Monday, 24 March 2025

உறக்குதலென்னும் சாக்காடு..

உறங்கும் போது துயரம் வற்றிவிடுகிறது,

இரவென்னும் கருப்பு மருந்து

மென்மையாக என் உதடுகளில் கரைகிறது.

ஆனால் விழித்தெழுகையில்

அடித்துப் போட்டது போல்

அத்தனை வலி

-

கனவு என்ற புதையற் குழியில்

சிதைந்துகொண்டிருக்கிறது என் அடையாளம்

தினமும் இறந்து தினமும் பிறக்கிறேன்

ஒவ்வொரு மறக்கப்பட்ட நினைவும்

என் தோலின் ஒரு பகுதி

-

நினைவுகளின் கண்ணாடி அறையில்

எத்தனை முறை

என்னை நானே கொன்றிருக்கிறேன்

உடைந்த கண்ணாடித் துண்டுகளில் பிரதிபலிக்கும்

எண்ணற்ற அகங்கள், எது நான், எது கனவு?

-

என் உற்ற தோழன் இறந்து போனான்

அவனது நினைவுகளைத் திரட்ட முடியாமல் தவிக்கிறேன்

யாருக்கும் தெரியாத ஒரு மரத்தின் பெயர் போல்

ஒரு நாள் நானும் இறப்பேன்,

-

வாழ்வின் பெருமூச்சாக

ஞாபகங்களின் பூச்சி கூடுகள்

உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது.

-

மூளையின் இருண்ட நாடக அரங்கில்

ஒரு கனவு

மேலும் ஒரு கனவைக் கனவு காண்கிறது.

சூன்யத்தின் அப்பால் இருக்கிறேன்

இறந்தவர்களின் குரல்களை

ஒலிப்பதிவு செய்ய காத்திருக்கும்

ஒரு வெற்று ஒலிநாடா

-

நான் உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் என்ன?

பசிக்கும் வயிறா

மகனின் அணைப்பின் சூடா?

-

ஒவ்வொரு மறதியும் ஒரு சிறிய சாவு

நான் பதுக்கி வைத்திருக்கும் நினைவுகளே

என் ஆன்மாவின் செலாவணி

ஆனால் எத்தனை நாணயங்கள் எஞ்சியிருக்கின்றன?

-

நான் இறக்கும் வேளை,

என் நினைவுகள் பறவைகளாக பறந்து செல்லுமா

அல்லது காகிதக் கப்பல்களாக மூழ்கிப் போகுமா?

-

அந்தக் கடைசி நாளில்

மூடிய கண்கள் இமைகளுக்குப் பின்

என்ன காண்கின்றன இறுதியாய்?

கனவா, வாழ்க்கையா அல்லது

வேறொரு பிறப்பின் முதற் தரிசனமா?

-

பொன்னிறக் கதவு ஒன்று திறக்கிறது

நான் நுழைகிறேன்..

No comments:

Post a Comment