வியாழன், 8 ஜனவரி, 2026

ஏலோர் எம்பாவாய்..


காரிருள் போழ்ந்து கதிரவன் வந்துதித்தான்
போர்முரசம் கொட்டப் புவியெல்லாம் கேட்குது காண்
பார்முழுதும் ஆண்ட பழங்குடிநாம், இன்றோ
வேரிழந்த கொம்பாய் வெம்பியே நிற்கின்றோம்
ஊரறிய வாழ்ந்த உயர்வை நாம் மீட்டெடுக்க
பேரறிவும் வீறாப்பும் பேணித் துயிலெழாய்
வார்செறி கூந்தல் வாரி முடித்து நீ
ஏருடைய தேசம் எய்திடாய்  
எம்பாவாய்…

ஆழி சூழ் வையகத்தில் ஆளுரிமை அற்றோமாய்
கூலிக்கும் கீழாய்க் குன்றிப்போய் நிற்கின்றோம் 
வாழி எம் வையகம் வாராய் எம் விடுதலை 
ஊழித் தீ போலேநீ உற்று எழுந்து வா 
தாழ்விலா எம்இனத்தின் தாகம் தணித்திட
யாழின் இசைபோல இன்பம் பொழிந்திட
கோழைமை நீக்கி எமைக் காக்க வல்லதோர்
சூழல் அமைத்திடத் தோன்றாய் நீ  
எம்பாவாய்…

மானம் பெரிதென்று வாழ்ந்த மறக்குடியீர்
தானம் இழந்ததோர் தாயில்லாக் கன்றுபோல்
ஈனப் பிறவியாய் இங்கிருக்கப் போமோ நாம் ? 
வானம் பிளக்கவே வன்முரசம் கொட்டாதோ
தேனத் தமிழ்ப்பண் திசையெங்கும் கேட்காதோ
ஊனம் தவிர்த்தே உயர்ந்திட வாரீரோ
ஞானத் தலைவன் நல்வழி காட்டவே
யானை பல்கொண்டெழும் ஏலோர்  
எம்பாவாய்..

பூங்குழல் மங்கையீர் பொழுது புலர்ந்ததுகாண்
ஈங்கு நம் இல்லம் இடிபட்டுக் கிடக்கையிலே
தேங்கிய கண்ணீரில் திக்கற்று நிற்போமோ
ஓங்கிய குன்றில் ஒருகொடி ஏறாதோ
தாங்கிய தாயெம் தமிழ்நிலம் மீளாதோ
ஏங்கிய நெஞ்சம் இனிது இளைப்பாற
பாங்குடை நன்னாடு படைத்திட வாரீரோ 
தாங்கரும் துயர் தீர்க்கத் தாராய்  
எம்பாவாய்

புள்ளினம் ஆர்த்தன பொழுது புலர்ந்தது காண் 
அள்ளல் படுகுழியில் ஆழ்ந்து கிடக்கையிலே
விள்ளத் தெரியா விழுமங்கள் போனதென்ன
கள்ளர் கவர்ந்த எம் காணி நிலம் மீட்க
வெள்ளமெனத் திரண்டு வீறுடன் வாரீரோ
பள்ளம் மேடெலாம் பார்த்துக் களைந்தெறிய
உள்ளம் ஒருங்கே உறுதிகொள் வாரீரோ
எல்லை வகுப்போம்நாம் ஏலோர் 
எம்பாவாய்….