Sunday, 18 May 2025

விடுதலை மறவன்..

நந்திநீர்க் கானல் நளிகடல் பரப்பில்

கந்துடை வேழம் கதறிய களத்து

பொங்குநீர்ப் புணரி பொருகளம் ஆக

மறம்புனை வேந்தன் மாண்புடன் நிமிர்ந்து

நெடுவரை நின்ற நிமிர்ந்தோன் ஆகி

சுடுகணை ஏந்திக் களம்புகு தானை

அடல்வலி மிக்க அஞ்சா உரத்தின்

படைபல சூழப் பகலவன் நின்றான்

-

கருங்கடல் முழக்கம் கலந்தது வானில்

தீக்கணை மாரி சிதறின பகைவர்

எரிபடை வீசிச் சூழ்ந்திடும் போதும்

கடற்புனல் பாய்ந்து கைவிடா நின்றான்

-

புலவுநீர்க் கரையில் புலியெனப் பாய்ந்து

நிலவுநீர்க் குருதி நிறைந்தவெம் மார்பில்

சுடுகணை தீர்ந்தும் களம்விடான் ஆகி

தோழரும் தானும் துயர்கொள வீழ்ந்தான்

-

கணைமழை பொழிந்து களம்விடா நின்று

புணர்கடல் ஓதம் பொருகளம் ஆக்கி

புன்னை நீழல் பொருதுவீழ்ந் தனனே

மின்னுயிர் போக மேதகு தலைவன்

-

தண்கடல் அலையின் தாழ்குரல் கேட்டு

மண்கொண்ட வீரர் மயங்கினர் நின்று

விண்ணுற எழுந்தான் விடுதலை மறவன்

எண்ணவே முடியா திடிந்தனர் மாக்கள்

-

நீலநீர்ப் பரப்பின் நெடுங்கரை தன்னில்

காலமும் கடந்து கனன்றெழு புகழோன்

ஈழமண் காக்க எழுந்திட்ட போரில்

கணைமழை தீர்ந்து களத்தினில் வீழ்ந்த

பாலைசூழ் நிலமும் பரந்துள காவும்

நீலமா கடலும் நினைவுற நிற்கும்

மாலையம் பொழுதில் மறவனை நினைந்து

காலங்கள் தோறும் கண்ணுநீர் சொரியும்..

Saturday, 17 May 2025

முள்ளிவாய்க்கால் படுகளம்..

திரைகடல் முழங்கும் திண்மணற் பரப்பில்

கார்முகில் கவிந்த கானல் நெடுநிலை

சுடுபடு மறவர் யாக்கைகள் மடிந்து

கணைநுதி சிதறிக் கருஞ்சுடரெழுந்து

களத்தொடு கலவா களமகள் செந்நீர்

விசும்பொடு கலந்த வெம்மையின் சீற்றம்

நோக்கினென் திரும்பி நொந்தனென் நின்றே

-

கழிமுக நெய்தல் கதிர்விரி காலை

நீல்நிற வானத்து நேர்கதிர் பரந்து

அகல்வயல் ஊர்ந்த அந்திப் பொழுதில்

தானைகள் சூழத் தாக்குபடை வந்தென

கரையினில் மலிந்த களிற்றுமுக மறவர்

நுண்கூந்தல் அவிழ்ந்து நெக்குநெக்கு உருகி

மென்னடை மகளிர் அயர்வுற்று நின்றார்

-

முள்ளிதழ் அரும்பி முகிழ்த்த பொழுதின்

திரைநுரை பொங்கித் திரண்டுடல் தழுவி

நீர்சொரிந்து நைந்து நிலைகலங்கி நின்று

பொருள்புரி காட்டும் புலவுநா றுடலம்

-

பொருகளத்து எதிர்ந்த பொலிவுறு மறவர்

பகைப்புலம் புகுந்து பரிவின்றிப் பொருது

கானல் காக்கும் கடற்புள் போலவே

பிறர்க்கொடை படாஅப் பெருமித நெஞ்சொடு

உயிர்திறம் கொடாஅ உரனுடை யாளர்

-

வன்னிமர வடுப்புண் ஆறா தாங்கு

அரவுதின் றனைய அழல்புண் போலவே

களத்துறு வடுக்கள் கழிதல் இலவே

நெஞ்சுறு துயரம் நீங்குதல் இன்றி

வான்பெயல் பொழியும் வளநீர் போல

தளர்வற எழுந்து தலைப்பெய்து மீளும்

-

எஃகுடை வலத்தர் இயங்குறு களத்தில்

யாண்டுபல கழியினும் எக்கர் தந்த

மாண்புறு மறவர் மரபுவழி நின்று

தமிழியல் காக்கும் தகைசால் உளமே..

