வியாழன், 6 நவம்பர், 2025

நிலையாமையின் புவியியல்..


பாறையின் மேல் விழும் பனித்துளி 

தன் நிலைகுத்தச்சை இழக்கிறது

பொருட்களின் புவியீர்ப்புக் கோட்பாடு 

பரிதவிக்கிறது,

இந்த இடைவெளியில்

சாய்வுமானியை நான் கையில் எடுக்கிறேன்  

குமிழி நடுங்குகிறது நினைவுகளின் பரப்பில்

-

வரலாற்றின் மிக நீண்ட

கடற்கரைப் புதைகுழிகளில்

நிலத்தடி நீரின் ஆதிமூலம் போல 

மூச்சுக் காற்று புதைந்திருக்கிறது 

வரலாற்றின் மண்ணில் 

கான மயிலின் தூவிகள் 

பழங்கால வேட்டையாடிகளின் 

அம்புகளாய் உதிர்கின்றன 

-

பனையின் வேர்கள் தொடர்கின்றன 

பூமியின் நடுவரை

மூதாதையர்களின் எலும்புகளை 

வீழாதிருத்தலின் ஆதாரமாய்

பற்றிக் கொள்கின்றன 

-

தோண்டும்போது கிடைக்கும் 

பழைய காலத்து முகத்தில் தெரிகிறது 

காலத்தின் கருப்பு வெளிச்சம்

பண்டைய எழுத்துகளைப் படிப்பது போல 

அந்த முகத்தின் மடிப்புகளை 

கைகளால் தடவுகிறேன்

-

களிறு சென்ற பாதச்சுவடுகளில் 

தேங்கியிருக்கிறது மழைநீர்

அந்தச் சிறு குளங்களில் 

தொல்பொருட் கண்ணாடி போல 

வானம் பிரதிபலிக்கிறது 

-

இப்போது நான் அறிகிறேன் 

இந்த மண்ணின் அடுக்குகளை,

ஒவ்வொரு அடுக்கிலும் புதைந்திருக்கிறது 

எங்களின் மொழியும், காலமும், வாழ்வும் 

சொந்த வேர்களைத் தேடி 

தோண்டிக் கொண்டே செல்கிறேன் 

-

பூமியின் நிழலில் சிக்கி 

திங்கள் கறுக்கிறது 

இந்த இருள்

ஒரு தொல்லியல் அகழ்வாய்வு

நான் கையில் பிடித்திருக்கும் 

சாய்வுமானியின் குமிழி

மெல்ல அசைகிறது 

காலத்தின் அனைத்து திசைகளிலும்

-

துன்பமும் இன்பமும் இரண்டு துருவங்கள்

அவற்றுக்கிடையே ஊசலாடுகிறது வாழ்க்கை 

சாய்வுமானியின் குமிழி போல

அந்த நடுநிலைக் கோட்டை,

பூமியின் ஈர்ப்பு மையத்தை 

நான் தேடுகிறேன்

-

எல்லாமே சாய்ந்திருக்கிறது 

ஏதோ ஒரு கோணத்தில்,

ஆனால் இந்தச் சாய்வுதான் 

பூமியின் சுழற்சியை உருவாக்குகிறது 

இதில் நிலைகுத்தென்பது ஒரு கனவு 

சமநிலை என்பது 

இன்னும் நடக்க வேண்டிய 

மிக நீண்ட பயணம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக