செவ்வாய், 25 நவம்பர், 2025

இறப்பற்றவர்களுக்கு வயதில்லை..

உன் பிறந்தநாளில் 
வீரச்சாவு 
அழிவின்மையைப் பரிசளிக்கிறது 

நந்திக் கடல் மணலில்
நடந்த கால்கள் இப்போது இல்லை
ஆனால்  நீ தான் இன்னும் நடக்கிறாய்

விதைத்துச் சென்றாய்
நன்றி கெட்டவர்கள் நாம் 
இன்னும் அறுவடை செய்யவில்லை

பாதிப் பாலம் கட்டிவிட்டாய்
மீதி காற்றில் நிற்கிறது
காற்றில் நடக்கக் கற்றுக்கொள்கிறோம்

மரணத்திற்கும் பிறப்பிற்கும்
இடையே ஒரு கோடு
அதை நீ அழித்துவிட்டாய்

ஒவ்வொரு தாயின் கருவிலும்
நீ மீண்டும் உருவாகிறாய்
பிறக்காத குழந்தைகளின்
முதற் பெயர் நீ

கடைசித் தோட்டா 
உனை நோக்கி வந்தபோதில் 
உடன் நின்றவர்களுக்கும்
மக்களுக்கும்
என்ன சொல்ல  நினைத்திருப்பாய்..? 

அண்ணா..!
இன்று உன் பிறந்தநாள்
கண்முன்னே நீ இல்லை
ஆனாலும் இல்லாமையிலும் 
இன்னும் இருக்கிறாய்

மரணமற்றவர்களுக்கு வயதில்லை
நீ எப்போதுமே 
அந்த இறுதி நொடியில் 
உறைந்து நிற்கிறாய்..

வெள்ளி, 21 நவம்பர், 2025

வேரொடு சாய்ந்தனம்..

வென்றிடும் வினைத்திறன் வீழ்ந்தது மெய்யென
வெம்முயல் தோல்வியின் வேரொடு சாய்ந்தனம்,
நின்றிடும் உயிர்த்துடிப் பென்னவோ நெஞ்சினில்
நீள்பதிவாய் நிலைத்தது ஓர் நியதியே

குன்றிடு மரபினர் 
கூறிய கோழைமை 
கொல்லுயிர் கொள்கையென் றெண்ணமுள் ஊன்றியே
சென்றிடா துயிரினைச் சேர்த்துவைத் தாரென
சீவன்தான் நீளுது தேய்ந்துகொண் டேயுமே..

செவ்வாய், 18 நவம்பர், 2025

இதற்கெல்லாம் என்ன பதில்..

பல்லாயிரம் இதயங்கள்

ஒரே கனவுக்காகத் துடிப்பதை நிறுத்தின 

அவர்களின் கடைசி மூச்சில்

தமிழீழம் என்ற சொல் மிதந்தது.

-

இப்போது அந்த ஆன்மாக்கள்

வானத்தில் அலைகின்றன 

பதில் இல்லாத கேள்விகளாக

முடிவில்லாத ஏக்கங்களாக

-

அவர்களின் எலும்புகளில்

இன்னமும் கூட 

விடுதலையின் பாடல்கள் 

உறங்குகின்றன,

ஆனால் வரலாற்றை 

எழுதுவது என்னமோ 

வென்றவர்களின் பேனா மட்டுமே

-

இந்தப் பிரபஞ்சத்தில்

நியாயம் ஓர் அனாதைக் குழந்தை,

பலவான்களின் காலடியில்

அழுது கொண்டிருக்கிறது 

-

ஆன்மபலம் என்பது

காற்றில் எழுதப்பட்ட கவிதை,

புயல் வரும்போது

அது சிதறி மறைந்து விடுகிறது

-

உண்மையின் வாள்

தந்திரத்தின் கயிற்றால் 

கட்டப்பட்டுள்ளது,

நேர்மையின் கேடயம்

சூழ்ச்சியின் அம்புகளால் 

துளைக்கப்பட்டுள்ளது

-

நாங்கள் இருக்கிறோம்

எங்கள் இல்லாமையில்,

நாங்கள் வாழ்கிறோம்

எங்கள் மரணத்தில்

-

எங்கள் வீழ்ச்சி என்பது 

வரலாற்றின் இசையில்

அடுத்த இசைக்குறிப்புக்கு முன்னர்

ஓர் இடைநிறுத்தம் மட்டுமேயென 

எண்ணுதலன்றி 

ஆற்றிக்கொள்ள கைவசம் 

எம்மிடம் வேறு 

மாற்று வழிகள் இல்லை

-

எங்களால் இன்னும் 

நம்ப முடியாமல் இருக்கின்ற 

கேள்வி ஒன்று தான் 

இந்த தியாகங்களுக்கெல்லாம் 

என்ன பொருள்? 

இந்த இழப்புகளுக்கெல்லாம் 

என்ன பதில்? 

ஞாயிறு, 16 நவம்பர், 2025

விளக்கின் அமைதி மொழி..

இருளின் கருவறையில் தனித்து நிற்கும் சுடரே,

நீ என் கண்களுக்கு மட்டுமல்ல, 

என் உயிரின் சாளரங்களுக்கும் வெளிச்சம்.

-

காலம் என்னும் கடலில் மிதக்கும் தீவுபோல,

உன் ஒளிவட்டம் என்னை அணைத்துக் கொள்கிறது

வெறுமையின் விளிம்பில் நின்று 

நீ காட்டும் வழியில் நடக்கிறேன்.

-

கற்பனையின் கரைகளில் உதிரும்

உன் ஒளித்துளிகள், 

என் நினைவுகளின்

நெற்றியில் பொட்டிட்டு அழகுபார்க்கின்றன,

ஒவ்வொரு இரவும் உன்னோடு

புதிய கதை பிறக்கிறது.

-

கருங்காட்டு நெருப்பின் குரலில்,

எரிமலையின் வேதனை சுமந்து பேசுகிறாய்.

"என் சுடர் என் நெஞ்சையே உருக்குகிறது" என

வார்த்தைகள் கனலாய் உதிர்கின்றன.

-

நிலாக்களின் கவிதையில்,

இரவு தன் இமைகளை மூடும் வேளையில்

உன் ஒளி பாடும் ரகசியப் பாடல்கள்

கனவுகளின் பறவைகள் உன் சுடரில் மிதக்கின்றன.

-

காட்டின் அடரிருளில் 

மறைந்து போன 

தொன்மைக் கதைகளை அகழ்ந்தெடுக்கிறாய்

உன் வெளிச்சத்தில் மிதக்கிறது

தொலைந்துபோன வீரர்களின் ஆயுதங்கள்

புதைந்துபோன பண்டைய நாட்களின்

பச்சைப் புல்வெளிகள்.

-

காற்றின் கரங்கள் உன்னை

அணைக்க முயலும்போதெல்லாம்

நீ அசைந்தாடி மீண்டும் எழுகிறாய், 

உன் துணிவில் தெரிகிறது

என் மூதாதையர் விட்டுச்சென்ற

அழியாத ஓர்மத்தின் சாயல்

-

இப்போது நீ என் கைகளில்

ஒரு குழந்தையின் இதயம்போல் துடிக்கிறாய்,

உன் வெளிச்சத்தில் நான் காண்கிறேன்

இன்னும் பிறக்காத காலத்தின் முகத்தை

இன்னும் சொல்லாத கவிதைகளின் முதல் வரிகளை

இன்னும் தொலைந்துபோகாத நம்பிக்கைகளின்

பச்சைக் கொடிகளை,

-

விளக்கே, நீ வெறும் ஒளியல்ல,

நீ என் தனிமையின் துணை

என் போராட்டங்களின் சாட்சி

என் கனவுகளின் காவலன்

என் வாழ்வின் விடியல்

-

இப்போது உன் சுடரில்

முற்காலமும் பிற்காலமும்

ஒரே நேரத்தில் மிதக்கின்றன

நீ எரியும் ஒவ்வொரு கணமும்

புதிய வரலாறு தன்னை எழுதுகிறது.. 

புதன், 12 நவம்பர், 2025

விடத்தின் நேர்மை..


கரிய மணிமுத்தாய் தெளிவாய்

கண்பார்க்க என் நாவில் வை

நஞ்சை 

பாலின் வெண்மையில் 

அதனை மறைக்காதே

ஏனெனில் 

அத்தனை நம்பிக்கையுடன் 

அதனை நான் அருந்தும் போது

நன்றி பொழியும் என் கண்கள்

உன்னைச் சங்கடப்படுத்தலாம் 

நான் ஒரு திறந்த காயம்

நம்பிக்கை என்னும் 

பெருநோய் பிடித்தவன் 

நீ கொடுத்த ஒவ்வொரு 

துளியையும் தேனாய் நுகர்வேன்

ஆதலால் 

இது விடம் என்று சொல்

இருளை இருளாகவே கொடு

-

நஞ்சு நஞ்சாகவே இருக்கட்டும்

இறங்கும் போதே 

உதடுகளில் எரிந்து 

தொண்டை பிளக்கட்டும் 

நான் கண்களைத் திறந்தபடி குடிப்பேன்

மரணத்தை நேர்மையாகப்

பருகவே விருப்புகிறேன் 

உன் பொய்யை விட 

உண்மை என்னைக் கொல்வதையே

அதிகம் விரும்புகிறேன் 

ஏனெனில் நம்பிக்கை என்பது

என் இரத்தத்தில் ஓடும் ஆறு

அதனை மாசுபடுத்தாதே

-

தூய்மையாகக் கொல் 

தூய்மையாகச் செல்..


வியாழன், 6 நவம்பர், 2025

நிலையாமையின் புவியியல்..


பாறையின் மேல் விழும் பனித்துளி 

தன் நிலைகுத்தச்சை இழக்கிறது

பொருட்களின் புவியீர்ப்புக் கோட்பாடு 

பரிதவிக்கிறது,

இந்த இடைவெளியில்

சாய்வுமானியை நான் கையில் எடுக்கிறேன்  

குமிழி நடுங்குகிறது நினைவுகளின் பரப்பில்

-

வரலாற்றின் மிக நீண்ட

கடற்கரைப் புதைகுழிகளில்

நிலத்தடி நீரின் ஆதிமூலம் போல 

மூச்சுக் காற்று புதைந்திருக்கிறது 

வரலாற்றின் மண்ணில் 

கான மயிலின் தூவிகள் 

பழங்கால வேட்டையாடிகளின் 

அம்புகளாய் உதிர்கின்றன 

-

பனையின் வேர்கள் தொடர்கின்றன 

பூமியின் நடுவரை

மூதாதையர்களின் எலும்புகளை 

வீழாதிருத்தலின் ஆதாரமாய்

பற்றிக் கொள்கின்றன 

-

தோண்டும்போது கிடைக்கும் 

பழைய காலத்து முகத்தில் தெரிகிறது 

காலத்தின் கருப்பு வெளிச்சம்

பண்டைய எழுத்துகளைப் படிப்பது போல 

அந்த முகத்தின் மடிப்புகளை 

கைகளால் தடவுகிறேன்

-

களிறு சென்ற பாதச்சுவடுகளில் 

தேங்கியிருக்கிறது மழைநீர்

அந்தச் சிறு குளங்களில் 

தொல்பொருட் கண்ணாடி போல 

வானம் பிரதிபலிக்கிறது 

-

இப்போது நான் அறிகிறேன் 

இந்த மண்ணின் அடுக்குகளை,

ஒவ்வொரு அடுக்கிலும் புதைந்திருக்கிறது 

எங்களின் மொழியும், காலமும், வாழ்வும் 

சொந்த வேர்களைத் தேடி 

தோண்டிக் கொண்டே செல்கிறேன் 

-

பூமியின் நிழலில் சிக்கி 

திங்கள் கறுக்கிறது 

இந்த இருள்

ஒரு தொல்லியல் அகழ்வாய்வு

நான் கையில் பிடித்திருக்கும் 

சாய்வுமானியின் குமிழி

மெல்ல அசைகிறது 

காலத்தின் அனைத்து திசைகளிலும்

-

துன்பமும் இன்பமும் இரண்டு துருவங்கள்

அவற்றுக்கிடையே ஊசலாடுகிறது வாழ்க்கை 

சாய்வுமானியின் குமிழி போல

அந்த நடுநிலைக் கோட்டை,

பூமியின் ஈர்ப்பு மையத்தை 

நான் தேடுகிறேன்

-

எல்லாமே சாய்ந்திருக்கிறது 

ஏதோ ஒரு கோணத்தில்,

ஆனால் இந்தச் சாய்வுதான் 

பூமியின் சுழற்சியை உருவாக்குகிறது 

இதில் நிலைகுத்தென்பது ஒரு கனவு 

சமநிலை என்பது 

இன்னும் நடக்க வேண்டிய 

மிக நீண்ட பயணம்..