ஏதிலாளனே..!
நிலைகொள்ளாச் சொற்களுக்கிடையே
கடந்து செல்வோயே
இதனை எழுதுக
எம் உடலென்பது
இம் மண்ணின் நுண்துகள்
எம் உயிர்ப்பென்பது
இக் கடற்காற்றின் சீற்றம்
யார் நல்கியது இவ்வுரிமை
யாரும் ஈந்ததல்ல இது
கருவறைக் குருதியோடு கலந்துயிர்த்து
தொப்பூள் கொடியால்
இந்நிலத்துள் வேரூன்றி
பிறப்பொடு வந்த பெரும்பொருள்
வேரூன்றிய பனையின் செம்மாப்பில்
கருகிய மடல் சுமந்த
தீயெனக் கொதிக்கிறது
எம் முன்னோர் புதைத்த
ஈமப் பெருங்கற்கள்
இந்நிலத்தின் உரிமையைப்
பேசாப் பெருமொழியால்
எக்காலத்தும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்
அமைதி என்பது
எம் நாவறுந்த நிலையும் அன்று
அஃதெம்
புதைக்கப்பட்ட சாம்பலினின்று
மீளத் துளிர்க்கும் ஆதி விதையின்
ஆழத்து அடக்கம்
எழுதுக..!
நாங்கள் நிலமற்ற நிழல்கள் அல்லர்
சிதைக்கப்பட்ட நிலத்தின்
மாறாச் சான்றுகள்
எம் குருதி தோய்ந்த இந்நிலவரைபடம்
கடலலைகள் தீண்டத் தீண்ட
கூர்மைபெறும் பெரும்வாள்
எங்கள் விடுதலை என்பது
வேறெங்கும் உளதன்று
அதுவே எம்மூச்சின் முதலசைவு
எம் வாழ்வின்
முடிவிலாத் தொடர்ச்சி..