சனி, 23 ஆகஸ்ட், 2025

பாவங்கள் இரெத்தத்தால் கழுவப்படும்..

வாக்குச் சீட்டு என்பது

அடிமையின் கனவில் தோன்றும் 

பறக்க முடியாத சிறகு,

சனநாயகம் என்று சொல்லி

புலியின் நகத்தை வெட்டுகிறார்கள், 

பற்களைப் பிடுங்குகிறார்கள்,

இதோ, நீ இப்போது சுதந்திரமானவன் என்கிறார்கள்.

புலி புலியாகவே இருக்க வேண்டும்

காட்டின் நினைவுகளோடு,

இரத்தத்தின் நினைவுகளோடு,

போரின் நினைவுகளோடு.

அவர்கள் சொல்கிறார்கள் 

"வா, பசுவாக மாறு, 

புல்லை மேய், மணியின் சத்தத்திற்கு தலையசை."

ஆனால் விடுதலை பெற்ற தேசங்கள் எதுவுமே  

வாக்குச் சீட்டால் அதனை அடையவில்லை 

அவர்கள் தங்கள் 

நரம்புகளையும், எலும்புகளையும்,

தசைகளையும், உயிரையும் பிழிந்து தான்

அடிக்கல்லை நட்டார்கள்.

தேர்தற் பெட்டி

அது எங்கள் தொட்டில் அல்ல,

கல்லறையும் அல்ல, 

அது வெறும் மாயை கண்ணாடியில்

சுதந்திரம் போற் தெரியும் 

இன விழிப்பை விழுங்கும் கருந்துளை

விடுதலைக்கு எப்போதும்

குறுக்கு வழி கிடையாது, 

சனநாயகம் என்ற மாயப்பட்டுப்பாதை

ஒருபோதும் உன்னை 

அங்கே இட்டுச் செல்லாது.

இனவிடுதலை எனில்

இருப்பது வெறும் இரத்தம் தோய்ந்த பாதை, 

நெருப்பு எரியும் பாதை, 

இரவும் பகலும் இல்லாத பாதை

அவர்கள் கேட்கிறார்கள்

ஏன் வன்முறை? 

நாம் திரும்ப கேட்கிறோம் 

ஏன் அடிமைத்தனம்? 

புலி பசுவாக மாறினால் 

அது இறந்து விட்டது என்று அர்த்தம். 

போர்க்குணம் தான் 

எங்கள் மூச்சு, எங்கள் நாடி, 

எமக்கிருக்கும் கடைசி வழி

ஒவ்வொரு வாக்குச் சீட்டும் 

ஒரு சரணடைதல் ஒப்பந்தம்,

ஒவ்வொரு தேர்தலும் 

ஒரு மறதியின் விழா

நினைவில் கொள்  

விடுதலை என்பது கேட்டு வாங்குவது அல்ல, 

பறித்தெடுப்பது, 

பற்களால், நகங்களால், உயிரால்

புலி புலியாகவே இருக்கட்டும்

காடு திரும்ப வரும் வரை, 

மழை திரும்ப வரும் வரை, 

நாம் திரும்ப வரும் வரை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக