சுரக்கின்ற ஊற்றாய்
இதம் ததும்பும் குளிராய்
தன்னில் கரைந்துருகி
உயிராய் இருந்த
யசோதராவிடமும், மகனிடமும்
ஓர் வார்த்தை சொல்லாமல்
திருட்டுத்தனமாய் இரவில்
வீட்டை விட்டுத் தப்பியோடிய
சித்தார்த்தன்
என்புருக இவனைத் தேடி அவர்கள்
அழும் பொழுதொன்றில்
உலகின் முன்
அவனுள் அறுத்துக் கொண்டிருந்த
அன்பைப் போதிக்கும் புத்தனான்
அந்த முரண்நகை
ஓர் விதையை பிரசவித்த போது
அது துளிர்த்து வெள்ளரசானது
அவசர அவசரமாய் அதன்
கிளையொன்றை முறித்துக் கொண்டு
ஈழத்தீவில் இறங்கினாள் சங்கமித்தை
அவளன்று நட்டுச் சென்றது
அன்பின் கிளையல்ல
ஆற்றொணா வலியின்
முடிவற்ற துயரின் கிளை
காதல் வழியக் காத்திருந்தோரின்
ஏக்கம் நிறைந்த
கண்ணீரில் வளர்ந்த கிளை
பாவம் நிறைந்த கிளை
படர்ந்து அரசான போது
ஒவ்வொரு இலையின்றும் எழுந்த
தாயினதும், மகனினதும் தவிப்போலம்
காதைக்குடைய
தனியாளாய் வலியை
தாங்கொணாத புத்தன்
பூர்வீக மக்களிடம் அதனைப்
பிரித்துக் கொடுத்து விட்டு
காவிக்குள் மறைந்து
கரைந்தான்...
அருமையான கவிதை. அழகான சொல்லாடல். அழகிய கவிதை.
ReplyDeletehttp://newsigaram.blogspot.com
மிக நன்றி
Deleteமிக்க நன்றி
ReplyDelete