புதன், 25 நவம்பர், 2026

தலைவர் 72

நீ பிறந்த நாளிலிருந்தே 

மரணம் உன்னைத் தேடிக்கொண்டிருந்தது

ஒரு நிழலாய்

உன் தொட்டிலின் மேல் 

சுற்றிக்கொண்டிருந்தது


ஆனால் நீ வளர்ந்தாய் 

கொள்கையில் எப்போதும் 

சமரசரம் இல்லாத ஓர்மம் 

கடலின் அலைகளைப் போல

யாரும் எண்ண முடியாத உயரத்தில்

உன்னைத் தலைவனாய் முன்னிறுத்தியது 


சொல்லுங்கள் எனக்கு 

எப்படி ஒரு மனிதன்

தன் மரணத்தை முந்திக்கொண்டு

வரலாற்றில் நிற்கிறான் ? 


தலைப் பயணியே 

நீ நடந்த பாதைகள் இன்னும் எரிகின்றன

உன் காற் தடங்கள் 

மணலில் அல்ல, இரும்பில் பதிந்தன

எவராலும் அவற்றை இனி

அழிக்க முடியாது


நந்திக் கடல்

உன்  குருதியின் நிறத்தை 

இன்னும் மறக்கவில்லை

கண்டற் தாவர வேர்முடிச்சுகளில் 

உன் பெயர் ஆழப்பதிந்து கிடக்கிறது


இன்னும் பிறக்காத நாட்டில்

பிறந்த மகனே,

உன் பிறந்தநாள் என்பது

ஒரு காயத்தின் ஆண்டுவிழா

ஒரு கனவின் நினைவுநாள்


நீ விதைத்த விதைகள்

இன்னும் மண்ணுக்குள் காத்திருக்கின்றன

வசந்தம் வரும்போது

அவை உன் பெயரில் மலரும்


மண் உன்னை மறக்கவில்லை

எம் மக்கள் உன்னை மறக்கவில்லை

ஒவ்வொரு தாயின் கண்ணீரிலும்

நீ மறுபடி பிறக்கிறாய்


கடைசிச் சன்னம் 

உன்னைத் துளைத்தபோது 

உன்னோடு உடன் நின்றவர்களுக்கு 

என்ன சொல்ல  நினைத்திருப்பாய்..? 

நீ கை காட்டிய இடத்திற்கெல்லாம் 

உன் பின்னால் 

ஓடோடி வந்த மக்களுக்கு 

நினைவறும் நொடியில் எதனைச் 

சொல்ல நினைத்திருப்பாய்.. 


அண்ணா..!

இன்று உன் பிறந்தநாள்

கண்முன்னே நீ இல்லை

ஆனாலும் இல்லாமையிலும் 

இன்னும் இருக்கிறாய்


மரணமற்றவர்களுக்கு வயதில்லை

நீ எப்போதுமே 

அந்த இறுதி நொடியில் 

உறைந்து நிற்கிறாய்


நீ போன பிறகும்

சூரியன் உதிக்கிறது

நிலா வருகிறது, காற்று வீசுகிறது 

மலர்கள் மலர்கின்றன

ஆனால் அவற்றில் உயிரில்லை 


கடைசியாக 

நான் உன்னிடம் கேட்கிறேன் 

வீரனுக்கு மரணமென்பது 

மற்றொரு தொடக்கமா அல்லது 

முடிந்து போன முடிவா.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக