Tuesday 6 March 2012

நிறுத்தமற்ற பயணம்..

என்னை எதிர்த் திசையில்
இயல்பாகக் கடந்தபடி
மலை ஆறு மின்கம்பம் மரநிரைகள்
மனிதர்கள்
ஓடிப் போய்க்கொண்டே இருக்கின்றார்
ஓய்வின்றி

உயிர் வாழ்தல் என்கின்ற
ஒற்றை வரத்துக்காய்
நான் ஓடிக் கொண்டெங்கோ
போவது போல் எதிர் கடப்போர்
தாமும் போய்க் கொண்டே இருக்காரோ..

என் பயணம்
வீட்டைக் கடந்து வீதியை கடந்து
சாவைக் கடந்து சந்தியைக் கடந்து
ஊரைக் கடந்து நாட்டைக் கடந்து
உலகினில் உள்ள
பெரிய சிறைகளின் கம்பிகள் கடந்து
குறுகி அழுதும் குலைந்து சிதைந்தும்
வெறியாய் உள்ளே எரிகிற ஒன்றில்
தெரியா வீதி திசைகள் கடந்தும்
புரியா நிலைமை முன்னே புதிராய்
எரியும் போதிலும் இத்தனை காலமாய்
வந்த பயண வீதிகள் எல்லாம்
வரண்டு வெடித்துச் சிதைந்தது கண்டும்
திரும்பிப் போனால் வந்த அப்பாதை
இருந்த இடமே இல்லையாய் ஆயினும்
தொடக்கப் புள்ளியை
சுற்றும் உலகின் சுழலும் வழிகளால்
எப்படியேனும் அடைவேன் என்று
ஏதோ உள்ளே மனசு சொல்வதால்
இன்னும் பயணம் நீளுது..

என்னுடன்
ஒன்றாய்ப் பயணம் வந்தவர் இடையே
ஒவ்வொன்றாகக் கழன்று போவதும்
விதியின் வழியில் புதியோர் சில பேர்
எதுவோ டென்னோடிணைவதும்
போவதும்
ஒவ்வொரு கண்டத் தகட்டிலும்
எத்தனை எத்தனை தோழர்
என்னுடன் சேர்ந்து
ஒன்றாய்ப் பயணம் செய்தார்
இடையில்
எந்தத் தொடர்புமே இன்றி
அவரவர்
தன் தன் பாட்டிலே போயினார்
பறக்கையில்
எதிரே தாண்டும் பறவை ஒன்றை
இன்னொரு பறவை ஏதோ மொழியில்
சின்ன வார்த்தை சொல்லிப் பறப்பதாய்
எந்தன் பயணம் செல்லுது..

எத்தனை பாதை எத்தனை பயணம்
எத்தனை மனிதர் ஆயினும் இன்னும்
எந்தன் பயணம் முடியுதே இல்லை
அந்தத் தொடக்கப் புள்ளியை
அடையுமுன்
எந்தன் மூச்சு நிற்குமோ என்ற
எண்ணமும் இடையிடை எழுகுது
ஆயினும்
சொந்த விருப்பம் கேட்டா உலகைச்
சுற்றிச் சுற்றிப் பாதைகள் நீளுது..?

எந்தன் கவலை இதுதான்
இத்தனை
பட்டுச் சிதைந்து பாதியாய்க் கரைந்து
திட்டுத் திட்டாய் உறவும் பிரிந்து
சொட்டுச் சொட்டாய் இறந்து
இறுதியில்
சொட்டாதிருக்குமோர்
சொட்டு உயிருடன்
தட்டித் தடவி அந்தப் புள்ளியை
அடைந்தேன் என்று வைப்பினும்
இத்தனை
பட்டுக் கரிந்த வலியின்
பாதியில்
பாதிக்காவது ஈடாய் அந்த
எண்ணப் புள்ளியும் இருக்குமோ என்ற
எண்ணம் என்னுள் இறகாய்
முளைத்தும்
ஏதும் நிறுத்தம் இன்றிப் பயணம்
நீளம் நீளமாய் நீளுது
நீளுது...

No comments:

Post a Comment