எங்களின் கண்ணீர்
உப்புச் சுவை கொண்டதல்ல
அது எங்கள் நிலத்தின்
ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும்
முறிக்கப்பட்ட பனையின்
ஏக்கத்துவர்ப்புச் சுவை கொண்டது,
-
நீங்கள் கேட்கிறீர்கள்
எல்லோரும் விடைபெற்ற பின்
இந்தப் புழுதியில்
எதை விதைக்கிறீர்கள் என்று,
நாங்கள் விதைகளை விதைப்பதில்லை
மண்ணில் விழுந்த
எங்களின் பெயர்களை
எரிக்கப்பட்ட தேசக்கனவின்
எஞ்சிய சாம்பலை
தாயின் கருப்பைக்குள்
உறங்கிக் கொண்டிருக்கும்
நாளைய விடியலை
கண்ணீரை நீராகக் கொண்டு
விதைத்துக் கொண்டிருக்கிறோம்
-
நிலம் ஒரு வரைபடம் அல்ல
அது எங்களின் தோல்
ஒரு நாள்
எங்களின் துயரத்தின் உப்பிலிருந்து
ஒரு பேரொளி உதிக்கும்
அன்று,
நிலம் தன் மூச்சை
ஆழமாக இழுத்துவிடும்
எங்கள் அறுவடை என்பது
நெல்மணிகள் அல்ல
அது துண்டிக்கப்பட்ட நாக்குகள் பாடும்
விடுதலையின் பாடல்
உழவனுக்கும் நிலத்திற்குமான
உறவல்ல இது,
உயிருக்கும் அதன்
கடைசித் துளிக்கும் இடையிலான
மகா அறுவடை…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக