளத்துக்காய் நிற்பது அல்ல
அதன் பின்னரும், பின்னரும் கூட
இனமாய் சேர்ந்து ஊழிவரைக்கும்..,

உலகைப்பிரட்ட உலகின் வெளியே
துண்டு நிலமும், நெம்பும் கேட்டதன்
அர்த்தம் உணர்வாய், ஆதலால்
வேண்டுமோர் சமதரை
மீண்டும் எழுவோம்..


சனி, 2 பிப்ரவரி, 2019

எழுத்தெனப்படுவது யாதெனில்..

சாளரத்தின் வெளியே
பரந்து விரியும்
பச்சைமரகதப் போர்வையையும்
அதனை ஆரத்தழுவும் தொடுவானையும்
இமைகளை அகல விரித்து
அவனது கண்கள்  பார்க்கிறது,
பறவைகள்
வெளியைக் கடக்கும் வேளை
இமைக்க மறக்கிறான்,
ஒன்றிக் கரைந்தவனாய்
உடல்மொழி மாற
எதையோ எழுதுகிறான்,

ஒவ்வொரு வரியிலும்
காட்சியின் நிறம் ஊறுகிறது
கறுப்பு வெள்ளையில்
வண்ணங்கள் எழுகிற மாயாஜாலம் எழுத்தில் மட்டுமே நிகழும் போல!

அறையில் மெல்லிதாய் மலைப்புல்லின் வாசம்
நாடியை நிமிர்த்தி
மூச்சை ஆழ உள்ளிழுக்கிறான்
எழுத்தில் உயிர்த்த காட்சியிலிருந்து
வாசனை கசிகிறது

மலையில் ஓடும்
குதிரைகளின் குளம்பொலி
நெஞ்சுள் கேட்கத் தொடங்கிய வேளை
எம்மைச் சுற்றி உயிர்பெற்றெழுந்தன
எழுதிய காட்சிகள்

அதிலிருந்து வழியும் அருவியில்
நீராடிச் சிலிர்க்கிறோம்,
நானும், மகனும்
இன்னும் சில குருவிகளும்..