புதன், 29 அக்டோபர், 2025

வாழ்வெனும் வட்டம்…

மணல்மேட்டில் வட்டமொன்று வரைந்தேன்

விரல்நுனியில் உதிர்ந்த மணல்

காயங்களின் வடுக்கள் போல் சிதறியது

இரவெல்லாம் அழுத கண்ணீரின்

உப்புக்கரிப்பு படிந்த மண்

-

அந்த வட்டத்தின் நடுவே

பச்சிளங் குழந்தையின் முதல் அழுகுரல்

முதியவனின் இறுதி மூச்சு

ஒரே நொடியிற் கேட்கிறது

பிறப்பும் இறப்பும்

இடைவெளியற்ற வட்டத்தின்

இரு முனைகள்

-

என் தாத்தாவின் தாத்தா விதைத்த

மாமரத்தின் பழுத்த விதை

என் பேரன் பேத்தியின் கையில்

முளைவிடும் வரை

எத்தனை வட்டங்கள்

எத்தனை பிறப்புகள்

எத்தனை சாவுகள்

-

நேற்று இன்றாகி

இன்று நாளையாகி

நாளை மீண்டும் நேற்றாகும்போது

காலம் என்ற சக்கரத்தில்

நாம் அனைவரும்

அரைக்கப்படும் தானியங்கள்

-

வட்டத்தின் விளிம்பில் நின்று

உள்ளே எட்டிப் பார்க்கிறேன்

கருவறையில் துடிக்கும் சிசுவின்

இதயத்துடிப்பும்

மயானத்து வெடிமரத்தின்

இலையுதிர்வும்

ஒரே வட்டத்தின்

இரு பக்கங்கள்

-

மழைத்துளி விழும் குளத்தில்

வட்டம் வட்டமாய் பரவும் அலைகள் போல

ஒவ்வொரு துயரமும்

ஒவ்வொரு மகிழ்ச்சியும்

ஒவ்வொரு பிரிவும்

ஒவ்வொரு சேர்க்கையும்

வட்டமிட்டு வட்டமிட்டு

விரிந்து கொண்டே போகிறது

-

இந்த வட்டத்தின் மையப்புள்ளியில்

நான் ஒரு துரும்பு

என் பிறப்பும் இறப்பும்

என் கண்ணீரும் சிரிப்பும்

என் காதலும் வேதனையும்

என் கனவும் நினைவும்

எல்லாமே அந்த வட்டத்தின்

எல்லையற்ற சுழற்சியில்

கரைந்து போகும் புள்ளிகள்

-

ஆனால்...

வட்டம் மட்டும் நிலைத்திருக்கிறது

காலத்தின் கருக்குழியில்

கருவாகி பிறந்து இறந்து

மீண்டும் பிறக்கும்

முடிவற்ற பயணத்தின்

முதலும் முடிவும்,

வட்டம் கீறிய வழியிற் தான்

புதிராகக் கிடக்கிறது

வாழ்வின் உதிர்வும்

துளிர்ப்பும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக