எனது நிலம்
எரிக்கப்பட்ட பனை ஓலையின்
கடைசிச் சாம்பலில் எழுதிய
நிறைவேறாத ஓர் உயில்
நான் அந்த நிலத்தின்
ஒரு துளி வியர்வை
அதன் விடுதலையை
என் நரம்புகளின் இசையாக மாற்றினேன்
ஆனால்,
இரும்புக் கைகள் கொண்ட
வல்லாதிக்கத்தின் கருப்புப் பற்கள்
என் வீட்டின் வாசலில் பூத்திருந்த
ஒவ்வொரு பூவையும் கடித்துக் குதறின
தோல்வி
என் முதுகில் விழுப்புண்களாகச்
செதுக்கப் பட்டிருக்கின்றன
அவை காயங்களல்ல
சொந்த மண்ணின் வரைபடத்தை
என் உடலில்
வரைந்திருக்கும் கோடுகள்
இன்று நான்
மேற்கின் சாம்பல் நிறக் குளிரில்
வேரற்ற ஒரு பாறையைப் போலக் கிடக்கிறேன்
இந்த மண்ணின் பனி
என் கண்களில்
வெள்ளை நிறக் குருதி போலப் படிகிறது
கதிரவன்
இங்கே ஓர் அந்நியனைப் போல
சினந்து பார்க்கிறான்,
காற்றோ என் மொழியைப் புரியாமல்
சாளரங்களின் கண்ணாடிகளில் மோதித்
தற்கொலை செய்கிறது
தனிமை என்பது
பல கோடி மனிதர்கள் நடுவே
எம் மொழியைப் பேச இடமில்லாமல்
உறைந்த பனியில் செருப்பின்றி நடப்பது
குடிபெயர்ந்த பறவைகளுக்குக் கூட
ஓர் கூடு உண்டு ஆனால்
நாடு பெயர்ந்தவனுக்கு
வானம் கூட ஒரு சிறைச்சாலை தான்
தமிழர் கடலின்
அலையடித்துப் பழகிய
என் செவிகளுக்குள்
இப்போது பனியின் மௌனம்
ஈயத்தை உருக்கி ஊற்றுகிறது
நாடிழந்து போதல் என்பது
வெறும் வீட்டை இழப்பதல்ல
நம் உடலின் திசுக்களிலிருந்து
நிலத்தின் தாதுக்களைப் பிடுங்கி எறிவது
அல்லது நம்மை நாமே
காலத்தின் வெளியில்
தொலைத்துவிட்டுத் தேடுவது
போராடித் தோற்றவனின் வலியும்
புலம்பெயர்ந்து மடிபவனின் ஏக்கமும்
இந்த உலகத்திற்குப் புரியப்போவதில்லை
நான் இங்கே
ஒரு கல்லாக மாறிக்கொண்டிருக்கிறேன்
ஆனால் அந்தப் பாரம்
என் நிலத்தின் பாரமல்ல
திரும்பிப் போக முடியாத
ஒரு நீண்ட பாதையின் பாரம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக