Monday, 10 March 2025

காலம் என்னும் காரணம்..

நான் கேட்கிறேன்

காலம் என்பது

இயக்கத்தின் அளவீடா

அல்லது இயக்கமே காலமா?

-

எந்த முதல் புள்ளியிலிருந்து

காலம் தன் பயணத்தைத் தொடங்கியது

அல்லது தொடங்கியதற்கு முன்பே

தொடங்கியிருந்ததா காலம்

-

வெளியில் நகரும் பொருட்களின்

இயக்கத்தை அளப்பதற்காக

மனிதன் கண்டுபிடித்த கருவியா காலம்

அல்லது காலமே கண்டுபிடித்ததா மனிதனை

-

பரிணாம வளர்ச்சியின்

படிக்கட்டுகளில் ஏறி வந்த

மனித மூளையின் வளர்ச்சியில்

காலம் என்பது ஒரு கண்டுபிடிப்பா

அல்லது கண்டுபிடிப்புக்கு முந்தைய

அடிப்படை உண்மையா

-

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்

சாக்ரடீஸ் குடித்த விடம்

இன்று நான் குடிக்கும் தேனீரில்

கலந்திருக்கிறதா

காலத்தின் தொடர்ச்சியில்

எல்லாமே கலந்திருக்கிறதா

-

வரலாற்றின் இயக்கவியலில்

முரண்பாடுகளின் மோதலில்

காலம் என்பது நடுவனா

அல்லது மோதலின் விளைவா

-

உழைப்பின் மதிப்பை

அளக்கும் அளவுகோலாக

காலத்தை மாற்றியது யார்

மூலதனத்தின் கைகளில்

காலமும் ஒரு சரக்கானதா

-

நேற்று இறந்த

தொழிலாளியின் கனவுகள்

நாளை பிறக்கப்போகும்

குழந்தையின் கண்களில்

தொடர்ந்து வாழ்கின்றதா

-

பொருளின் இயக்கமா காலம்

அல்லது இயக்கத்தின் பொருளா காலம்

விடை தேடலின் தொடர்ச்சியில்

கேள்விகளே விடையாகின்றன

-

ஆனால்

காலம் என்னும் காரணத்தை

காரணமின்றி விளக்க முடியுமா

காலத்தைக் கடந்து நின்று

காலத்தை விளக்க முடியுமா

-

நான் கேட்கிறேன்

காலம் என்பது

வரலாற்றின் இயக்கமா

அல்லது இயக்கத்தின் வரலாறா?

No comments:

Post a Comment