Tuesday 6 March 2012

ஆவி உயிர்ப்பாக..

கைப்பிடி அளவு காற்றுச் சுழல்கிற
மெய்யெனும் மெய்யிலா
மேனியுள் அடிக்கடி
பெய்கின்ற எண்ணப் பெருமழையில்
மிதந்தபடி
கை தொட்டுக் காட்சிகள்
கடக்கிறது அருகிருந்த

புல்லில் காலையிலே
பூப்போல மலர்ந்திருந்த
வெள்ளைப் பனித்துளி இன்றி
இப்போதில்
வெறுமிலையாய்க் கிடக்கிறது புல்லும்
மதியத்தில்
எறித்த காலக் கதிரில் அது வாழ்வை
அறுத்துப் போயிருக்கும் வானுக்கு
ஒரு வேளை
கறுத்த மேகத்திரளிருந்து மீண்டுமது

தெறித்திங்கே வீழ்ந்திடலாம் ஆனாலும்
வீழுமிடம்
கறுத்த நெடுங்கடலோ கற்பாறை இடுக்குகளோ
அடர்ந்த பெருங்காடோ ஆர் அறிவார்..?
வீழுகிற
இடமறியா ஓர் நிலைதான்
இவ்வுலகின் பெரும் விதியோ..?

கடலில் வீழ்ந்திருந்தால்
கலந்ததுவாய்ப் போயிருக்கும்
கற்பாறை இடுக்கென்றால் காணேலா
காடெனினும் அதுவே..!

அடையாளம் தெரிய
அவதரித்தல் என்பதெல்லாம்
உடையோனின் கையில் தான் இருக்கிறதோ..?
இல்லையெனில்
இடையிட்ட ஏதேனும் ஏற்பாடோ..?
நாமாக
உடை மாற்றிக் கொள்வது போலொன்றோ..?
எதுவேனும்

என் கண்ணிற் பட்டிறந்த
ஏதோவோர் பனித்துளி போல்
என் வாழ்வும் இன்றெங்கோ தெரிந்து
பெயர் சொல்லும்
ஏதோவோர் பொருளாக இழுத்தோடி
இவ்வளவும்
காலங் கடத்திவிட்ட களைப்பில்
முன்னுள்ள

கண்ணாடி தன்னில்
என் கண்ணைப் பார்க்கின்றேன்
கரைதெரியா தொடுவானக் கடலும்
அதன் மேலே
பொங்கி அடிக்கின்ற நினைவலையும்
அதனூடு
கதிர் நுனிகள் எழுவதுவும் தெரிகிறது,
அதிலிருந்து
ஆட்காட்டிப் பறவை ஒன்று
எனை நோக்கிப் பறக்கிறது
புரிகிறது..

காலைப் பனித்துளியின் காலத்தை
முடிவு செய்த
காலக் கதிரின்று எனைநோக்கி வருகிறது
இமை சுருக்கிக் கண்கள்
எதையோ நினைத்திடவும்
எனையறியாமல் என்
முழந்தாளில் இருந்தபடி
அகலக் கை விரித்து
ஆறுதலாய் மூச்சிழுத்து
அண்ணாந்து நாடியினை நிமிர்த்துகிறேன்..

அடுத்த முறை
மீண்டும் அவதரித்தால் இதுபோல
அடையாளம் நிறைத்தென்னை
விழுத்திங்கே என்றபடி
அடை ஆழம்
நிறைத்தென்னை விழுத்திங்கே
என்றபடி..

No comments:

Post a Comment