Monday, 17 March 2025

கண்ணாடியின் கவிதை

இந்த கண்ணாடி இங்கே எதற்காக

என் முகத்தின் ரேகைகளை எண்ணிக்கொண்டே

காலம் முழுவதும் அமைதியாய் நிற்கிறது

பசித்த நாட்களின் சலிப்பும்

போராட்டங்களின் வியர்வையும்

அதன் மேற்பரப்பில் படிந்திருக்கிறது.

-

ஒரு தொழிலாளியின் உடைந்த கைகளைப் போல

கண்ணாடியின் விளிம்புகள் கரடுமுரடானவை.

அது காட்டும் உண்மைகள்

வறுமையின் வாசலில் நின்ற

குழந்தையின் கண்கள் போல கசக்கின்றன.

-

நீ உன்னைப் பார்க்கிறாய்

ஆனால் அது நீயல்ல

அது உன் தந்தையின் சிதைந்த கனவுகள்

உன் தாயின் கண்ணீரில் கரைந்த உப்பு

உன் மூதாதையர்களின் சாபங்கள்

எல்லாம் ஒன்றாய் உறைந்து போன படிமம்.

-

கண்ணாடி என்ன சொல்கிறது?

அது பேசவில்லை

ஆனால் அதன் அமைதியில்

பல்லாயிரம் மாவீரர்களின் தியாகம்

போராளிகளின் கனவு

ஆயிரக்கணக்கான விதவைகளின் கண்ணீர்

காணாமல் ஆக்கப்பட்ட

காத்திருக்கும் ஏக்கம் நிறைந்த கண்கள்

கலந்திருக்கிறது.

-

இரவில் கண்ணாடி முன் நிற்கிறேன்

என் முகத்தில் படிந்திருக்கும்

எத்தனை போராட்டங்கள்

எத்தனை வெற்றிகள், தோல்விகள்

எத்தனை காதல்கள், பிரிவுகள்.

-

கண்ணாடி காட்டுகிறது

நாளை வரப்போகும் புரட்சியை

மக்களின் விடுதலைப் பாடல்களை

சமத்துவத்தின் வானவில்லை

நீதியின் சூரியனை.

-

ஆனால் இன்று

இந்த கண்ணாடியில்

நான் காண்பது

விடுதலைக்காக ஏங்கும் ஓரினத்தின் முகம்

அநீதியால் சிதைந்த சமூகத்தின் முகம்

கையறு நிலையில் குமையும் தோழர்களின் முகம்.

-

கண்ணாடியே

நீ எனக்கு காட்டுவது

வெறும் விம்பம் அல்ல

அது ஒரு வரலாறு, போராட்டம்

எதிர்காலம்..

No comments:

Post a Comment