Tuesday 20 March 2012

நீருக்கும் புரியாத நிழலாய் வாழ்வு..

சூரியனார் கண்ணுறங்க அலைப்பாய் போட்டு
சோ சோ நீ கண்ணுறங்கு எனத்தாலாட்டும்
வீரியத்தாய் கடலன்னை வீசும் காற்றில்
விம்முகிற தெங்கிள நீர் சுமக்கும் தென்னை
வேறேது சொல் கடலை விடப் பெரிதாம் என்று
வினவிக் கேள்விக் குறியாய் தானே நிற்கும்

ஊர் தூக்கப் போர்வைக்குள் போகும் போது
ஊரிமணல் மீதெங்கள் பாதம் போகும்
நீருக்கும் புரியாத நெடிய வாழ்வில்
நிம்மதி தான் நிசப்தம் போல் பொருளே இல்லை
வெண்ணிலவு தானெமது குப்பிலாம்பு
வேறொருத்தி வீடு சென்று மீண்டும் வந்து
தன் கணவன் அணைப்பதனை உதறும் பெண் போல்
தங்க மணற் கடற்கரை தானெங்கள் மெத்தை

நடுக்கடலைத் தொடமுடியாதெனவோர் சட்டம்
நம் வயிற்றில் அடிக்கிறது மீண்டும் முன்போல்
திடுக்கிடவே சுழன்றடிக்கும் சுழிக்காற்றெம்மை
தீனாக்கி மீன்களுக்குப் போடும் மேலும்
நடக்கின்ற கடற் சமர்கள் நடுவில் நாமும்
நசி பட்டு மிதக்கின்ற கோரமுண்டு
சுடச் சுடவே மீன் குழம்பு ருசிக்க நாங்கள்
சுடச் சுடவே கடலேறிப் போவோம் நாளை

வங்கத்துத் தாளமுக்கம் வாடைக் காற்று
வலித்தெழுப்பும் அலைச் சீற்றம் மின்னற் கீற்று
தன் கூடக் கொண்டுவரும் இடி பேய்ச் சூறை
தலை தூக்கும் முதலை சுறாத் திருக்கை வால்கள்
கண் கெட்ட செல் சிதறல் என்று நூறு
காலருக்கு மத்தியிலும் பயணம் நீளும்

விடையில்லா எம் வாழ்வைச் சோகம் கவ்வ
விரிந்தெரியும் மனசோடு உடலும் சோர
உடை எல்லாம் பொத்தல்களான பிள்ளை
உடை என்று கேட்டழுத எண்ணம் வந்து
திடமேற்றும் எம் கரத்தை துடுப்பைத் தள்ள
திருக்கை சுறாக் கனவுகளை உள்ளம் காணும்

இரவிரவாய் உருக்குகின்ற உதிரச் சக்தி
ஒழுகிக் கீழ் வழிந்தோடும் வியர்வையாகி
எம் துயரைப் பார்த்தழுத கடலில் வீழ்ந்து
உப்பாகக் கரிக்கிறது..? உழைத்த மீனும்
சம்மாட்டி கைகளிலே கொட்டுப் பட்டு
சரிந்துதிரும் செதில் மட்டும் எமக்கென்றாகும்
விரிந்துள்ள இப்பெரிய கடலில் வீசும்
வெறுங்காற்றே எங்களுக்கு மீதமாகும்
பெருந்துயரம் எம் முன்னே உப்புக் காற்றாய்
பீறிடுமோர் ஊழையிலே வாழ்வு நீழும்..

No comments:

Post a Comment