Tuesday 13 March 2012

ஊன்றிவிட்டுச் செல்லுங்கள்..

உந்த வேடுவரின் கற்களுக்கு
எப்பேனும்
இந்த மாதிரியாய் தேன் கூடு
வரலாற்றில்
வெந்து வீழ்ந்தடங்கிப் போனதுண்டோ
தேனீக்கள்
நொந்து வீழ்ந்தாலும்
நூறொன்றாய்ச் செத்தாலும்
சந்து பொந்துகளில்
மறைந்திருந்த வேடரது
சங்குகளிற் போட்டுக் கலைக்காமல்
விட்டதுண்டோ..!

எந்தக்காலத்தில்
இப்படியாய்த் தேனீக்கள்
கையுயர்த்திக் கால் மடங்க
வீழ்ந்ததுண்டு..?இதன் பின்னால்
கல்லில் எரி நெருப்பை
கண் செருகும் ஓர் மருந்தை
பூசி அதை வீசும் பக்குவத்தை
எறி வீச்சை
யாசித்து யாசித்து
உலகெல்லாம் கையேந்தி
கூசாமல் ஓர் குலத்தை
அழித்தார்கள், இதையுலகு
பேசாமல் பார்த்துவிட்டு
இருந்ததுடன் அதன் மேலால்
யோசனையும் சொல்லிக்
கொடுத்ததடி, தேன் கூட்டில்

உலகினெரி கற்களெலாம்
ஒருமித்துப் பட்டதனால்
திலகம் போலிருந்த
தேன் கூடு திக்கிழந்து
தீயினெரி நாக்குகளிற்
தீய்ந்ததடி மற்றபடி
வேடுவரால் எந்தவொரு
விரல் நுனியும் வீழவில்லை
ஆனாலும்

அடைக்கதவாய் இருந்து
அர்ப்பணித்த தேனீக்கள்
விடைபெற்ற நாளிருந்து
வீட்டடையிற் கதவில்லை
வேண்டியவன் வந்துவிட்டும்
போகின்றான், தேனீக்கள்
கொடுக்கெடுத்துக் கொத்திக்
கலைக்காது என்கின்ற
தடித்திமிர் வேடனுக்கு
இருக்கட்டும், வீட்டுள்ளே

குழந்தைத் தேனீக்கள் தூங்குகிறார்
அவர் மேலே
காற்றோ அடைமழையோ
கடிக்கின்ற விஷயந்தோ
தோற்ற மன நிலையின்
துளியோ படாமலுக்கு
கீற்றுகளைக் கிழித்துப் பின்னி
ஓர் கதவை
மாற்றம் வரும் வரையில்
மறைத்திடுங்கள், அவர் வளர்ந்து
தோற்றம் பெற்றவுடன் திறப்பார்
கை உதறேல்..!

தேனாய் இருந்த வளம்
திருட்டுப் போய் விட்டாலும்
ஊனை உருக்கி
உயிர் கொடுத்து அதனுள்ளே
தேனைத் துளித்துளியாய்
தேடி வைத்த தேனீக்கள்
இறந்தும் இருளுள்ளும்
எங்கெங்கோ மறைந்தாலும்
பறந்தும் அதற்குள்ளால்
பாதைகளை ஊடறுத்த
சிறந்த மனத்தேனீக்கள்
சிலவுண்டு அவை மீண்டும்
பிறந்து வருவது போல்
வரக்கூடும்..!, ஏனென்றால்

ஏதோவோர் நூலிளையில்
இன்னும் அடை இருக்கு
பாதைகளில் எங்கும்
பரவிக் கிடக்கின்ற
விடியாத கனவில்
விழுந்திறந்த தேனீயின்
மடியாத வீர உரமுண்டு
அதன் மேலே
செடி ஒன்று வைக்க மாட்டாரோ..!
செழித்ததுவும்
விடியல் மணமுள்ள
பூப் பூவாய் வழி எங்கும்
கொடி போல பூத்துவிட மாட்டாதோ..!
அதன் வேரால்
உரமான தேனீயின்
உர மான எண்ணங்கள்
தரமான தேனாகத் தவளாதோ
பூவுக்குள்..!

விரைவாக இல்லை என்றாலும்
அக்காலம்
உருவாகும் மெதுவாக மெதுவாக
தேனீக்கள்
சிறிதாகச் சிறிதாகப் பெரிதாகி
அத்தேனை
வறிதான அடைவாயில் வார்க்கும்
பருவத்தில்
அடைமாறித் தேன் கூடாய் ஆகும்
இதற்காக

எது செய்யப் போகின்றீர் நீவீர்..?
உம் கையில்
செடியுண்டு நீருண்டு
நட்டூற்ற மனமுண்டோ..?
இடம் கொஞ்சம்
மனத்துண்டு ஆயின் இப்போதே
உரத்துக்கு மேலொன்றை
ஊன்றி விட்டுச் செல்லுங்கள்
ஆடு கடிக்காமல் அவதானமாகவுந்தான்
உரத்துக்கு மேலொன்றை
ஊன்றி விட்டுச் செல்லுங்கள்...

No comments:

Post a Comment