Friday, 9 May 2025

விடுதலையின் விலை..

கடலின் நுரையைப் போல

போர்கள் வந்து போகின்றன,

ஆனால் அலைகளின் ஆழத்தைப் போல

துயரம் நிலைத்திருக்கிறது.

-

நான் பார்த்தேன் மண்ணின் மகன்களே !

உங்கள் இரத்தம் காய்ந்த களங்களில்

புல் முளைக்கிறது,

உங்கள் எலும்புகளில் இருந்து

வெளிப்படும் வெளிச்சத்தில்

நாட்டின் புதிய கதைகள் எழுதப்படுகின்றன.

-

மரணித்த வீரர்களின் தாய்மார்களே

உங்கள் கருவறைகள்

ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும்

உங்கள் கைகளில் இருக்கும் வெற்றிடத்தை

எந்த கோட்டையும், எந்த சிலையும்

எந்த பாடலும் நிரப்ப முடியுமா?

-

இப்போது அரிசிப் பானையில்

சாம்பல் மணம்,

அவன் படுத்த படுக்கையில்

தூசியின் மெளனம்,

அவள் தொட்ட வேப்பமரத்தில்

இன்னும் ஒலிக்கிறது

திரும்பி வருவேன் என்ற

வார்த்தையின் எதிரொலி

-

மன்னர்கள் மாறலாம், கொடிகள் மாறலாம்,

ஆனால் இழப்பு நிகழ்ந்த

ஒவ்வொரு வீட்டிலும் காத்திருக்கிறது

பெயரிடப்படாத, முடிவற்ற,

நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்

-

நான் உணர்கிறேன்

தேசத்தின் விடுதலைக்கான அந்த விலை

வீரனின் மனைவியின் கண்ணீரிலும்,

மகனின் பெயரை உச்சரிக்காத

தந்தையின் உதடுகளிலும்,

உணர்வை இன்னமும்

வெளிச் சொல்லத் தெரியாத

குழந்தைகளில் பெருமூச்சுகளிலும்

காத்திருப்பின் ஊமையான

வலியில் உறைந்திருக்கிறது.

-

போர்கள் முடிவடையும்,

ஆனால் காயங்கள் ஒருபோதும்

ஆறுவதில்லை,

மண்ணின் மடியில் வீழ்ந்த

மனிதனின் இடத்தை

எந்த வெற்றியாலும் நிரப்பவிட முடியாது.

ஓ.. இதுதான் விடுதலையின் விலையா?

-

ஆனால் இப்போது நாம்

கற்றுக்கொண்டே ஆகவேண்டும்

எப்படி வெற்றிடத்துடன் வாழ்வது

எப்படி இல்லாமையின் இருப்புடன்

இணைந்திருப்பது

எப்படி எல்லாவற்றையும்

மறக்கப் பழகும் மூளையைப் பெறுவது

அல்லது நினைவுகள் எதுவும் தங்காத

பைத்திய நிலையை அடைவது..

Tuesday, 6 May 2025

மிக நீண்ட கொல்களம்..

அந்தக் கடற்கரையில் இரத்தம் உப்பாகிறது

சிதைந்த உடல்களின்

சாம்பல்கள் அலைகளாக எழுகின்றன.

நான் கேட்கிறேன்

இந்தப் பூமி இன்னும்

எத்தனை துயரங்களைத்தான் தாங்கும்?

-

பல்லாயிரம் உடலங்கள்

உலகின் நீண்ட கொல்களத்தில்

கேட்பாரற்றுச் சிதறிக் கிடந்ததை

எப்படி மறக்க முடியும்?

-

கருவறையில் கிழிக்கப்பட்ட குழந்தைகளின்

முடிவடையாத கனவுகளை

யார் பாடுவார் ?

மிதிபட்ட பூக்களின் வாசனையை

யார் நுகர்வார் ?

முள்ளிவாய்க்காலின் மணலில்

என் இனத்தின் பெயரை

யார் மீண்டும் எழுதுவார் ?

-

உலகத்தின் அமைதி

என் மக்களின் சாவில் உறங்குகிறது

அவர்களின் கண்களில்

கடைசி வெளிச்சம் இன்னும் எரிகிறது

மரணம் என்ற பறவை

எம் வானத்தை மூடியது

எம்முடைய கிழக்கில்

நீதி என்ற கதிரவன்

இன்றுவரை எழவில்லை

-

கொலையாளிகளுக்கு

வாக்களிக்க சொல்கிறார்கள்

அவர்களின் கரங்களில்

இன்னும் எம் குருதி உலர்ந்திருக்கிறது

இனவெறியின் கூத்தில்

எம் ஈழம் சிதைந்தது

இப்போது அதே கூத்தாடிகள்

நீதி பேசுகிறார்கள்

-

எனது மக்களின் தோல் உரிக்கப்பட்டது

அவர்களின் சதை வெட்டப்பட்டது

அவர்களின் எலும்புகள் உடைக்கப்பட்டது

ஆனால் நினைவு,

நினைவை உடைக்க முடியாது.

-

இன்று தமிழீழம்

ஒரு கவிதையாக வாழ்கிறது

ஒவ்வொரு சொல்லும் ஒரு சாட்சி

ஒவ்வொரு வரியும் ஒரு வடு

ஒவ்வொரு பாடலும் ஒரு போராட்டம்..

Friday, 2 May 2025

விதியெனச் சொல்வதா..

உன் கண்களில்

காலம் தேங்கி நிற்கிறது

நினைவுகளின் ஆழத்தில்

முகங்கள் மறைகின்றன.

-

வாழ்க்கை என்ற நதியில்

சந்திக்கும் கரைகள் நாம்

சிறிது நேரம் தொடும்

அலைகள் போல் உறவுகள்.

விதியா தற்செயலா இந்த சந்திப்புகள்?

-

யாரோ ஒருவர் வருகிறார்

யாரோ ஒருவர் போகிறார்

இடைவெளியில் வாழ்க்கை ஓடுகிறது

மணல் கடிகாரத்தின் நுண்துகள்கள் போல

-

தேடாத போதும் காண நேர்கிறது

தேடியும் காணாமல் போகிறது

நட்சத்திரங்கள்

ஒருமுறை தொடும் பாதைகள் போல

சில உறவுகள்

ஒருமுறை மட்டுமே சந்திக்கின்றன

-

முன்னரே எழுதப்பட்ட கதை அல்ல இது

ஆனால் தற்செயலின் விளையாட்டும் அல்ல

கடலில் கலக்கும் ஆறுகள் போல

நாம் யாரைச் சந்திப்போம் என்பது

இடையில் வந்த

ஏதோவோர் ஏற்பாடு தானோ..?

-

இன்று என் வாழ்வில் நீ இருக்கிறாய்,

நாளை உன் நினைவு மட்டுமே மிஞ்சலாம்

ஆனால் நம் சந்திப்பின் நறுமணம்

காலத்தின் கையில்

பொறிக்கப்பட்ட ஒரு கவிதையாய்

நாசிக்குள் ஒழிந்து கிடக்கும்

-

விதியென்று நம்பினால்

தேடுதல் தேவையில்லை,

தற்செயலென்று புரிந்தால்

ஒவ்வொரு சந்திப்பும் அற்புதம்.

-

இவ்வுலகம் ஆழ்ந்தகன்ற பெருங்கடல்

அதில் சிதறித் தெறிக்கும்

பெயரறியா துளிகள் நாம்

ஒருமுறை தன்னை

ஆரத் தழுவும் அலைகளை

மீண்டும் சந்திக்குமா கரை..?