நரை தட்டிய வானத்தின் கீழே
உப்புக் காற்றின் ஈரம் படிந்த
என் சாளரத்தின் வழியே பார்க்கிறேன்
அங்கே
ஒரு சிறிய இறகு
தன் பறவையைத் தொலைத்துவிட்டு
வெறும் காற்றின் கைகளை
நம்பிக்கொண்டு மிதக்கிறது
அது ஒரு சாதாரண நிகழ்வுதான்,
-
ஆனால்
கரையைத் தேடாத ஒரு மாலுமியைப் போல
அது திசைகளைப் பற்றிக்
கவலை கொள்வதாய் தெரியவில்லை
கடலில் தொலைந்த பழைய கப்பல்களின்
சிதைந்த பலகையைப் போல
அது அந்தரத்தில் அலை பாய்கிறது
-
நாம் எல்லோரும்
நினைத்துக் கொண்டிருக்கிறோம்
பறவை என்பதுதான் வாழ்வு
இறகு என்பது வெறும் ‘எச்சம்’ என்று,
இல்லை
உண்மையில் அந்தப் பறவை என்பது
சிறைப்பட்ட ஒரு கூடு மட்டுமே
அந்தப் பறவை
என்றோ இறந்து போயிருக்கலாம்
ஆனால்
பிரிந்த இந்த இறகில் தான்
இன்னும் அந்தப் பறத்தலின் ஆன்மா
உயிர்ப்போடு துடித்துக்கொண்டிருக்கிறது,
-
பயணங்கள் தான்
நம்மை உருவாக்குகின்றன.
சேருமிடம் என்பது ஒரு பொய்
துறைமுகங்கள் என்பவை
சற்றே இளைப்பாறும்
தங்கும் விடுதிகள் மட்டுமே
-
உண்மையான வாழ்வு என்பது
நடுக்கடலில்
திசைகள் அறுந்த அந்த நொடிகள் எழுதும்
வரைபடம் இல்லாத
பெருவெளியிற் தான் இருக்கிறது
-
அந்த இறகு இப்போது
தான் மிதக்கும் வெளியெங்கும்
இப்படி எழுதுகிறது..
‘நான் எங்கும் போகவில்லை
நான் எங்கும் தங்கவும் இல்லை’
காற்றாகவே ஆகி விட்டேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக